Namvazhvu
அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி மக்களின் அருகாமையில் இருக்க விரும்பும் திருத்தந்தை பிரான்சிஸ்
Wednesday, 17 Nov 2021 14:46 pm
Namvazhvu

Namvazhvu

நன்மைத்தனத்திற்கும், உண்மைக்கும், அழகுக்கும் பணியாற்றும் சமூகத்தொடர்புத்துறையில், மூன்று திருத்தந்தையர்களின் கீழ், திருஅவைக்கு தான் ஆற்றிய அனுபவங்களின் தொகுப்பை, ஒரு நூலாக வத்திக்கான் வானொலியின் முன்னாள் இயக்குனர், அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி வெளியிட்டுள்ளார்.

திருத்தந்தையர்கள் புனித இரண்டாம் ஜான் பால், 16ம் பெனடிக்ட், பிரான்சிஸ் ஆகியோர், தங்கள் ஆளுமைகள், மற்றும், தங்களுக்கு அருகிருந்த வழிமுறைகளின் துணைகொண்டு, சமூகத்தொடர்புத்துறையில், வெவ்வேறு பாணிகளைக் கையாண்டனர் எனக் கூறும் இயேசு சபை அருள்பணி லொம்பார்தி அவர்கள், திருஅவையின் முக்கிய நடவடிக்கையாகச் சமூகத்தொடர்பு உள்ளது, ஏனெனில், இயேசுவின் நற்செய்தியை எடுத்துரைக்கும் பணி திருஅவைக்கு உள்ளது என எடுத்துரைத்தார்.

வத்திக்கான் வானொலி, வத்திக்கான் தொலைக்காட்சி, திருப்பீடத் தகவல் தொடர்புத்துறை ஆகிவைகளின் இயக்குனராக பணியாற்றிய அனுபவமுடைய அருள்பணி லொம்பார்தி அவர்கள், தான் எழுதியுள்ள, 'திருத்தந்தையர், வத்திக்கான், சமூகத்தொடர்புத்துறை' என்ற புத்தகத்தின் முதல் பகுதியில், தான் பணிபுரிந்த மூன்று திருத்தந்தையர் குறித்தும், இரண்டாம் பகுதியில், வத்திக்கான் வானொலி, வத்திக்கான் தொலைக்காட்சி, மற்றும் வத்திக்கான் தகவல் தொடர்பு அலுவலகத்தில் தான் ஆற்றிய பணிகள் குறித்தும், இறுதிப்பகுதியில், வத்திக்கான் வானொலி இயக்குனராக பணியாற்றியபோது தான் கொண்டிருந்த குறிக்கோள்கள் குறித்தும் எழுதியுள்ளார்.

அண்மை கால மூன்று திருத்தந்தையர்களும் கையாண்ட சமூகத்தொடர்புப் பணிகள் பற்றிக் குறிப்பிடும் இயேசுசபை அருள்பணி லொம்பார்தி அவர்கள், வார்த்தைகள், மற்றும் செய்கைகள் வழியாக தன் கருத்துக்கள் மக்களைச் சென்றடைய வைப்பதில் திறமைமிக்கவராக இருந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், தன்னைச் சுட்ட மெகமத் அலி அஃசாவுடன் மேற்கொண்ட சந்திப்பு, எருசலேமின் மேற்குச் சுவரில் அவர் சமர்ப்பித்த செப விண்ணப்பம், தன் கடைசி காலத்தில் தன் துயர்கள், மற்றும் பலவீனங்கள் வழியாக அவர் வழங்கிய செய்தி ஆகியவைகளைக் குறிப்பிட்டு, சமூகத்தொடர்பில் அவர் பேராற்றல் வாய்ந்தவராக இருந்தார் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

வார்த்தைகள், மற்றும் எழுத்து வடிவில் தன் சமூகத்தொடர்பை வெளிப்படுத்திய திருத்தந்தை பெனடிக்ட் அவர்கள், கலாச்சாரத்தின் மனிதராக இருந்து, தன் எண்ணங்களையும் ஆன்மீகத்தையும், தெளிவான மற்றும் ஒழுங்குமுறைக்குட்பட்ட வழிகளில் வெளிப்படுத்தினார் என, அருள்பணி லொம்பார்தி அவர்கள், தன் நூலில் எழுதியுள்ளார்.

மக்களின் அருகாமையில் எப்போதும் இருக்க விரும்பும் மனிதர் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை தன் நூலில் குறிப்பிடும் அருள்பணி லொம்பார்தி அவர்கள், சமூகத்தொடர்புத் துறையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பலமே, அவரின் தெளிவான, சுருக்கமான வார்த்தைகளும், மக்களுக்கு நெருக்கமாக அவர் வெளிப்படுத்தும் நடவடிக்கைகளும் என மேலும் கூறியுள்ளார்.

சமுகத்தொடர்புத் துறையில் இடம்பெற்றுவரும் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு இயைந்தவகையில் திருஅவையும் தன்னை மாற்றி வருவதையும் வத்திக்கான் வானொலியின் முன்னாள் இயக்குனர், இயேசு சபை அருள்பணி லொம்பார்தி குறிப்பிட்டுள்ளார்.