Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் அன்பு, மற்றவரின் வளர்ச்சியைக் காணும்போது அகமகிழும்
Friday, 26 Nov 2021 05:34 am
Namvazhvu

Namvazhvu

அன்பு, மகிழ்ச்சியும், துயரமும் அடைகின்ற நேரங்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 23 ஆம் தேதி செவ்வாயன்று, தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் வெளியிட்ட குறுஞ்செய்தியில் தெளிவுபடுத்தியுள்ளார்.

அன்பு, மற்றவரின் வளர்ச்சியைக் காணும்போது அகமகிழும் மற்றும் தனிமையிலும், நோயிலும், வீடற்றும், வெறுத்து ஒதுக்கப்படுகையிலும், தேவையின் நெருக்கடியிலும் மற்றவர் இருக்கும்போது துயருறும் என்று, தன் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ள திருத்தந்தை, அன்பு, இதயத்தைத் துடிக்கச்செய்யும் எனவும், அது, பகிர்வு மற்றும் ஒருங்கிணைப்பு, ஆகியவற்றின் பிணைப்புகளை உருவாக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அன்பு, ஒருவரை, அவரது கவலைகள், ஏக்கங்கள் போன்றவற்றின்று வெளியேறச் செய்து, மற்றவரின் நிலைகளைப் புரிந்துகொள்ளச்செய்யும் என்றும், திருத்தந்தை, அக்குறுஞ்செய்தியில் பதிவுசெய்துள்ளார்.

இன்னும், நவம்பர் 22 ஆம் தேதி திங்கள் மாலையில், உரோம் நகரில், இத்தாலிய ஆயர்களின் 75வது சிறப்பு ஆண்டுக் கூட்டத்தைத் துவக்கிவைத்து, நல்ல ஆயர் என்ற திருவுருவப் படத்தையும், “ஆயரின் நற்பேறுகள்என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றையும், ஆயர்களுக்கு வழங்கி, அவர்களின் பணிகளை திருத்தந்தை பிரான்சிஸ் ஊக்கப்படுத்தினார்.

உரோம் நகரின் எர்ஜிப் பயணியர் விடுதியில் 75வது சிறப்பு கூட்டத்தை துவக்கியுள்ள இத்தாலிய ஆயர்கள், இத்தாலியத் திருஅவையின், ஒருங்கிணைந்த பயணம் என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் 16வது உலக ஆயர்கள் மாமன்றத் தயாரிப்புகள் குறித்து   கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.