சூடான் நாட்டில் ஆட்சிக்கவிழ்ப்பு வழியாக அரசைக் கைப்பற்றியுள்ள இராணுவம், மக்களின் வாழ்வையும் உரிமைகளையும் மதித்துச் செயல்படவேண்டும் என அனைத்துலக சமுதாயம் இராணுவத்தை வலியுறுத்தவேண்டும் என விண்ணப்பித்துள்ளார், அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர்.
சூடானின் El Obeid மறைமாவட்ட ஆயரும், அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவருமான, ஆயர் Tombe Trille அவர்கள், அனைத்துலக சமுதாயத்திற்கு விடுத்துள்ள விண்ணப்பத்தில், இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பிற்கு எதிராகப் போராடியவர்கள் கொல்லப்பட்டது குறித்து தாங்கள் அறிய வந்துள்ளதாகவும், நாட்டில், மனிதவாழ்வு, அரசால் மதிக்கப்பட வலியுறுத்தப்படவேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளார்.
ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள், இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து ஆழந்த கவலையை வெளியிட்ட ஆயர் Tombe Trille அவர்கள், இராணுவ அரசால் கைதுச் செய்யப்பட்டுள்ள மக்கள் தலைவர்கள் அனைவரும் விடுவிக்கப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்துள்ளார்.
இம்மாதம் 25ம் தேதி, திங்கள்கிழமை காலை, சூடான் நாட்டின் இடைக்கால அரசை கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றிய அந்நாட்டு இராணுவம், பாராளுமன்றத்தை கலைத்ததுடன் பிரதமர் Abdalla Hamdok அவர்களுடன் இணைந்து, அனைத்து அமைச்சர்களையும், மக்கள் தலைவர்களையும் சிறை வைத்துள்ளது.
சூடான் நாட்டில் கொடுங்கோலாட்சி புரிந்துவந்த Omar al Bashir அரசை, 2019ம் ஆண்டு நடைபெற்ற புரட்சி வழியே நீக்கி, 2023ம் ஆண்டின் தேர்தலுக்கு தயாரிப்பதற்கென அமைப்பட்ட இடைக்கால அரசை, Omar al Bashir அவர்களுக்கு ஆதரவான இராணுவம் கவிழ்த்து, ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.