நவம்பர் 23 ஆம் தேதி செவ்வாயன்று திருப்பீட கலாச்சார அவை இணையம்வழி நடத்திய மெய்நிகர் ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகளுக்கு, காணொளிச் செய்தி ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பியுள்ளார்.
“மானுடவியல்பற்றிய மீள்சிந்தனை: மனிதகுல நலக்கோட்பாட்டின் அவசியம்” என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தின் முக்கியத்துவத்தை, தன் செய்தியில் எடுத்துரைத்த திருத்தந்தை, கோவிட் பெருந்தொற்று, கடவுள், மற்றும் மனிதரின் இருப்பு பற்றிய அடிப்படைக் கேள்விகளை நம்முன் எழுப்பியுள்ள இவ்வேளையில், இந்த தலைப்புபற்றி சிந்திப்பது, காலத்தின் கட்டாயமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
மனித குல நலக் கோட்பாடு
மனிதகுல நலக்கோட்பாட்டின் உலகப்போக்குச் சிந்தனை, மனித நலம்பற்றிய கிறிஸ்தவக் கண்ணோட்டத்திற்குச் சவாலாக உள்ளது என்றும், “மனுவுரு எடுத்த கடவுளின் மதம், தன்னையே கடவுளாக ஆக்கும் மனிதனின் மதத்தைச் சந்தித்தது” என்றும், திருத்தந்தை புனித 6 ஆம் பவுல் அவர்கள் கூறிய வார்த்தைகளையே, இந்த தலைப்பு (டிச.7,1965, 2ம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் நிறைவு நிகழ்வு) நினைவுபடுத்துகின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
திருத்தந்தை புனித 6 ஆம் பவுல் அவர்கள், இந்த உலகப்போக்குச் சிந்தனைக்கு மாறாக, முன்வைத்த நல்ல சமாரியரின் எடுத்துக்காட்டே, 2 ஆம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை வழிநடத்தியது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது நடந்து ஏறத்தாழ அறுபது ஆண்டுகள் ஆகியும், மனித குலத்தின் நலம்பற்றிய உலகப் போக்குகொண்ட, சர்வாதிகார கருத்தியல் பல அரசுகளில் நிவுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மனிதர் யார்? என்ற கேள்வியே, மனிதகுல நலக்கோட்பாட்டிலிருந்து முதலில் எழுகின்றது எனவும், இக்காலத்தில் பல்வேறு துறைகளில் மனித அறிவின் சாதனைகளைக் காணமுடிகின்றது எனவும் கூறியத் திருத்தந்தை, இவற்றுக்கு மத்தியில், திருஅவை, நம்பிக்கை மற்றும் துணிச்சலோடு, கிறிஸ்தவ கண்ணோட்டம் பற்றிய மனிதரின் நலத்திற்கு பணியாற்றவேண்டும் என்று கூறினார்.
இக்கால மனிதர்கள் ஒருவர் ஒருவரோடு உறவுகொள்ள அழைக்கப்பட்டுள்ள இவ்வேளையில், இன்றைய உலகில், ஓர் ஆணாக அல்லது ஒரு பெண்ணாக இருப்பதன் அர்த்தம் என்ன? தந்தைமை, தாய்மை என்ற சொற்கள் கூறும் அர்த்தம் என்ன? கருவிகள் மற்றும் மற்ற உயிர்களிடமிருந்து மனிதரைப் பிரித்துக் காட்டுவது எது, மனிதரின் தனித்துவம் என்ன? போன்ற கேள்விகளையும் திருத்தந்தை எழுப்பியுள்ளார்.