மனித உயிர் புனிதமானது, அதை மற்றவரிடமிருந்து பறிக்கும் உரிமை எவருக்கும் இல்லை என அறிக்கை ஒன்றை நியுசிலாந்து நாட்டு ஆயர்கள் வெளியிட்டுள்ளனர்,.
பொது மக்கள் கருத்து வாக்கெடுப்பு வழியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அங்கீகரிக்கப்பட்ட, கருணைக் கொலைக்கு அனுமதியளிக்கும் சட்டம் நவம்பர் மாதம் 7ம் தேதி முதல் அமலுக்கு வருவதையொட்டி, தங்கள் கவலையை தெரிவித்து, அறிக்கையொன்றை நியுசிலாந்து ஆயர்கள் தங்கள் வலைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
நியுசிலாந்து நாட்டில் தற்போது கருணைக் கொலைக்கு சட்ட அனுமதி கிட்டியுள்ளது, தலத்திரு அவையின் கருணைக் கொலைக்கு எதிரான உறுதிப் பாடுகளில் எவ்வித மாற்றத்தையும் கொணர வில்லை எனவும் தெரிவிக்கும் ஆயர்கள், அடுத்தவரின் வாழ்வை பறிக்கும் உரிமை எவருக்கும் இல்லை என்பது, எக்காலத்திலும் மாற்ற முடியாதது என்ற தங்கள் நிலைப் பாட்டை மீண்டும் உறுதி செய்துள்ளனர்.
குணப்படுத்த முடியாத நோயால் துன்புறும் 18 வயதிற்கு மேற்பட்டோரும், 6 மாதங்களுக்குள்ளேயே இறந்து விடலாம் என மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டு நோயால் துன்புறும் மக்களும், தங்கள் வாழ்வை முடித்துக் கொள்ள விரும்பினால், அதற்கு உதவ வழி செய்ய உள்ள இந்த சட்டம், நவம்பர் மாதம் 7ம் தேதி முதல் அமலுக்கு வருவதையொட்டி, இந்தப்புதிய சட்டம் கத்தோலிக்க மருத்துவ மனைகளில் நடை முறைப் படுத்தப்படாது என ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கள் நோயின் காரணமாக சமுதாயத்திற்கும் குடும்பத்திற்கும் சுமையாக இருக்க விரும்பாத வயது முதிர்ந்தோர், தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள விரும்பும் வேளைகளில், அவர்கள் வாழ்வதற்கு உதவுவதே, திரு அவையின் பணியேயன்றி, அவர்கள் இறப்பதற்கு உதவுவதல்ல என, தங்கள் வலைப் பக்கத்தில் உரைக்கும் நியுசிலாந்து ஆயர்கள், ஒருவரின் அருகில் இருந்து ஆறுதல் கூறி, அவரை அன்பு கூர்வதன் வழியாக, வாழ்வதற்கான நம்பிக்கையை, அவரில் ஏற்படுத்தலாம் எனவும் கூறியுள்ளனர்.
துன்புறும் நோயாளிகள் மத்தியில் பணி புரியும் மருத்துவப் பணியாளர்கள், நல்ல சமாரியர் போல் செயல்படுவதுடன், தங்கள் மனச்சான்றிற்கு எதிராக நடக்கும் படி எந்த பணியாளரையும் வலியுறுத்தக் கூடாது எனவும், மருத்துவத் துறையினருக்கு சில விதிகளையும் ஆயர்கள் முன் வைத்துள்ளனர்.
மனித மாண்பு எக்காரணத்தைக் கொண்டும் மீற முடியாதது என்பதை மீண்டும் ஒரு முறை வலியுறுத்தியுள்ள நியுசிலாந்து ஆயர்கள், தீராத நோயால் துன்புறும் நோயாளிகளின் குடும்பத்தோடு ஒருமைப்பாட்டை அறிவித்து, அவர்களோடு உடனிருக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.