நவம்பர் 15 ஆம் தேதி, திங்கள் காலை, குரோவேஷிய அரசுத்தலைவர் சோரன் மிலானோவிக் அவர்கள், திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்து உரையாடினார். திங்கள் காலை உள்ளூர் நேரம் 10 மணிக்கு திருத்தந்தையை சந்தித்து ஏறக்குறைய 30 நிமிடங்கள் உரையாடிய குரோவேஷிய அரசுத்தலைவர், அதன்பின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவுகள் நிலவிவருவது குறித்த மகிழ்வு இந்த சந்திப்புகளின்போது வெளியிடப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு மேலும் முன்னேற்றப்பட வேண்டும் என்ற ஆவலும் தெரிவிக்கப்பட்டதாக திருப்பீடத் தகவல் தொடர்புத்துறை தெரிவித்தது. போஸ்னியா மற்றும் ஹெர்சோகோவினாவில் வாழும் குரோவேஷிய மக்களின் இன்றைய நிலைகள் குறித்து உரையாடிய இவர்கள், அனைத்துலக மற்றும் தல விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடலை மேற்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பின்போது, குரோவேஷிய அரசுத்தலைவருக்கு, திராட்சைப் பழங்கள் சேகரிப்பதை சித்தரிக்கும் வண்ணக்கற்கள் பதித்த, மொசைக் ஓவியம் ஒன்றை திருத்தந்தை பரிசளித்தார்.