இணையவழி தொடர்புத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, மனித வர்த்தகம் வளர்ந்துள்ளதைக் குறித்து திருப்பீடம் மிகுந்த வேதனை அடைந்துள்ளது என்று, அக்டோபர் 12 செவ்வாயன்று, வியென்னாவில், ஐ.நா. அவை ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில், திருப்பீடத்தின் சார்பில் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டது.
போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் குறித்து கண்காணிக்கும் ஐ.நா.அவையின் UNODC அலுவலகம், மனித வர்த்தகம் குறித்து, நடத்திய ஓர் அமர்வில், திருப்பீடத்தின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், கோவிட்-19 பெருந்தொற்றினால் மனித வாழ்வு முடக்கப்பட்டக் காலத்திலும், மனித வர்த்தகம், இணையவழித் தொடர்புகளால் தழைத்து வந்துள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்றின் காரண்மாக விதிக்கப்பட்ட முழு அடைப்பு காலத்தில், இணையவழி தேடல்களும், தொடர்புகளும் வளர்ந்துவந்ததையடுத்து, உணவுப்பொருள்களும், வீட்டுக்குத் தேவையான ஏனையப்பொருள்களும் விற்கப்பட்டதைப்போல், மனிதர்களும் விற்கப்பட்டனர் என்று, திருப்பீடம் தன் கவலையை வெளியிட்டுள்ளது.
வளர்ந்துவரும் இந்த பெரும் குற்றத்தைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள வேதனைகளையும், கண்டனங்களையும் தன் அறிக்கையில் பதிவுசெய்துள்ள திருப்பீடம், இணையவழித் தொடர்புகளை, அரசுகள், தீவிரமாக கண்காணிப்பதன் வழியே, மனித வர்த்தகம் என்ற குற்றத்தை தடுக்கமுடியும் என்று கூறியுள்ளது.
இணையவழி தொடர்புகள் குறித்து சட்டங்களை இயற்றுவதோடு அரசுகள் நின்றுவிடாமல், அவை நடைமுறைப்படுத்தப்படுவதையும் தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும் என்ற விண்ணப்பத்தை, திருப்பீடம், இவ்வறிக்கையின் வழியே விடுத்துள்ளது.
மனித வர்த்தகத்திற்கு அடிப்படையாக இருக்கும் பணப்பரிமாற்றத்தின் வேர்களை ஒவ்வொரு அரசும், பன்னாட்டு நிறுவனங்களும் விரைவில் கண்டுபிடித்து, இந்த உலகளாவிய குற்றத்தைத் தடுக்கும் வழிகளை உறுதி செய்யவேண்டும் என்றும், திருப்பீடம் தன் அறிக்கை வழியே, அழைப்பு விடுத்துள்ளது.