Namvazhvu
திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் வயல்களில் சிறார் தொழில்முறை அகற்றப்பட
Thursday, 04 Nov 2021 12:18 pm
Namvazhvu

Namvazhvu

பண்ணைகளில் இடம்பெறும் சிறார் தொழில்முறையை அகற்றுவது குறித்து, FAO எனப்படும், .நா. வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம், உரோம் நகரில் துவக்கியுள்ள உயர்மட்ட அளவிலான பன்னாட்டு கூட்டம் ஒன்றிற்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், நவம்பர் 2 செவ்வாயன்று செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

திருத்தந்தையின் சார்பாகவும், அவரது பெயராலும் இச்செய்தியை அனுப்புவதாக, அதனை ஆரம்பித்துள்ள கர்தினால் பரோலின் அவர்கள், சிறார் தொழிலாளர்கள் குறித்து பன்னாட்டு அமைப்புகள் அண்மையில் வழங்கியுள்ள அறிக்கையின் அடிப்படையில், ILO உலகத் தொழில் நிறுவனத்தோடு இணைந்து, FAO நிறுவனம் மேற்கொண்டுள்ள இம்முயற்சிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சிறார் தொழில்முறை, அவர்களின் மாண்புள்ள வாழ்வு, மற்றும், நல்லிணக்க வளர்ச்சி ஆகியவற்றில் கடுமையான காயங்களாக மாறியுள்ளது என்றும், அது அவர்களின் வருங்காலத்திற்குரிய வாய்ப்புக்களை கட்டுப்படுத்துகின்றது என்றும் கூறியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், இந்நிலையை பெருந்தொற்று பரவல், மேலும் மோசமடையச் செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

விவசாயத்தொழிலில், ஆயிரக்கணக்கான சிறார் கட்டாயப்பணிகளில் அமர்த்தப்படுவதும், அதில் அவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகள், மாண்பை இழக்கும் நிலைகள், உரிமை மீறல்கள் போன்றவையும் அதிர்ச்சி தருகின்றது என உரைத்துள்ள கர்தினால் பரோலின் அவர்கள், இச்சிறார், வேலைசெய்யவில்லையெனில், குடும்பத்தை நடத்தமுடியாது என்ற நிலையில், பெற்றோரே அவர்களை வேலைக்கு அனுப்புவது, நம் கவலையை கூடுதலாக்குகின்றது எனவும் கூறியுள்ளார்.

சிறாரை இத்தகைய நிலைகளிலிருந்து காப்பாற்றுவதற்கு, தேசிய மற்றும், பன்னாட்டு அளவில் உறுதியான சட்டங்கள் அமைக்கப்படுவது மிக முக்கியம் என்பதை வலியுறுத்திக் கூறியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், வருங்காலத் தலைமுறைகள் மீது சுமத்தப்படும் நுகத்தடிகள் அகற்றப்படுவதற்கு, பன்னாட்டு அமைப்புகளும் பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்

சிறார் தொழில்முறையை அகற்றுவதற்கு திருப்பீடமும், கத்தோலிக்கத் திருஅவையும், அதன் நிறுவனங்களும் தொடர்ந்து பணியாற்றும் என்பதற்கு உறுதியளித்துள்ள கர்தினால் பரோலின் அவர்கள், இது தொடர்பாக FAO நிறுவனம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு, அதன் இயக்குனர் Qu Dongyu அவர்களுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.