நற்செய்தியை நம் வாழ்வின் மையமாகக் கொண்டு, உடன் பிறந்த உணர்வுடன் கூடிய அன்பில் அதற்கு சான்றுபகரும்போது, வருங்காலத்தை நம்மால் நம்பிக்கையுடன் எதிர்நோக்கமுடியும் என, நவம்பர் 22 ஆம் தேதி திங்கள்கிழமை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.
நாம் நம் வாழ்வின் மையமாக நற்செய்தியை வைத்து, உடன்பிறந்த உணர்வுடன் கூடிய அன்பில் அதற்கு சான்றுபகரும்போது, இன்று நாம் எதிர்நோக்கும் அனைத்துவிதமான, சிறிய மற்றும் பெரிய புயல்களையும் தாண்டி, வருங்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்க உதவும், என்கிறது திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி.
மேலும், இத்திங்கள் காலையில், வத்திக்கான் அருங்காட்சியகத்தின் நிர்வாகத்துறைகளின் துணை இயக்குனர் அருள்பணி பாலோ நிக்கோலினி, செக் குடியரசிற்கான திருப்பீடத் தூதர், பேராயர் சார்லஸ் டேனியல் பால்வோ, இரஷ்யா மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கான திருப்பீடத் தூதர், பேராயர் கியோவானி டி அனிலோ, உலகில் பிரெஞ்ச் மொழி பேசும் மக்கள் அமைப்பான லா பிராங்கோபோனி அமைப்பின், பொதுச்செயலர் லுயிஸ் முஷிகிவாபோ அவர்களையும், திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.
இத்திங்களன்று காலையில், திருப்பீடத்திற்கான புதிய தூதராக பெரு நாட்டால் நியமிக்கப்பட்டுள்ள ஜோர்ஜ் எடுயார்தோ ரோமன் மோரி, அவர்களிடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்று, அவரை, வத்திக்கான் நாட்டிற்கான பெரு நாட்டுத் தூதராக திருத்தந்தை பிரான்சிஸ் வரவேற்றார்.