Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் .அசிசியில் வறியோருடன் இணைந்து செபித்து, சான்று பகர்தல்
Thursday, 18 Nov 2021 01:53 am
Namvazhvu

Namvazhvu

உலக வறியோர் நாளுக்கு முன்னோடியாக, இவ்வாரம், வெள்ளிக்கிழமை, நவம்பர் 12ம் தேதி, இத்தாலியின் அசிசி நகரில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இடம்பெறும் வறியோர் நாள் நிகழ்வுகள் குறித்த விவரங்களை, திருப்பீடம் வெளியிட்டுள்ளது.

நவம்பர் மாதம் 14ம் தேதி ஞாயிறன்று, வத்திக்கானில், திருப்பலியுடன் இடம்பெறும் உலக வறியோர் நாளுக்கு முன்னோடியாக, அசிசி நகரில் வறியோருடன் இணைந்து செபித்தலும், சான்று பகர்தலும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக வறியோர் நாள் நிகழ்வுகளையொட்டி, ஹெலிகாப்டரில் வெள்ளி காலை உள்ளூர் நேரம் 9 மணிக்கு அசிசி நகர் சென்றடையும் திருத்தந்தை, அப்பகுதியின் அரசு அதிகாரிகளையும், வறியோரின் சில பிரதிநிதிகளையும் வாழ்த்தியபின், அசிசியின் Santa Maria degli Angeli பெருங்கோவிலுக்குள் ஏறக்குறைய 500 வறியோர் பிரதிநிதிகளைச் சந்திப்பார்.

அசிசி நகருக்கு திருப்பயணமாக நடந்தே வந்துள்ள வறியோருள் சிலர், ஒரு மேல்போர்வையையும், ஊன்றுகோலையும், வறியோரின் அடையாளச் சின்னங்களாக, திருத்தந்தைக்கு வழங்கும், உணர்ச்சிகரமான நிகழ்வும் இங்கு இடம்பெறும்.

Santa Maria degli Angeli பெருங்கோவிலுக்குள் அமைந்துள்ள அசிசி நகர் புனித பிரான்சிஸ் காலத்து சிறு கோவிலில் சிறிது நேரம் செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு 500 பிரதிநிதிகளைச் சந்தித்து, அவர்களின் சான்றுபகர்தலுக்குச் செவிமடுப்பார்.

உலக வறியோரின் பிரதிநிதிகளாக, இரு பிரான்ஸ் நாட்டவர், ஒரு போலந்து நாட்டவர், ஒரு இஸ்பானியர், இரு இத்தாலியர் என  6 பேர் முன்வந்து சான்றுபகரும் இந்நிகழ்வில், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து உரையாடும் திருத்தந்தை, அவர்களோடு இணைந்து காலை சிற்றுண்டியை அருந்தியபின், மீண்டும் பெருங்கோவிலுக்குள் நுழைந்து அவர்களோடு இணைந்து செபிப்பார்.

இந்நிகழ்வின் இறுதியில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு தராதவகையில் தயாரிக்கப்பட்ட 500 தோள்பைகளில், வறியோருக்குத் தேவையான பல்வேறு குளிர்கால உடைகள், மற்றும் கோவிட் நோய் எதிர்ப்பு முகக்கவசங்கள் ஆகிய அத்தியாவசமான பொருட்களை வைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வறியோருக்கு வழங்குவார்.

வறியோருக்கு இவற்றை வழங்கியபின் திருத்தந்தை விடைபெற்றுச் செல்ல, அசிசி நகர் ஆயர் Domenico Sorrentino அவர்களுடன், வறியோர், மதிய உணவு விருந்தில் கலந்துகொள்வர். நவம்பர் 14ம் தேதி, ஞாயிறன்று, வத்திக்கானில் சிறப்பிக்கப்படும் 5வது உலக வறியோர் நாள் கொண்டாட்டத்தில், ஏறக்குறைய, இரண்டாயிரம் வறியோர் கலந்துகொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.