ஒன்றிய பிரதேசமான தாத்ரா ஹவேலி, இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மண்டி, மத்திய பிரதேசத்தில் உள்ள கன்ட்வா ஆகிய மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கும் மேலும், அஸ்ஸாம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், இமாச்சல்பிரதேசம், மேகாலயா, பீகார், கர்நாடகா, ராஜஸ்தான், ஆந்திர பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, மிசோரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள 29 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அக்டோபர் 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
பாஜக ஆளும் இமாச்சல் பிரதேசத்தில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரசே வெற்றி பெற்றது; பாஜக ஆளும் கர்நாடகாவில் நடைபெற்ற இரண்டு தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே பாஜக வென்றுள்ளது; கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் சொந்த மாவட்டத்தில் உள்ள அங்கால் தொகுதியில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
மேற்கு வங்கத்தில் நான்கு தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரசிடம் பாஜக தோற்றுள்ளது. அதில் இரண்டு இடங்களை திரிணாமுல் காங்கிரஸ் பாஜகவிடமிருந்து கைப்பற்றியுள்ளது. இரண்டு இடங்களில் 1,90,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோற்கடிக்கப்பட்டுள்ளது. மோடி-அமித்ஷாவின் முற்றுகை இத்துடன் முடிவுக்கு வந்துள்ளது. மேற்கு வங்கத்தில் பாஜக நான்கு தொகுதிகளில் மூன்றில் டெபாசிட் இழந்துள்ளது; மோடியும் அமித்ஷாவும் திரும்பத் திரும்ப முகாமிட்டு நாடாளுமன்றத் தேர்தலில் வளர்த்த பாஜகவின் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது.
ராஜஸ்தானில் இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ், பாஜகவை டெபாசிட் இழக்க வைத்துள்ளது.
மகாராஷ்டிராவில் பத்வேல் தொகுதியில் தத்ரா நாகர் ஹவேலித் மக்களவைத் தொகுதியில் சிவசேனா வென்றுள்ளது. ராஜஸ்தானில் இரண்டு தொகுதிகளையும் காங்கிரஸ் வென்றுள்ளது.
மூன்று மக்களவைத் தொகுதியில் ஒன்றை மட்டுமே பாஜக வென்றுள்ளது; சட்டப் பேரவை இடைத்தேர்தலில் 16 இடங்களில் நேரடியாக எதிர்க்கட்சிகளிடம் பாஜக தோல்வியடைந்துள்ளது. இதனால் இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியே வெற்றிபெறும் என்ற சூத்திரம் சுக்குநூறாக தகர்க்கப்பட்டிருக்கிறது.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு, பெட்ரோல்-டீசல்-கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, தனியார்மயமாக்கல், மதத்தின் பெயரால் வன்முறை, கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் புலம்பெயர்வு, வேலைவாய்ப்பின்மை, பணவீக்க விகிதம் உயர்வு, வங்கிகளில் வட்டி குறைப்பு, விலைவாசி உயர்வு.. இந்திய குடியுரிமை சட்டம் என பிரச்சினைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அடுத்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் இமாச்சல் பிரதேசத்தில் இந்த இடைத்தேர்தலில் பாஜக மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கிறது; மண்டி மக்களவைத் தொகுதிக்கும் மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்று பாஜகவுக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது; இமாச்சல்பிரதேசத்தின் பாஜக முதல்வர் ஜெயராம் தாக்கூரும் பாஜகவின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவும் மண்டி மக்களவைத் தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் பாஜக அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது. இமாச்சலில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில்
மூவாயிரத்திற்கும் குறைவான வாக்குகளை வாங்கி மண்ணைக் கவ்வியுள்ளது.
மண்டி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மனைவி பிரதீபா சிங், பாஜகவின் பிரிகேடியர் குஷால் தாக்கூரை 8766 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறார்; ஒரு மக்களவைத் தொகுதி, மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகள் என அனைத்திலும் பாஜகவின் தோல்வி, அதன் சரிந்த செல்வாக்கிற்கு அத்தாட்சியாகும்.
மற்றொருபுறம் அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற ஐந்து சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியும் பீகாரில் இரண்டு தொகுதிகளில் அதன் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளன. தெலுங்கானாவில் உள்ள
ஹூசாராபாத் தொகுதியில் தெலுங்கான ராஷ்டிர சமிதியின் வேட்பாளரை வென்று பாஜக தன் வளர்ச்சியை நிரூபித்துள்ளது. ஹரியானாவில் ஏல்னாபாத் தொகுதியில் இந்திய தேசிய லோக்தள் கட்சி வேட்பாளர் அபய் சிங் சௌதாலா பாஜக வேட்பாளரை 1739 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் டெபாசிட் இழந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். விவசாயிகள் போராட்டம் வலிமையாக உள்ள ஹரியானாவில் பாஜக தோற்றுள்ளது.
மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இரண்டில் பாஜகவும் ஒன்றில் காங்கிரசும் வெற்றிப்பெற்றுள்ளன.
பொதுவாகவே இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிகளுக்கு சாதகமாகவே முடிவுகள் அமைவது வழக்கம். இமாச்சல்பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுங்கட்சியான பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது அதன் செல்வாக்கு சரிந்துள்ளது என்பதை நிருபிக்கிறது.
இடைத்தேர்தல்களில் பாஜக சந்தித்த தோல்வியின் காரணமாகத்தான், அதன் முடிவுகள் வந்த சில மணி நேரங்களிலேயே பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இடைத்தேர்தல் தந்த அதிர்ச்சி, ஆளும் பாஜகவை அசைத்துப்பார்த்துள்ளது என்பது நிரூபணமாகிறது.
பிரியங்கா காந்தி வதோராவின் உத்திரபிரதேச முற்றுகை யோகி ஆதித்யநாத்தை ஆட்டங்கானச் செய்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜக வசம் உள்ள உத்திரபிரதேசத்தை எப்படியாவது ‘கை’ப்பற்ற காங்கிரஸ் முயற்சிக்கிறது. அதிரடி இலவச சலுகைகளை அறிவித்து பெண் வாக்காளர்களை பிரியங்கா காந்தி ஈர்த்து வருகிறார். மக்கள் உரிமைகளுக்காக களமாடுகிறார்.
கோவாவுக்கு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற மோடி முயற்சிக்கிறார்; திருத்தந்தையுடனான சந்திப்பும் இந்தியாவிற்கு வர வேண்டும் என்ற அவர்தம் அழைப்பும் இதனை உறுதிப்படுத்துகிறது.
கர்நாடகாவில் மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வர முயற்சிக்கும் பாஜகவை அப்புறப்படுத்த வேண்டும் என்று அங்குள்ள சிறுபான்மையினரும் கிறிஸ்தவர்களும் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றனர்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேர்தல்மூலம் கோலோச்சி வரும் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது.
‘ஒத்த ஓட்டு-பாஜக’ என்பது தமிழகம் இந்தியாவிற்குத் தந்த பரிசு. வட இந்திய மாநிலங்களில் பாஜகவின் சரிவை இந்த இடைத்தேர்தல் நிரூபித்துள்ளது. அதிகார பலம், பண பலம் இவற்றைத் தாண்டி, பாஜக அல்லாத கட்சிகள் வென்றுள்ளன என்பது மகிழ்ச்சியான நற்செய்தி.