'அனைவரும் ஒன்றித்திருப்பது மேன்மையுடையது', என்ற மையக்கருத்துடன், ஜெர்மனியிலிருந்து உரோம் நகர் வந்திருக்கும் கிறிஸ்தவ ஒன்றிப்பு குழு ஒன்றை, செப்டம்பர் 25, திங்கள்கிழமை, திருப்பீடத்தில் சந்தித்து உரை ஒன்று வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
'லூத்தரோடு இணைந்து திருத்தந்தையை நோக்கி', என்ற தலைப்புடன் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இதே அமைப்பு தன்னை சந்தித்ததைப் பற்றி நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமக்கென நம் வாழ்விற்குள்ளேயே கடவுள் இயற்றியுள்ள பாடலை கேட்க, நம் காதுகளை மட்டுமல்ல, நம் இதயங்களையும் திறந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தன்னைச் சந்திக்க வந்திருந்த இந்த குழு, சந்திப்பின் துவக்கத்தில் பாட்டு ஒன்றைப் பாடியதையொட்டி இவ்வாறுக் குறிப்பிட்ட திருத்தந்தை, திறந்த மனதுடன் பாடும் ஒவ்வொருவரும், கடவுளின் மறையுண்மையை ஏற்கனவே தொட்டுவிடுகிறார்கள் எனவும் அக்குழுவிடம் கூறினார்.
நம் வாழ்வில் இறைவன் இசைக்கும் கீதத்திற்கு செவிமடுக்க மறுக்காதிருப்போம் என்ற திருத்தந்தை, பல குரல்களின் ஒன்றிப்பில் ஒரு பாடல் அமைக்கப்படுவதுபோல், கிறிஸ்தவ ஒன்றிப்பும் இடம்பெறுகிறது என மேலும் கூறினார்.
மேலும், இத்திங்கள்கிழமை, ஜெர்மன் அரசுத்தலைவர் Frank-Walter Steinmeier, பெருநாட்டு பாப்பிறை பல்கலைக்கழகத்தின் அதிபர் (rector) Carlos Miguel Garatea Grau, Knights of Colombus பக்த சபையின் தலைவர் Patrick E. Kelly ஆகியோரையும் தனித்தனியே சந்தித்து திருத்தந்தை பிரான்சிஸ் உரையாடினார்.