Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் மூவேளை செபஉ எதிர்பார்ப்புகளை புரட்டிப்போட்ட புதிய வாழ்வுமுறை
Thursday, 04 Nov 2021 12:27 pm
Namvazhvu

Namvazhvu

தாழ்ச்சி, கருணை, கனிவு, நீதி, மற்றும் அமைதியை வாழ்வின் பாதையாக எடுத்துரைக்கும்  இயேசுவின் மலைப்பொழிவின் நற்பேறுகள் (மத் 5:1-12a) பகுதியை இன்றைய நற்செய்தி வாசகமாகக் கொண்டுள்ள நாம், வாழ்வின் பாதையாக இன்று, மகிழ்ச்சி மற்றும் இறைவாக்கு குறித்து காண்போம் என, நவம்பர் 1 திங்களன்று சிறப்பிக்கப்பட்ட, புனிதர் அனைவரின் திருநாளன்று வழங்கிய மூவேளை செபஉரையில் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்தார்.

மகிழ்ச்சியையும் இறையரசையும் நோக்கி நம்மை வழிநடத்தும் இயேசுவின் நற்பேறுகள் பற்றிய உரை, பேறுபெற்றவர்கள் என்ற வார்த்தையுடன் துவங்கி, நற்பேறு, புனிதத்துவம் என்ற வாழ்வுத்திட்டம், நம் முயற்சியாலும், உலகப்பொருட்களை மறுதலிப்பதாலும் மட்டும் கிட்டுவதல்ல, மாறாக, இறைவனின் குழந்தைகள் நாம் என்பதை மகிழ்வுடன் கண்டுகொள்வதிலிருந்து கிட்டுகிறது என்பதை வலியுறுத்துகிறது என, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த மக்களுக்கு திருத்தந்தை விளக்கினார்.

இவ்வாறு நாம் கண்டுகொள்வது மனிதரின் வெற்றியல்ல, மாறாக, இறைவன் நமக்கு வழங்கியுள்ள கொடை, ஏனெனில், புனிதத்துவத்தின் முழுமையாக விளங்கும் இறைவன் நம்முள் வந்து குடியிருப்பதாலேயே நாம் புனிதத்துவத்தைப் பெறுகிறோம் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

கிறிஸ்தவர்களின் மகிழ்ச்சி என்பது ஒரு சாதாரண மனித உணர்வு அல்ல, மாறாக, இறைவனிலிருந்து வரும் மன உறுதியையும் வல்லமையையும் பெற்று, வாழ்வின் அனைத்துச் சவால்களையும், அன்புடன் கூடிய அவரது அக்கறையில் எதிர்கொள்வதாகும் எனவும் எடுத்துரைத்த திருத்தந்தைபுனிதர்கள் அனைவரும், தங்கள் வாழ்வின் துயரவேளைகளில், இத்தகைய மகிழ்வை அனுபவித்துள்ளனர் என விளக்கினார்.

மகிழ்ச்சியற்ற விசுவாசம் என்பது அடிமைப்படுத்தும் நடைமுறையாக மாறி, கவலையைக் கொணரும் ஆபத்து உள்ளது என்றுரைத்த திருத்தந்தை, நாம் மகிழ்ச்சியான கிறிஸ்தவர்களா என்ற கேள்வியை எழுப்புவோம், ஏனெனில், மகிழ்ச்சி இன்றி, புனிதத்துவம் இல்லை என மேலும் எடுத்துரைத்தார்.

இரண்டாவது கருத்தாக, இறைவாக்குரைத்தல் பற்றி நோக்குவோம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பணக்காரர்களுக்கே மகிழ்ச்சி கிட்டும் என்ற உலக நடைமுறையை புரட்டிப்போட்டு, ஏழைகள், துயருறுவோர், நீதியின்பால் தாகமுடையோர் பேறுபெற்றோர், மற்றும் மகிழ்ச்சியைப் பெறுவர் என கூறுவதைக் காண்கிறோம், ஏனெனில், அவர்கள் அவரைப் பின்பற்றி அவரின் வார்த்தைகளை வாழ்வாக்குவதன்வழி இந்த மகிழ்வைப் பெறுகின்றனர் என எடுத்துரைத்தார்.

இயேசு எடுத்துரைத்த நற்பேறுகள் என்பவை, புதிய மனிதகுலத்தைப்பற்றிய, புனித வாழ்வு நடைமுறைப்பற்றிய முன்னறிவிப்பாகும் எனவும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு முன்னறிவித்த இந்த வாழ்வுமுறைக்கு நாம் சான்றுகளாக வாழ்கிறோமா என நம்மை நோக்கி கேள்வி எழுப்புவோம் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார்.

திருமுழுக்கின்போது நாம் பெற்ற இறைவாக்குரைக்கும் தூண்டுதலை நாம் மற்றவர்களுக்கும் எடுத்துரைக்கிறோமா, இயேசுவின் புதிய வாழ்வு குறித்த செய்தியை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துகின்றோமா, அல்லது நாம் மட்டும் சுகமாக வாழ்ந்தால் போதும் என இருந்துவிடுகிறோமா என்ற கேள்வியை நமக்குள்ளேயே கேட்டு விடைகாண்போம் என்ற விண்ணப்பத்துடன், புனிதர் அனைவரின் திருநாளன்று வழங்கிய மூவேளை செபவுரையை திருத்தந்தை பிரான்சிஸ் நிறைவு செய்தார்.