நவம்பர் 7, கடந்த ஞாயிறன்று, ஈராக் நாட்டுப் பிரதமர் இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து, திருத்தந்தையின் ஆழ்ந்த கவலையையும், செபத்துடன் கூடிய அருகாமையையும் வெளியிட்டு, தந்திச் செய்தியொன்றை, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், அந்நாட்டிற்கு அனுப்பியுள்ளார்
கணினி வழியே தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் 'Drone' என்ற வானூர்தி வழியே, ஈராக் பிரதமர் Mustafa al-Kadhimi அவர்களின் இல்லம் தாக்கப்பட்டது குறித்து கேள்வியுற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரதமருடனும், அவரது குடும்பத்தினருடனும், இத்தாக்குதலில் காயமடைந்தோருடனும் தன் அருகாமையை வெளியிடுவதாகவும், இந்த பயங்கரவாதச் செயல் குறித்த தன் வன்மையான கண்டனத்தை வெளியிடுவதாகவும், திருத்தந்தையின் பெயரால் அனுப்பப்பட்டுள்ள இச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
உரையாடல், மற்றும் உடன்பிறந்த ஒருமைப்பாட்டின் வழியே அமைதியின் பாதையில் ஈராக் மக்கள் தொடர்ந்து பயணிக்க இறைவனை நோக்கி திருத்தந்தை வேண்டுவதாகவும், திருப்பீடச் செயலரால் ஈராக் பிரதமருக்கு அனுப்பப்பட்ட செய்தி கூறுகிறது. வேதிப்பொருள்கள் நிறைந்த Drone வழியாக ஞாயிறன்று நடைபெற்ற தாக்குதலில், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லையெனினும், பிரதமரின் இல்லம் சிறிதளவு சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.