நவம்பர் 12 ஆம் தேதி வெள்ளி காலையில், அசிசி நகரின் தூதர்களின் புனித மரியா பெருங்கோவிலில், ஏறத்தாழ 500 வறியோரைச் சந்தித்து, அவர்களோடு சேர்ந்து செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த சந்திப்பு, நாம் அனைவரும், ஒருவர் மற்றவரின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நம் இதயங்களைத் திறக்க உதவட்டும் என்று தன் உரையைத் துவக்கினார்.
இந்த வாழ்வுப் பயணத்தில் மற்றவருக்குத் தொடர்ந்து உதவுவதற்கென்று, நம் பலவீனத்தைப் பலமாக அமைக்கவும், பகிர்ந்துகொள்ளப்படுவதற்காக, நம் வறுமையை வளமாக மாற்றவும், அதனால் இந்த உலகை சிறப்பானதாக உருவாக்கவும், இந்த சந்திப்பு உதவவேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.
நம் ஒவ்வொருவருக்கும் அடுத்தவர் தேவைப்படுகிறார் எனவும், பலவீனத்தைக்கூட நாம் ஒன்றுசேர்ந்து அனுபவித்தால் அது வலிமையாக மாறும் மற்றும் அது சிறந்ததோர் உலகை அமைக்க உதவும் எனவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொருவரும் தங்களின் செயல்கள் பற்றி மனச்சான்றை ஆழ்ந்து பரிசோதித்துப் பார்க்காமல் பலநேரங்களில் ஏழைகளின் இருப்பு தொந்தரவாக நோக்கப்படுகின்றது மற்றும் சிலநேரங்களில் உலகில் ஏழ்மைக்கு அவர்கள் குற்றம் சாட்டப்படுகிறார்கள் என்றும் கூறினார்.
சமத்துவமற்று வாழ்கின்ற பல குடும்பங்களின் நிலையைப் பார்ப்பதற்கு நம் கண்கள் திறக்கப்படவேண்டும் எனவும், வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு அவர்களின் மாண்பு மீட்டுருபெறவேண்டும் எனவும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, ஏழைகளின் குரல்கள் கேட்கப்படுவதற்கு இதுவே ஏற்ற காலம் என்றும் கூறினார்.
அசிசி நகரின் புனித பிரான்சிசின் வாழ்வு பற்றியும் எடுத்துரைத்த திருத்தந்தை, தங்களின் அழுகுரலை ஆண்டவர் கேட்கவேண்டும் என்பதற்காகவே, இந்த ஆலயத்தில் வறியோர் கூடியிருக்கின்றனர் என்றும் கூறினார். போர்சியுன்குலா சிற்றாலயத்தைச் சுட்டிக்காட்டிப் பேசிய திருத்தந்தை, ஆண்டவர் நம்மை ஒருபோதும் தனியே விட்டுவிடுவதில்லை மற்றும், நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் எப்போதும் நம்மோடு உடன்இருக்கிறார் என்பதை நினைவுபடுத்துகின்றது என்றும் கூறினார்.
உண்மையான உடன்பிறந்த உணர்வு, விருந்தோம்பல் மற்றும், குழும உணர்வுக்கு இட்டுச்செல்லும் என்றுரைத்த திருத்தந்தை, இவை இல்லாதபோது, அச்சம், பொறாமை, புறக்கணிப்பு மற்றும் தன்னலத்தைப் பெற்றெடுக்கும் என்று திருத்தந்தை கூறினார். ஒரு புன்னகை, எளிமை மற்றும், கனிவின் வெளிப்பாடு எனவும், இது தனக்கும் மற்றவருக்கும் நன்மை பயக்கும் எனவும் திருத்தந்தை கூறினார்.