Namvazhvu
திரு. டேவிட் அனோஜன் & திரு. மரிய ரவீந்திரன் அருள்ராஜ்ம்பாடி இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாம், திருவண் நாங்கள் அநாதைகள் அல்ல
Friday, 05 Nov 2021 06:12 am
Namvazhvu

Namvazhvu

உலகெங்கும் வாழும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும், பொதுச்சமூகத்திற்கும் தமிழக அரசிற்கும், அனைத்துக் கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்புளுக்கும், பத்திரிக்கை ஊடகத்துறையினருக்கும் எமது பணிவான வணக்கம்.

இலங்கை உள்நாட்டுப் போரின் காரணமாக, உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் பல இலட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறிஇ பல்வேறு நாடுகளிலும் இந்தியாவிலும் தஞ்சம் அடைந்தனர். அவ்வாறு தஞ்சம் அடைந்தவர்களில் ஏறத்தாள 58500 பேர் தமிழக முகாம்களிலும், 35000 பேர் தங்கள் சொந்த விருப்பதில் முகாம்களுக்கு வெளியிலும் வசித்து வருகிறோம்.

இந்தியாவைத் தவிர, பிற நாடுகளில் அடைக்கலம் புகுந்த அகதிகள், இனம், மொழி, கலாசாரம் போன்றவற்றால் அந்த நாட்டின் குடிமக்களுடன் முற்றிலும் வேறுபட்டு இருந்தாலும், அவர்கள் அனைவரும் ஐக்கிய நாடுகளின் அகதிகள் பிரகடனம் மற்றும் தொடர்புடைய சர்வதேச சட்டங்களின்படி குடியுரிமை வழங்கப்பட்டு / பெற்று அந்தந்த நாடுகளில் குடியேறிவிட்டார்கள்.

ஆனால், இந்தியா ஐக்கிய நாடுகளின் அகதிகள் பிரகடனத்தில் ஒரு உறுப்பு நாடாக இல்லாத காரணத்தாலும், இந்தியாவில் அகதிகளுக்கான ஒரு உள்நாட்டு சட்டம் இல்லை என்ற நிலையிலும், இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள பிற நாட்டு அகதிகளுடன் சேர்த்து, இலங்கை அகதிகளும் சட்டவிரோத குடியேறிகள் என்றே கருதப்பட்டு வருகிறோம். இதனால், அகதிகளுக்கான அந்தஸ்தும், குடியுரிமை என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டு, எதிர்காலம் கேள்விக்குறியாகி நிர்கதியில் வாழும் ஒரு சமூகமாக இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்து வருகிறோம்.

முறையான பயண ஆவணங்கள் இன்றி இந்த நாட்டுக்குள் வந்து குடியேறியவர்கள் என்ற ரீதியில், இலங்கை அகதிகளும் சட்டவிரோத குடியேறிகள் என்றுதான் மத்திய அரசு கூறி வருகிறது. போர்ச் சூழலில், தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டின் எல்லையைக் கடந்து, தஞ்சம் கோருவோரில் 90 சதவீதத்தினர் எந்தவித ஆவணங்களும் இல்லாமல்தான் அந்த நாட்டிற்குள் பிரவேசித்து, அகதிகள் தஞ்சம் கோருகிறார்கள் என்று ஐநாவின் புள்ளி விபரம் சுட்டிக்காட்டுகிறது.

ஆனால், உரிய பயண ஆவணங்கள் இல்லாமல் இந்த நாட்டிற்குள் வந்துள்ள இலங்கைத் தமிழர்களை இங்குள்ள அரசு, முறையாக பதிவு செய்து, குடும்ப அட்டை, (ரேசன் அட்டை) என பல்வேறு ஆவணங்களை வழங்கியுள்ளது. அகதிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், மாதாந்திர அகதிகள் கொடுப்பனவு என உதவிகள் வழங்கி வருகிறது. மேலும், முகாம்கள் என்ற கட்டமைப்புக்குள் வைத்து தொடர்ந்து கண்காணித்து பராமரித்து வருகிறது. எனவே, இலங்கை தமிழர்கள் இந்த நாட்டிற்குள், இந்திய / தமிழக அரசு வழங்கியுள்ள முறையான அரசு ஆவணங்களுடன்தான் வாழ்ந்து வருகிறோம். அரசுக்கு தெரியாமல் மக்களோடு, மக்களாக கலந்து வாழவில்லை. எனவே, சட்ட விரோத குடியேறிகள் என்று அரசு கூறுவது ஏற்புடையது அல்ல என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறிவரும் அதே கருத்துடன் நாங்களும் உடன்படுகிறோம்.

இவ்வாறு, தமிழகத்திலிருக்கும் 103 இலங்கைத்தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் நாங்கள், கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக, வரையறுக்கப்பட்ட அகதிகள் முகாமிற்குள், குரலற்றவர்களாக, ஆதரவற்று இருக்கும் மக்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்து வருகிறோம். நிச்சயமற்ற நிலையே எங்களுக்கு நிச்சயமாகிப்போகுமோ? என்ற பயத்தில், காலத்தை எமக்கு சாதகமாக்கிக் கொள்ள வேண்டும் என பயணிப்பவர்கள் நாங்கள். முட்டி மோதி, கைக்கெட்டும் வாய்ப்புகள் அனைத்தையும் அகதி அடையாளம் தட்டிப்பறித்து, மீண்டும் ஆரம்பித்த புள்ளியிலேயே பரிதாபமாக நிற்கும் மக்கள் கூட்டத்தினர் நாங்கள். காலம் செல்லச் செல்ல, மனம் நொந்து, எனக்காக நான் கண்ட கனவுகளையும், எடுத்த முயற்சிகளையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, என் எதிர்கால சந்ததியினராவது, எந்த வரையறைக்குளும் தேங்கி நிற்காமல், நினைத்ததை படிக்கவும், படித்ததிற்கு ஏற்ற பணி செய்யவும், சுயமாக நின்று சுதந்திரமாக உலகெங்கும் உலாவ வேண்டும் என காத்து நிற்கும் மக்கள் கூட்டம் நாங்கள்.

கடந்த 32 ஆண்டு காலமாக, அகதியாக நாங்கள் அனுபவித்த நிராகாரிப்புகளுக்கும், அவமானங்களுக்கும் சரியான எதிர்காலத் தீர்வை நோக்கி விழிப்புணர்வோடு எமக்கு ஆதரவாக அரசையும், பொதுச்சமூகத்தையும் நகர்த்தவே இந்தப்பதிவு.

இத்தனை ஆண்டுகால அகதி முகாம் வாழ்க்கை, எங்கள் எதிர்காலத்தின் முன் பதிலற்ற பல்வேறு கேள்விகளை மட்டுமே கண்ணுக்கெட்டிய தூரம் வரை எழுப்பி வைத்திருக்கிறது. நாங்கள் யார்? தொப்புள்கொடி உறவென்று உறவாடியது ஒரு காலம். அகதியென்று அனுதாபம் கொண்டது சிலகாலம். குடியுரிமையென குரல் எழுந்ததும், சட்ட விரோதக் குடியேறி என்கிறது இன்றைய நிகழ்காலம். இது போன்ற நிலையற்ற தன்மை தான் எங்களின் எதிர்காலமா? விரக்தியின் விளிம்பில் நின்ற எங்களின் கேள்விகளுக்கு பதிலாகவும், எங்களது குரலாகவும் புதிதாக அமைந்திருக்கக்கூடிய தமிழ்நாடு அரசு நம்பிக்கையை விதைத்திருக்கிறது. தேர்தல் அறிக்கையில் எங்களுக்காக வாக்குறுதிகளை கொடுத்ததோடு நின்று விடாமல், முகாம்களின் தற்போதைய நிலையை ஆய்வு செய்ய பாரளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மறுவாழ்வுத்துறை ஆணையர், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் என அனைவரையும் களத்தில் இறக்கி நேரடி கள ஆய்வு செய்ததன் அடிப்படையில், எமது முகாம் வாழ்க்கையின் அவலம் உள்ளபடியே ஆய்வு முடிவுகளாக முன்வைக்கப்பட்டு இருந்தது.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 28-8-2021 அன்று, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சட்டப்பேரவையின் 110 விதியின் கீழ், பல்வேறு நலத்திட்டங்களை 317.4 கோடி செலவில் அறிவித்து, “இலங்கைத்தமிழர்கள் அனாதைகள் அல்ல அவர்களுக்கு நாங்கள் இருக்கிறோம்” என்று அழுத்தமாக பதிவு செய்தார்கள். அவர்களின் வார்த்தை சாதாரணமானதல்ல. எங்கள் வாழ்க்கையை மாண்போடு மாற்றக்கூடிய செயல்மிகுந்த வார்த்தைகள் அவை. சுயமரியாதையையும், சமூக நீதியையும் கற்றுத்தந்த முன்னோர்களின் வழிவந்த இன்றைய தமிழ்நாடு முதல்வர் அவர்கள், எங்களுக்கு சுயமரியாதையை பெற்றுத்தர வேண்டும். நாங்களும் மாண்போடு வாழ வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற உணர்வின் வெளிப்பாடே 110 விதியின் கீழ் அறிவிப்புகளாக வெளிவந்திருப்பதாக நாங்கள் உணர்கிறோம். குரலற்ற எங்களின் குரலாக, தமிழர் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களே இருக்கிறார் என்ற தைரியமும், நம்பிக்கையும் முகாம் வாழ் தமிழர்கள் உள்ளங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் தான், உலகெங்கிலும் வாழக்கூடிய அனைத்து தமிழ் உறவுகளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பாக இதைப் பார்க்கிறார்கள், வரவேற்கிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களை பாராட்டி மகிழ்கிறார்கள்.

தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிற நலத்திட்ட அறிவிப்புகள் முகாமின் உள் கட்டமைப்பையும், எமது வாழ்க்கைiயும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அதனால் தான் ஒவ்வொரு முகாம்களிலும் இந்த அறிவிப்பை இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்கிறார்கள். நன்றி தெரிவித்து பதாகைகள் வைக்கிறார்கள். நன்றிக்கடிதங்களை முதல்வர் அவர்களுக்கு எழுதுகிறார்கள். எங்களுக்கான விடியலும், மீட்பும் தமிழக முதல்வர் அவர்களால் நிச்சயம் நடக்கும் என நம்புகிறார்கள். திட்டங்களை அறிவித்தது மட்டுமல்லாது, அவை விரைவாக அகதி மக்களை சென்றடைய வேண்டும் என அடுக்கடுக்காக அரசாணைகளை வெளியிட்டு, செயல்படுத்தவும் தொடங்கியிருப்பது அகதி மக்களின் மத்தியில் மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

“வாக்களித்தவர்கள் மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களும் மகிழ்ச்சி அடையும் வகையில் இந்த ஆட்சி செயல்படும்” என்று தமிழக முதல்வர் அவர்கள் கூறியபடி, வாக்குரிமையற்று தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களும் மகிழ்ச்சி அடையும் விதமாக தமிழக அரசின் செயல்பாடுகள் இருக்கிறது என்பது நாங்கள் எதிர்பார்க்காத ஒன்றாகவே கருதுகிறோம்.

“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்”

என்று உரைக்கும் அய்யன் வள்ளுவனின் வாக்கை வெல்லும் விதமாக “நாங்கள் சொன்னதை செய்தோம், செய்வதை சொல்வோம்” என்று கூறிய வாக்கை மெய்ப்பிக்கும் விதமாக செயல்பட்டு வருவது ஒருபுறமிருக்க, அகதிகள் விஷயத்தில் தமிழக முதல்வர் சொல்லாதவற்றையும் செய்து வருவது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாய் இருக்கிறது

மேலும், தேர்தல் வாக்குறுதியில் முதல்வர் சொன்னது போல், பிரதமரைச் சந்தித்தபோது, எமக்கான குடியுரிமை தொடர்பாக வலியுறுத்தியது போல், சட்டப்பேரவையில் குடியுரிமை தொடர்பாக அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய சிறப்புக் குழு அமைக்கப்படும் என்று கூறியதுபோல், அகதிகளாக வரும் மக்களை சக மனிதர்களாக மனிதநேயத்துடன் பார்க்க வேண்டும் என்றும், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கைத் தமிழர்கள் வஞ்சிக்கப்படுவது ஏற்புடையது அல்ல என்றும் 08-09-2021 அன்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது போல், எங்களுக்கு குடியுரிமையை பெற்றுத்தரும் உணர்வும் செயலும் தமிழக முதல்வர் அவர்களுக்கு உண்டு என நாங்கள் ஐயமின்றி உறுதியாக நம்புகிறோம்.

அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான், ஏன் நாங்கள் குடியுரிமை கோருகிறோம், அதற்கான நியாயங்கள் என்ன? என்பதையும் தமிழக அரசிற்கும் பொதுச் சமூகத்திற்கும் இதன் ஊடாக தெரிவிக்க விரும்புகிறோம்.

மனிதனின் சராசரி ஆயுளில் பாதியை, சர்வதேசம் வரையறுத்த அகதிகளுக்கான அடிப்படை உரிமைகள் கூட இல்லாத அகதியாகவே நாங்கள் இத்தனை ஆண்டுகள் நகர்த்திவிட்டோம். மீதமிருக்கும் சொற்ப காலத்தையாவது, நாங்களும் எங்களது சந்ததிகளும், அகதியென்ற நிராகரிப்பும், தடையுமின்றி இந்திய நாட்டின் குடிமகக்களாக வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். எங்கள் குழந்தைகளின் எதிர்கால நலன் கருதியே நாங்கள் இந்தியக் குடியுரிமையை கோரி நிற்கிறோம்.

அகதி என்பதன் வரையறை உணராத வயதில், படித்து பெரியவனாகி என்னவாகப் போகிறாய்? என்ற ஆசிரியரின் கேள்விகளுக்கு, மருத்துவர், காவலர், வழக்கறிஞர், விஞ்ஞானி, தேசிய அளவில் விiயாட்டு வீரர் என கனவுகளை பதிலாக அளித்தவர்கள், இன்று பெயின்ட் வாளியோடு உயர்ந்த கட்டிடங்களில் தங்கள் எண்ணங்களைத் தொலைத்து, வண்ணம் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள். மாணவச் செல்வங்களின் கனவுகள் இனிமேலும் பொய்க்காமல் மெய்ப்படவேண்டும். அகதியாக கல்வியில், கலையில், விளையாட்டில் எமக்கிருக்கும் தடைகள் உடைபட வேண்டும் என்பதற்காகவே, இந்தியக் குடியுரிமையை கேட்கிறோம்.

அம்மாவின் நகை அடமானத்திலும், அப்பா வாங்கிய வட்டியிலும் கடன்பட்டு படித்த கல்லூரி படிப்பு, பெயின்டிங் வேலைக்குத்தான் தகுதி என்கிற நிலை மாற வேண்டும். தனியார் துறையிலாவது படித்த கல்விக்கு தகுதியான வேலையை தடையின்றி பெற வேண்டும் என்பதற்காகவே இந்தியக் குடியுரிமையை கேட்கிறோம்

செக்கிங்னா என்ன? ஆள்தணிக்கைனா என்ன? தேசிய தலைவர்கள் தமிழகம் வந்தா நீங்க ஏன் வேலைக்கு போகக்கூடாது? என்ற கேள்வியை, நாங்கள் எங்களது தந்தையிடம் கேட்டு, எங்களது மகன் எங்களைக் கேட்டதுபோல், எங்களது பேரனும் பேத்தியும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காகவும், ஆள்தணிக்கையில் மந்தை போல் நின்று அடையாளம் காட்டி வரும் வழியும், வேதனையும் இனிமேலாவது மாற வேண்டும் என்பதற்காகவே, இந்தியக் குடியுரிமையை கேட்கிறோம்.

அரசு வழங்கும் சிறு உதவித் தொகை குடும்பத்திற்கு போதாது என்ற காரணத்தால், வாழ்வாதாரத்திற்காக முகாமைத் தாண்டி, வெளியூர் சென்று வேலை பார்ப்பதைக்கூட பெருங்குற்றம் செய்து விட்டதைப்போல் சொல்லும் வாழ்க்கை இனிமேலும் வேண்டாம் என்பதற்காகவும் தான் இந்தியக் குடியுரிமை கேட்கிறோம்

தூக்கத்தில் எழுப்பி எங்களது தேசிய கீதம் என்னவென்று கேட்டால், “ஜன கன மன” என்று தான் அனிச்சையாக எங்களுக்கு சொல்ல வரும். ஆகஸ்ட் 15 தான் நாம் கொண்டாடும் சுதந்திர தினம். ஜனவரி -26 ம் நாள்தான் எமக்கு குடியரசு தினம் என்று எங்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. இந்தியாவும், இலங்கையும் மோதும் மட்டைப்பந்து விளையாட்டில் கூட இந்தியா வெற்றிபெற வேண்டுமென்று தான் நினைக்கிறோம். இந்தியா தோற்றால் கண்ணீரும், வெற்றி பெற்றால் ஆனந்தக் கண்ணீரும் எம்மை அறியாமலேயே வடிக்கிறோம். இவ்வாறு ஒவ்வொன்றிலும் நாங்கள் உணர்ந்து வாழும் வாழ்க்கையை, இந்திய இறையாண்மையோடு இணைந்து வாழவே இந்தியக் குடியுரிமையைக் கேட்கிறோம்

திருமணத்திற்கு செல்ல வேண்டுமா அனுமதி? மறுவீட்டக்கு செல்ல வேண்டுமா அனுமதி? கர்ப்பிணியானபின், பிரசவத்திற்கு தாய்வீட்டிற்கு போக வேண்டுமா அனுமதி? குழந்தை பிறந்த பின், கணவர் குழந்தையை காண போக வேண்டுமா அனுமதி? என்று நீளும் பட்டியலில், கழிவறை, கல்லறை தவிர அனைத்திற்கும் அனுமதி வேண்டியே போகும் நிலை மாறவேண்டும் என்பதற்காகத்தான் இந்தியக் குடியுரிமையைக் கேட்கிறோம்.

32 ஆண்டு கால தொடர் கண்காணிப்பு ஏற்படுத்தியிருக்கும் ஒருவித உளவியல் பாதிப்பிலிருந்து மீண்டு வரவும், தயக்கம் நீங்கி நல்ல ஆளுமைகளாக உருவாகவேணடும் அதற்கான விசாலமான பொதுவெளி உருவாக வேண்டும் என்பதற்காகவே இந்தியக் குடியுரிமையைக் கேட்கிறோம்.

இனம், மொழி, பண்பாடு, கலச்சாரம் என அனைத்தாலும் ஒன்றுபட்டு இங்குள்ளவர்களுடன் இரண்டறக் கலந்து வாழும் நாங்களும், வரலாற்று ரீதியாக இந்த மண்ணின் மைந்தர்கள்தான் என்பதை உணர்ந்து, நாங்கள் சட்டவிரோதக் குடியேறிகள் என்று சொல்வதை நீக்க வேண்டித்தான் இந்தியக் குடியுரிமையைக் கேட்கிறோம்

படகேறி வந்தது முதல், இந்நாள் வரை, அனைத்து அரசுத்துறைகளின் பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும், முகாமிற்கு வெளியேயும் உள்ளேயும் அரசின் உதவிகளோடு வாழும் நாங்கள் சட்டவிரோதக் குடியேறிகள் அல்ல என்பதற்காகவே, இந்தியக் குடியுரிமையைக் கேட்கிறோம்;.

இந்திய வம்சாவழியை சேர்ந்தவர்கள், தமிழகத்தில் பிறந்தவர்கள், இந்திய குடிமக்களை திருமணம் செய்தவர்கள் என அனைவரும், தனித்தனியே பிரித்துப்பார்க்க முடியாத வகையில் முகாம்களிலும் முகாமிற்கு வெளியேயும், திருமண உறவுகள் ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் இரண்டறக்கலந்தே வாழ்ந்து வருகின்றோம். இதில் பாதுகாப்பையும், உறவையும் மேலும் உறுதிப்படுத்தவே இந்தியக் குடியுரிமையைக் கேட்கிறோம்

அனைத்து அரசியல் நிகழ்வுகளிலும் நாங்கள் பார்வையாளராக மட்டுமே இருக்கிறோம். முகாம் அளவில் கூட, நமக்கான பிரதிநிதிகளை நாமே தேர்ந்தெடுக்கும் ஜனநாயக மரபுகளை நாங்கள் பின்பற்ற இயலாத நிலையை மாற்றி, நாங்களும் அரசியல் பங்கேற்பாளராக மாறவேண்டும் என்பதற்காகவே இந்தியக் குடியுரிமையைக் கேட்கிறோம்.

எங்களுக்கான சமூக நீதியும், சுயமரியாதையும், சட்ட உதவிகளையும் தடையின்றி பெற குடிமகன் அங்கீகாரம் வேண்டும் என்பதை உணர்ந்ததால்தான் உரிமையோடு இந்தியக் குடியுரிமை கேட்கிறோம்.

திறமையும் வாய்ப்பும் இருந்தாலும், அகதியாக இருப்பதால் கல்விக்கடனும், தொழிற்கடனும் கிடைக்கப்பெறாமல் கல்வியும், தொழிலும் வளர்ச்சியடையாமல் குறிப்பிட்ட வட்டத்திற்குள் தேங்கி பயனின்றிப் போகக்கூடாது என்பதற்காகவும், பெற்ற கல்வியும், தெரிந்த தொழிலும் வரையறைகளின்றி பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, இந்தியக் குடியுரிமையைக் கேட்கிறோம்.

அகதி என்பது வெறும் வார்தையல்ல. அது ஒரு வலிமிகுந்த வாழ்க்கை முறையாகவே 32 ஆண்டுகளாக மாறியிருக்கிறது. நாங்கள் இலங்கைத் தழிழர்கள் என்ற நிலை மாறி, அகதி என்கிற மரபணு மாற்றப்பட்ட இனமாகவும், சட்டவிரோதக் குடியேறி என்கிற குற்றப்பார்வைக்கான இனமாகவும் அடையாளப்படுத்தப்பட்டு விடுவோமோ என்கிற பயத்தில்தான் இந்தியக் குடியுரிமையைக் கேட்கிறோம்.

குடியுரிமை என்பது ஓட்டு போடும் உரிமை என்பதாக நிலவும் நிலை மாறி, நாங்களும் சொத்துரிமை, கல்வி உரிமை, வேலை உரிமை, தொழில் உரிமை, பண்பாடு, மத நம்பிக்கை மற்றும் மனித மாண்புகளுடன் வாழும் ஜனநாயக சுதந்திர உரிமைகள் அனைத்தும் பெற்று வாழவே, இந்தியக் குடியுரிமையை கேட்கிறோம்.

இது ஒரு உணர்வுபூர்வமான முடிவு என்பதையும் தாண்டி, இந்தியக் குடியரசு, ஒரு குடிமகனுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கியுள்ள ஜனநாயக வாழ்வுரிமையை நாங்கள் மிகவும் மதிக்கிறோம், அதை பெரிதும் விரும்புகிறோம். எனவேதான், நாங்களும் இந்த நாட்டின் ஒரு குடிமகனாக, இறையாண்மையோடு வாழ விரும்பியே இந்தியக் குடியுரிமையைக் கேட்கிறோம்.

இறுதியாக, ஒரு தாயின் அரவணைப்பில் இருக்கும் குழந்தை உணரும் பாதுகாப்பையும், அரவணைப்பையும், நெருக்கத்தையும், முன் எப்போதுமில்லாத வகையில் இன்றைய தமிழ்நாடு அரசிடம் நாங்கள் உணர்கிறோம். காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மரக்கட்டைகள் போல், இலக்கின்றி பயணித்த எமக்கு அவை கட்டுமரங்கலாக மாறி, சரியான திசையை நோக்கி பயணிக்கும் காலம் தற்போது கனிந்திருப்பதாகவே நாங்கள் நம்புகிறோம். எங்களின் குரலாக இருக்கும் இன்றைய தமிழ்நாடு அரசு, எங்களுக்கு நிரந்தர தீர்வான குடியுரிமையை பெற்றுத்தரும் என்று உறுதியோடு நம்புகிறோம். எங்கள் குடியுரிமை கோரிக்கைக்கு ஆதரவாக அனைத்து தமிழக கட்சிகளும், அமைப்புகளும் வலுசேர்க்க வேண்டும் என்றும் இந்தியக் குடியுரிமைக்கான எங்களது கோரிக்கையையும், அதன் நியாயத்தையும் இந்திய அளவில் கவன ஈர்ப்பு பெறச் செய்ய வேண்டும். அதற்கு அனைத்து ஊடக பத்திரிக்கை நண்பர்களும் உதவவேண்டுமென நம்பிக்கையோடு உங்கள் கரம் கோர்த்து காத்திருக்கிறோம்.

 நன்றி!

(மேற்கண்ட தகவல்கள் அடங்கிய சிறு வீடியோ ஒன்று தமிழக முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து ஒருசில நாட்களில் கையளிக்கப்பட உள்ளது)