Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் வாழ்வில் ஆர்வம் கொள்ளும்படி அழைக்கும் இறைவன்
Saturday, 30 Oct 2021 04:38 am
Namvazhvu

Namvazhvu

வாழ்வில் நாம் கொள்ளும் ஈடுபாடு மிகக் குறைந்த அளவில் இல்லாமல், கூடுதலான ஆர்வத்தோடும், ஈடுபாட்டோடும் இருக்கவேண்டும், குறிப்பாக, நம் இறைவேண்டல் அத்தகையதாக இருக்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும்வண்ணம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 28 வியாழன், தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

"நாம் அடிக்கடி மிகக்குறைந்த அளவே செய்கிறோம், ஆனால், நம்மால் இயன்றவரை மிக அதிகமாக செய்வதற்கு இயேசு நம்மை அழைக்கிறார். கடமைகளைச் செய்வது, கட்டளைகளைக் கடைபிடிப்பது, இறைவேண்டல் செய்வது என்ற அளவில் நாம் திருப்தியடைந்துவிடுகிறோம். ஆனால், வாழ்வை நமக்கு கொடையாக வழங்கும் இறைவன், வாழ்வில் ஆர்வம் கொள்ளும்படி அழைக்கிறார்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் பதிவில் இடம்பெற்றிருந்தன.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 27 புதனன்று, மறைக்கல்வி உரை வழங்கச் செல்வதற்குமுன், "பிறக்காத உயிர்களின் குரல்" என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருந்த இரு ஆலய மணிகளை அர்ச்சித்தார்.

இந்த ஆலய மணிகளை அர்ச்சித்தத்தைக்குறித்து தன் மறைக்கல்வி உரைக்குப்பின் பேசிய திருத்தந்தை, மனிதர்களின் மனசாட்சியைத் தட்டியெழுப்பவும், கருவுறும் ஒவ்வொரு உயிரும் புனிதமானது என்பதை அறிக்கையிடவும், இவ்விரு மணிகளும் ஒலிப்பனவாக என்ற தன் விருப்பத்தை வெளியிட்டார்.

போலந்து நாட்டின் Przemyśl என்ற நகரில் உருவாக்கப்பட்ட இந்த மணிகள் ஒவ்வொன்றும், நான்கு அடி விட்டமும், 2000 பவுண்டு எடையும் கொண்டவை. நம் உயிரணுக்களின் அடிப்படையாக விளங்கும் DNA சங்கிலியைப்போன்ற வடிவமும், இறைவனால் மோசேயிடம் வழங்கப்பட்ட "கொலை செய்யாதிருப்பாயாக" என்ற கட்டளையும் இந்த மணிகளை அலங்காரம் செய்கின்றன.

அத்துடன், “தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்குமுன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்” (எரேமியா 1:5) என்று இறைவாக்கினர் எரேமியா நூலில் காணப்படும் சொற்களும், "ஒவ்வொரு மனித வாழ்வையும் மதித்து, காத்து, அன்பு செய்வோம்" என்று திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் கூறிய சொற்களும், இவ்விரு மணிகளில், இஸ்பானியம், மற்றும் உக்ரைன் மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

இவ்விரு மணிகளில் ஒன்று, உக்ரைன் நாட்டின், Lviv நகரில் அமைந்துள்ள புனித 2ம் யோவான் பவுல் திருத்தல ஆலயத்திலும், மற்றொன்று, ஈக்குவதோர் நாட்டின் Guayaquil மறைமாவட்டத்தின் ஓர் ஆலயத்திலும் பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.