அகில உலக கத்தோலிக்கத் திருஅவை, ‘ஒருங்கியக்க கூட்டுத் திருஅவைக்காக - ஒன்றிப்பு, பங்கேற்பு, மறைப்பணி’ என்ற தலைப்பில் மற்றொரு மாமன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளது. இரண்டாம் வத்திக்கான் சங்கம் திருஅவை ஒன்று சேர்ந்து பயணிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு பங்கேற்பு அமைப்புகளை ஏற்படுத்தியது. அவற்றுள் முக்கியமான ஒன்று ஆயர்கள் மாமன்றம் என்று கூறலாம்.
1983 ஆம் ஆண்டு, கொண்டு வரப்பட்ட, ‘திருத்தப்பட்ட இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்க திருஅவைச் சட்டத்தொகுப்பும்,’ இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் போதனைகளை உள்வாங்கி ஆயர்கள் மாமன்றம், மறைமாவட்ட மாமன்றம், ஆயர்கள் பேரவை, மறைமாவட்ட மேய்ப்புப்பணிக் குழு, மறைமாவட்ட நிதிக்குழு, பங்குமேய்ப்புப்பணிக் குழு, பங்கு நிதிக்குழு போன்ற பல்வேறு பங்கேற்பு அமைப்புகளை ஏற்படுத்தியது. திருமுழுக்குப் பெற்ற அனைவரும் தூய ஆவியாரின் துணையால் “நானே வழியும், உண்மையும்” என்ற இயேசுவின் பாதையில் இறைவார்த்தையின் அடிப்படையில் ஒன்று சேர்ந்து பயணித்து நற்செய்திப் பணியாற்றுவதே அத்தகைய பங்கேற்பு அமைப்புகளின் நோக்கமாகும்.
நோக்கமும் செயல்படும் விதமும்
இலத்தீன் வழிபாட்டு முறை கத்தோலிக்க திருஅவைச் சட்டத்தொகுப்பின் சட்ட எண்கள் 342 முதல் 348 வரை ஆயர்கள் மாமன்றம் பற்றி கூறுகிறது. சட்ட எண். 342 ஆயர் மாமன்றம் என்றால் என்ன? என்றும் அதன் நோக்கத்தையும் தெளிவுபடுத்துகிறது: “ஆயர் மாமன்றம் என்பது உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, குறிப் பிட்ட காலங்களில் ஒன்று கூடும் ஆயர்களின் குழுவாகும். இந்த ஆயர்கள் உரோமைத் தலைமைக் குருவுக்கும், ஆயர்களுக்குமிடையே மிக நெருக்கமான ஒற்றுமையைப் பேணிவளர்க்கின்றனர். விசுவாசம், ஒழுக்க நெறிகளைப் பாதுகாக்கவும், வளர்க்கவும், திருச்சபை ஒழுங்குமுறைகளைக் காக்கவும் உறுதிப்படுத்தவும், உலகில் திருச்சபைப் பணியைப் பொறுத்தவரையில் ஆய்வுக்குரிய ஆலோசனையால் உரோமைத் தலைமைக் குருவுக்கு உதவி புரிகின்றனர்”. ஆயர்கள் மாமன்றத்தில் உலகின் அனைத்து ஆயர்களும் பங்கெடுப்பதில்லை. ஆயர் பேரவையால் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டுமே
பங்கெடுப்பர். திருத்தந்தையும், ஆயர் மாமன்றத்தில் பங்கெடுக்கும் மற்ற உறுப்பினர்களை நிர்ணயிப்பார்.
சட்ட எண். 343 ஆயர் மாமன்றத்தின் கடமையையும், அதன் வரையறையையும் தெளிவுபடுத்துகிறது: “முன் வைக்கப்பட்ட காரியங்களைப் பற்றி ஆய்வு செய்வதும், அவற்றைப் பற்றிய தங்கள் கருத்துகளை எடுத்துரைப்பதும் ஆயர் மாமன்றத்திற்கு உரியது. ஆனால், அவற்றுக்குத் தீர்வு காண்பதோ அவற்றைப் பற்றி ஆணைகள் வெளியிடுவதோ ஆயர் மாமன்றத்திற்கு உரியதன்று. ஆயினும் ஒரு சில காரியங்களில் உரோமைத் தலைமைக்குரு மாமன்றத்திற்குத் தீர்மான அதிகாரம் வழங்கினால் அவற்றின் தீர்மானங்களை உறுதி செய்வது அவருக்கு உரியது.” இதன் மூலம் கீழைக் கத்தோலிக்கத் திருஅவைகளின் மாமன்றத்துக்கும் இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்கத் திருஅவையின் மாமன்றத்துக்கும் உள்ள வித்தியாசத்தையும் தெரிந்துகொள்ளலாம். கீழைக் கத்தோலிக்கத் திருஅவைகளில் மாமன்றம் அதன் வாழ்வு மற்றும் நிர்வாகத்துடன் ஒன்றிணைந்துள்ளது மற்றும் மாமன்றம் சட்டம் இயற்றும் அதிகாரத்தையும் கொண்டுள்ளது.
இலத்தீன் வழிபாட்டு முறை கத்தோலிக்கத் திருஅவையில் திருத்தந்தை விரும்புகிறபோது ஆயர்கள் மாமன்றத்தை அழைப்பார். மாமன்றத்துக்கென அகில உலக அளவிலான மாமன்ற செயலகம் உரோமையில் செயல்படுகிறது. இச்செயலகம், காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப திருஅவைக்குத் தேவையான காரியங்களைப் பற்றி விவாதிக்க வேண்டிய பொருளைத் தெரிவு செய்து உலகம் முழுவதும் உள்ள ஆயர்களுக்கு அனுப்பிவைக்கும். ஆயர்களும் தத்தமது தலத்திருஅவையில் அக்காரியங்களைப் பற்றி விவாதித்து அதன் அறிக்கையை மாமன்ற செயலகத்துக்கு அனுப்பிவைப்பர். அதன் அடிப்படையில் விவாத அறிக்கை தயாரிக்கப்பட்டு மாமன்றத்தில் பங்கெடுக்கும் உறுப்பினர்களால் விவாதிக்கப்படும். அதன் முடிவுகள் மற்றும் தீர்மானங்களின் அடிப்படையில் திருத்தந்தை ஒரு திருத்தூது அறிவுரை மடலை வெளியிடுவார் (காண்க: சட்ட எண்கள் 346-348). 2015 ஆம் ஆண்டு “குடும்பங்கள்” என்னும் தலைப்பில் நடந்த ஆயர்கள் மாமன்றத்துக்குப் பின்னர் “அன்பின் மகிழ்ச்சி” (Amoris Laetitia) என்னும் திருத்தூது அறிவுரை மடலை திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டார். அதேபோன்று 2018 ஆம் ஆண்டு இளைஞர்கள் பற்றிய மாமன்றத்துக்குப் பின்னர் ‘கிறிஸ்து வாழ்கிறார்’ (Christus Vivit) என்னும் திருத்தூது அறிவுரை மடலையும் திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டார். இவை எவ்வாறு இவ்வுலகில் திருஅவையினர் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதற்கான மாமன்றத்தின் ஆக்கப்பூர்வமான வழிகாட்டுதல்கள் ஆகும்.
‘ஆயர்கள் மாமன்றம்’ மூன்று வகைப்படும் (காண்க: சட்ட எண். 345): 1. சாதாரண மாமன்றம், 2. அசாதாரண மாமன்றம், 3. சிறப்பு மாமன்றம். உலகளாவிய திருஅவையின் நலன்களுக்காக, தேவைகளின் அடிப்படையில் விவாதிக்க கூடுவது சாதாரண மாமன்றமாகும். தற்போது துவங்கியுள்ள மாமன்றத்தையும் சேர்த்து 1965 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 16 சாதாரண மாமன்றங்கள் கூடியுள்ளன. பெயரே விளக்குவது போன்று மிக முக்கியமான அவசியமான மற்றும் அவசரமான காரணங்களுக்காக கூடுவது அசாதாரணமான மாமன்றமாகும். இதுவரை 3 அசாதாரணமான மாமன்றங்கள் கூடியுள்ளன. சிறப்பு மாமன்றங்கள் என்பது உலகின் ஒவ்வொரு பகுதியின் அதாவது கண்டங்கள் அல்லது நாடுகளின் நலன்களுக்காக கூடுவதாகும். இதுவரை 11 சிறப்பு மாமன்றங்கள் கூடியுள்ளன. அவற்றுள் இரண்டு முறை ஐரோப்பிய கண்டத்தின் நலன்களுக்காகவும், இரண்டுமுறை ஆப்பிரிக்க கண்டத்தின் நலன்களுக்காகவும் கூட்டப்பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டு, அமேசான் பகுதி மக்களின் நலன்களுக்காக சிறப்பு மாமன்றம் கூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வித்தியாசமான ஆயர் மாமன்றம் 2021-23
தற்போது துவங்கியுள்ள ஆயர் மாமன்றம் இதுவரை நடந்த மாமன்றங்களைவிட சற்று வித்தியாசப்பட்டுள்ளதை நாம் கவனிக்கலாம். மாமன்றத்தின் தலைப்பே மாமன்றத்தைப் பற்றியே அமைந்திருக்கிறது: “கூட்டொருங்கியக்கத் திருஅவைக்காக: ஒன்றிப்பு, பங்கேற்பு, நற்செய்திப்பணி”. வழக்கமாக தெரிந்தெடுக்கப்படும் தலைப்புகளைவிட இறைமக்கள் அனைவரும் திருஅவையில் ஒன்றிணைந்து இயேசு காட்டிய பாதையில் தூய ஆவியாரின் வழிநடத்துதலால், இறைவார்த்தையின் அடிப்படையில் மாறிவரும் இன்றைய காலகட்டத்தில் எவ்வாறு பயணிக்க வேண்டும் என்று விவாதிக்க அழைக்கிறது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த மாமன்றம் நடைபெறும் விதத்தையும் முற்றிலும் மாற்றியமைத்துள்ளார். வழக்கமாக நடைபெறும் முறையில் அல்லாமல் இறைமக்கள் அனைவரும் இம்மாமன்றத்தில் பங்கெடுக்கும் விதமாக மூன்று கட்டங்களாக இம்மாமன்றம் நடைபெற வேண்டும் என்று விரும்பி அதற்கான ஏற்பாடுகளை அறிவித்துள்ளார். உண்மையில் 2022 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் இம்மாமன்றம் உரோமையில் வழக்கம் போல் நடைபெறும் என்றுதான் முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிலும் வித்தியாசம் மற்றும் அர்த்தம் வேண்டும் என்றுவிரும்புகிற திருத்தந்தை அவர்கள் 2021 ஆம் ஆண்டு, ஏப்ரல் 22 ஆம் நாள் வெளியிட்ட அறிவிப்பில் எல்லா இறைமக்களும் இம்மான்றத்தில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுக்கும் விதமாக இம்மாமன்றம் மூன்று கட்டங்களாக நடைபெற வேண்டும் என்று அறிவித்தார்.
அதன்படி முதல் கட்டமானது தலத் திருஅவை அளவில் உலகில் உள்ள ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் 2021 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் முதல் 2022 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் வரை நடைபெறுகிறது. மறைமாவட்ட அளவில் எல்லா மக்களும் விவாதிக்க வேண்டிய கேள்விகளையும் அனுப்பி அந்தந்த பகுதிகளின் தேவைகளுக்கு ஏற்ப கேள்விகளைத் தெரிந்தெடுத்து மக்கள் அனைவரும் தத்தமது கருத்துக்களைத் தெரிவிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. திருஅவையைவிட்டு விலகியவர்கள், திருஅவைக்கு எதிராக இருப்பவர்கள், சமூகத்தில் விளிம்புநிலையில் உள்ளவர்கள் மற்றும் சமூகத்தில் பல்வேறு நிலைகளில் உள்ளவர்கள், பிறமத சகோதர-சகோதரிகள் போன்றவர்களின் கருத்துக்களையும் கேட்டறிவது மிகவும் முக்கியமானது என்றும் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. அவர்கள் கூறும் கருத்துக்களைத் தேர்ந்து, தெளிந்து அதனை அறிக்கையாக ஒவ்வொரு மறைமாவட்டமும் அனுப்பி வைக்க வேண்டும்.
மறைமாவட்ட அளவில் ஒன்று சேர்க்கப்பட்ட கருத்துக்கள், இரண்டாவது கட்டமாக 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் வரை உலகில் உள்ள கண்டங்கள் அளவில் விவாதிக்கப்பட்டு அறிக்கை தயாரிக்கப்படும். அந்த அறிக்கை இறுதியாக 2023 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் உரோமையில் நடைபெறும் மாமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
உலகில் உள்ள பல்வேறு நிலைகளில் உள்ள மக்களின் குரலுக்குச் செவிமடுக்க வாய்ப்பு அளித்தன் மூலம் ஒன்றிணைந்து பயணிக்கும் திருஅவையின் இயல்பு மீண்டும் உறுதி படுத்தப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும். திருஅவை என்பது ஆயர்கள், குருக்கள் மற்றும் துறவியரை மட்டுமே உள்ளடக்கியது என்னும் தவறான கருத்து நீங்கி, இறைமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து திருஅவையின் வாழ்வில் தத்தமக்குரிய வரங்களையும் ஆற்றல்களையும் பயன்படுத்தி நற்செய்திப்பணியில் ஈடுபட்டு இறையரசின் உறுப்பினர்களாக வாழ வேண்டும் என்பதே இம்மாமன்றத்தின் நோக்கமாகும்.