பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகள், அவர்களை மட்டும் காயப்படுத்தவில்லை, மாறாக, முழு சமுதாயத்திற்கும் ஊறுவிளைவிக்கின்றன என அமெரிக்க நாடுகளின் கூட்டமொன்றில் திருப்பீடப் பிரதிநிதி ஒருவர்உரையாற்றினார்.
நவம்பர் 25 ஆம் தேதி, வியாழனன்று, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் களையப்படுவதற்காக கடைபிடிக்கப்பட்டட உலக நாளையொட்டி, ஓஏஎஸ் எனும் அமெரிக்க கண்டத்தின் நாடுகளின் அமைப்பின் சிறப்புக்கூட்டத்தில் உரையாற்றிய, அவ்வமைப்பிற்கான திருப்பீடப் பிரதிநிதி, பேரருட்திரு ஜீன் ஆன்டோநியோ குருஸ் செரானோ அவர்கள், பெண்களுக்கு எதிரான வன்முறை, சமுதாயத்திற்கு இழைத்துள்ள காயங்கள் குறித்து சிந்திக்க இந்நாள் அழைப்புவிடுக்கிறது என தெரிவித்தார்.
பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகள் குறித்து நாம் அக்கறையற்றிருக்க முடியாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய வார்த்தைகளையும் சுட்டிக்காட்டிய பேரருட்திரு ஜீன் ஆன்டோநியோ குருஸ் செரானோ அவர்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளில், அவர்கள், போகப்பொருளாக நடத்தப்பட்டு, பின்னர் தூக்கியெறியப்படும் மனப்பான்மை குறித்து, ஆழ்ந்த கவலையை வெளியிட்டார்.
மனிதர்கள் வியாபாரப் பொருட்களாகக் கடத்திச் செல்லப்படுவதில், 87 விழுக்காடு, பாலியல் வன்கொடுமைகளுக்காக இடம்பெறுகின்றன என்பதை சுட்டிக்காட்டிய திருப்பீடப் பிரதிநிதி, சில பகுதிகளில் கடத்தப்படுபவர்களுள் 60 விழுக்காட்டினர், இளவயது சிறுமியர் எனவும் எடுத்துரைத்தார்.
பெண்கள் இந்த சமுதாயத்திற்கு ஆற்றிவரும் பங்களிப்பையும், அவர்களின் மாண்பையும், திருப்பீடம் தன் அனைத்து நிறுவனங்கள் வழியாக மதித்து ஏற்றுவருகிறது என்பதைச் சுட்டிக்காட்டிய பேரருட்திரு ஜீன் ஆன்டோநியோ குருஸ் செரானோ அவர்கள், ஒவ்வொரு பெண்ணும் மதிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, மதிப்புடன் நடத்தப்படவேண்டும், மற்றும் அவர்களின் துயரக் குரல்கள் செவிமடுக்கப்படவேண்டும் என்பதற்கான அர்ப்பணத்தை திருப்பீடம் மீண்டும் உறுதிப்படுத்துகின்றது என குறிப்பிட்டார்.
ஒவ்வொரு நாட்டிலும், பெண்களின் மாண்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் இடம்பெறவேண்டியதன் அவசியத்தையம் திருப்பீடம் வலியுறுத்துவதாக மேலும் திருப்பீடப் பிரதிநிதி, பேரருட்திரு ஜீன் ஆன்டோநியோ குருஸ் செரானோ தெரிவித்தார்.