Namvazhvu
புனித பிரான்சிஸ் . திருமுழுக்குப்பெற்றோர் புனிதத்துவத்திற்கு அழைப்புப் பெற்றுள்ளனர்
Thursday, 18 Nov 2021 04:29 am
Namvazhvu

Namvazhvu

திருமுழுக்குப்பெற்ற அனைவரும் புனிதத்துவத்திற்கு அழைப்புப் பெற்றுள்ளார்கள் என்பதை உணர்ந்தவர்களாக, தங்களின் தனிப்பட்ட, குடும்ப, சமுதாய மற்றும் ஆன்மீக வாழ்வில், திருமுழுக்கு மற்றும் உறுதிப்பூசுதலின் அருளை வெளிப்படுத்துபவர்களாக, இயேசுவின் குருத்துவத்தில் பொதுநிலையினர் பங்குபெறுகின்றனர் என, நவம்பர் 15 ஆம் தேதி திங்கள்கிழமை, திருத்தந்தை பிரான்சிஸ், பிரான்சிஸ்கன் பொதுநிலையினர் சபையின் அங்கத்தினர்களை, திருப்பீடத்தில் சந்தித்தபோது உரைத்தார்.

பிரான்சிஸ்கன் பொதுநிலையினர் சபையைச் சேர்ந்தவர்களிடம் புனிதத்துவத்திற்கு விடப்பட்டுள்ள அழைப்பு, மனமாற்றத்திற்கும், இறைவனால் கவரப்பட்டு ஆளப்படுவதற்கும் விடப்பட்டுள்ள அழைப்பாகும், என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாவப்பரிகாரச் செயல்களை ஆற்றுவது, மனமாற்றத்திற்கான பாதை என, அசிசியின் புனித பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளத்தைச் சுட்டிக்காட்டினார்.

தான் பாவத்தில் இருந்தபோது, தொழுநோயாளர்களை சந்திப்பது தனக்கு கசப்பான அனுபவமாக இருந்ததாகவும், மனமாற்றத்தின் பாதையில் இறங்கியபோது, அதுவே மகிழ்ச்சியைத் தரும் நடவடிக்கையாக மாறியதாகவும், அசிசியின் புனித பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள வார்த்தைகளை மேற்கோள்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளே முதல் அடியை எடுக்கவைத்து, புனித பிரான்சிஸ் அவர்களை வழிநடத்தினார் என எடுத்துரைத்தார்.

இயேசுவை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக விளங்கிய, அசிசியின் புனித பிரான்சிஸ் போல், அவர் சபையினர் அனைவரும் செயல்படவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை, நற்செய்தியை வாழ்வாக்குவதே இத்துறவுச்சபையினரின் தனிவரம் என்பதை நினைவூட்டி, ஏழ்மையிலும், தாழ்மையிலும் வாழ்வது அவர்களின் அடையாளமாக உள்ளது என எடுத்துரைத்தார்.

எக்காலத்திலும் ஏழைகளை மறந்துவிடாதீர்கள் என்ற அழைப்பையும் அவர்களுக்கு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரான்சிஸ்கன் பொதுநிலை சபையினர், ஏழைகளுடன் அருகாமையையும், கருணையையும், கனிவையும் கொண்டவர்களாக தொடர்ந்து செயல்படட்டும் என வாழ்த்தினார். இன்றையத் துயர்களை உலகிலிருந்து களைய முனைவதன் வழி, நாளைய நம்பிக்கைகளுக்கு உரமூட்டுங்கள் என திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்புவிடுத்தார்.