Namvazhvu
குடந்தை ஞானி உணவு வழிமுறைகள் ஐ.நா. கூட்டத்தில் கர்தினால் டர்கசன்
Friday, 22 Oct 2021 05:28 am
Namvazhvu

Namvazhvu

தேவைக்கும் அதிகமாக இயற்கை வளங்களை வீணாக்குதல், உருவாக்கப்பட்ட உணவை வீணடித்தல் ஆகிய தவறுகளை நாம் எவ்வளவு தூரம் அதிகரித்துள்ளோம் என்பதை, கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் கூடுதலாகவே உணர்ந்துள்ளோம் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், பன்னாட்டுக் கூட்டமொன்றில் கூறினார்.

ஐ.நா. நிறுவனத்தின் பல்வேறு அங்கங்களாக செயலாற்றும், உணவு மற்றும் வேளாண் நிறுவனமான FAO, வேளாண் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள பன்னாட்டு நிதியமைப்பான IFAD, மற்றும், உலக உணவு திட்டம் எனப்படும் WFP ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து, அக்டோபர் 12 செவ்வாயன்று நடத்திய இணையவழி மெய்நிகர் கூட்டத்தில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

இவ்வுலகை தற்போது சூழ்ந்துள்ள பெருந்தொற்று, நாம் அனைவரும் எவ்வாறு ஒருவர் ஒருவரோடு தொடர்புடையவர்கள் என்பதை தெளிவாக உணர்த்திவருகிறது என்று, தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்ட கர்தினால் டர்க்சன் அவர்கள், இன்று உலகை வதைத்துவரும் பட்டினியை, மோதல்கள், பெருந்தொற்று, மற்றும், காலநிலை மாற்றம் என்ற மூன்று காரணிகளால் சிந்திக்கலாம் என்று எடுத்துரைத்தார்.

இன்று உலகில் வாழும் அனைவருக்கும் தேவையான அளவு உணவு உருவாக்கப்பட்டாலும், அவற்றின் பெரும்பகுதி வீணாக்கப்படுவதால் உலகில் பட்டினி நிலவுகிறது என்பதை, கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

 

தூக்கியெறியப்படும் உணவு, வறியோரிடமிருந்து திருடப்பட்ட உணவு என்று தன் மறைக்கல்வி உரையிலும், உணவு ஒவ்வொரு மனிதரின் பிரிக்கமுடியாத உரிமை என்றும், இதன் காரணமாக, பட்டினி, மனித சமுதாயம் புரியும் மாபெரும் குற்றம் என்றும் Fratelli Tutti திருமடலிலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதை, கர்தினால் டர்க்சன் அவர்கள், தன் உரையில் குறிப்பிட்டார்.

அதேவண்ணம், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் எழுதிய Caritas in Veritate திருமடலில், உணவு, குடிநீர், ஆகியவற்றைப் பெறுவது, ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமை ஆதலால், அவற்றைக் குறித்த விழிப்புணர்வை வளர்ப்பது கிறிஸ்தவர்களின் முக்கிய கடமை என்று கூறியுள்ளதையும், கர்தினால் டர்க்சன் அவர்கள் எடுத்துரைத்தார்.

உணவு உற்பத்தி, உணவைப் பகிர்தல் என்ற இரு நிலைகளிலும், மனிதர்கள் அடையக்கூடிய இலக்குகளாக ஐந்து எண்ணங்களை கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையில் பதிவு செய்துள்ளார்.

உணவு விநியோக முறையில், உள்ளூர் விவசாயம் மற்றும் உள்ளூர் வர்த்தகம் ஆகியவற்றை பலப்படுத்துதல்; குறுநில விவசாயிகள், பழங்குடியினர், இளையோர் பெண்கள் ஆகிய குழுக்களை பலப்படுத்துதல்; உணவு உற்பத்தியிலும், அதை உட்கொள்வதிலும் மறுசுழற்சி முறைகளை உறுதிசெய்தல்; இன்றைய தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி, உணவு திட்டங்களை உருவாக்குதல்; உணவை வீணாக்கும் இன்றைய போக்குகளுக்கு மாற்று கண்டுபிடித்தல்; என்ற ஐந்து பரிந்துரைகளைப்பற்றி கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையில் விளக்கிக்கூறினார்.