‘மாற்றுத்திறன் கொண்டோரே, உங்கள் ஒவ்வொருவர் மீதும் தாய் திருஅவை அன்பு கொள்கிறார், திருஅவையின் நற்செய்திப் பணியை நிறைவேற்ற நீங்கள் ஒவ்வொருவரும் தேவை’ என்ற சொற்களுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாற்றுத்திறன் கொண்டோர் உலக நாளுக்கென உருவாக்கியுள்ள செய்தி, நவம்பர் 25 ஆம் தேதி வியாழனன்று திருப்பீடத்தால் வெளியிடப்பட்டது.
ஒவ்வோர் ஆண்டும், டிசம்பர் 3 ஆம் தேதி, ஐ.நா. நிறுவனம் சிறப்பித்துவரும் மாற்றுத்திறன் கொண்டோர் உலக நாளுக்கென, "நீங்கள் என் நண்பர்கள்" (யோவான் 15:14) என்ற தலைப்பில், வெளியிடப்பட்டுள்ள இச்செய்தியை, மாற்றுத்திறனுடன் வாழ்ந்துவரும் உங்கள் அனைவரோடும் நான் நேரடியாகப் பேசவிழைகிறேன் என்ற சொற்களுடன் திருத்தந்தை துவக்கியுள்ளார்.
இயேசு நமது நண்பர், திருஅவை உங்கள் இல்லம், கடினமான நேரங்களில், ஒவ்வொருவருக்கும் உரிய நற்செய்தி, என்ற நான்கு பகுதிகளாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கியுள்ள இந்த உலக நாள் செய்தி, நவம்பர் 25 ஆம் தேதி வியாழனன்று, செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.
இயேசு நமது நண்பர்
நாம் இயேசுவின் நண்பர்களாய் இருப்போம் என்பதை, இயேசு தன் சீடர்களிடம் இரவுணவு வேளையில் கூறினார் (காண்க. யோவான் 15:14). இயேசுவுடன் கொண்டிருக்கும் நட்பு ஒருபோதும் உடைபடுவதில்லை. ஒரு சில வேளைகளில் அவர் மௌனம் காப்பதுபோல் தோன்றினாலும், அவர் நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை என்ற உறுதி தரும் சொற்களை, திருத்தந்தை தன் செய்தியில் பகிர்ந்துள்ளார்.
இயேசுவை நண்பராகக் கொண்டிருப்பது பெரும் ஆறுதல் என்று வலியுறுத்திக் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவரை நண்பராகக் கொண்டிருப்பதன் வழியே, நம் குறைகளை மன அமைதியுடன் ஏற்றுக்கொள்ள உதவுகிறது என்று எடுத்துரைத்துள்ளார்.
திருஅவை உங்கள் இல்லம்
திருமுழுக்கு பெற்ற நாம் அனைவரும், எவ்வித பாகுபாடும், ஒதுக்கப்படுதலும் இன்றி, திருஅவை குடும்பத்தின் முழுமையான உறுப்பினராக மாறுவதால், நாம் ஒவ்வொருவரும், நானே திருஅவை என்று தயக்கமேதுமின்றி பறைசாற்றலாம் என்ற கருத்தை, திருத்தந்தை தன் செய்தியின் இரண்டாவது எண்ணமாக வெளிப்படுத்தியுள்ளார்.
உலக ஆயர்கள் மாமன்றத்திற்காக அகில உலக திருஅவை முழுவதும் தற்போது தயாரித்துவரும் இவ்வேளையில், நாம் அனைவரும் ஒரே குடும்பம், இக்குடும்பத்தில் குறையுள்ள நாம் அனைவருமே இணைந்து பயணம் மேற்கொள்கிறோம் என்ற எண்ணம் இன்னும் நம்மில் ஆழமாக வேரூன்றவேண்டும் என்று திருத்தந்தை இச்செய்தியின் வழியே அழைப்பு விடுத்துள்ளார்.
பாகுபாடுகள் மனித சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும் காணப்படுகிறது என்பதை, வருத்தத்துடன் குறிப்பிடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த வேதனை நிறைந்த உண்மை, திருஅவையிலும் காணப்படுகிறது என்றும், இந்த பாகுபாடுகள் முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
மாற்றுத்திறன் கொண்டோர் சிலருக்கு அருளடையாளங்கள் தரப்படுவதில்லை என்பது, இந்தப் பாகுபாடுகளின் மிகக்கொடிய வடிவம் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, மாற்றுத்திறன் கொண்டோருக்கு அருளடையாளங்கள் வழங்கப்படுவதை தடைசெய்யும் உரிமை ஒருவருக்கும் கிடையாது என்று கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி தேளிவாகக் கூறியுள்ளது என்று கூறியுள்ளார்.
கடினமான நேரங்களில்
பெருந்தொற்று காலத்தில், மாற்றுத்திறன் கொண்டோர், பள்ளிக்குச் செல்வதற்கும், பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கும், இணையவழி கல்வி கற்பதற்கும் கூடுதல் தடைகள் விதிக்கப்பட்டன என்பதை வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இதே ஒதுக்கப்படுதல், திருஅவையின் ஒரு சில பகுதிகளில் இருப்பது தவறு என்பதையும், திருஅவை அனைவருக்கும் உரிய இல்லம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாற்றுத்திறன் கொண்டோரை பராமரிக்கும் இல்லங்களில் கோவிட் பெருந்தொற்றின் தாக்கம் கூடுதலாக இருந்தது என்பதை இச்செய்தியில் நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையும், திருத்தந்தையும் உங்களுக்கு மிக அருகில் உள்ளனர் என்பதை மறக்கவேண்டாம் என்ற உறுதிமொழியை, இப்பகுதியின் இறுதியில் பதிவுசெய்துள்ளார்.
ஒவ்வொருவருக்கும் உரிய நற்செய்தி
ஆண்டவருடன் நாம் கொண்டுள்ள நட்பின் வெளிப்பாடாக, நாம் கனிதரவும் நாம் தரும் கனி நிலைத்திருக்கவும் (காண்க. யோவான் 15:16) நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, ஆண்டவர் நம் ஒவ்வொருவரையும் புனிதத்தின் சிகரத்தை அடைய அழைப்பு விடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.
உடல் குறைபாடுகள் கொண்டோரும், மாற்றுத்திறன் கொண்டோரும் இயேசுவைச் சந்தித்தபின், முற்றிலும் மாற்றம் பெற்றனர் என்றும், அவர்கள், இயேசுவுக்கு சாட்சிகளாக மாறினர் என்றும் தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆண்டவரின் சாட்சிகளாக வாழ்ந்தனர் என்பதை எடுத்துரைத்துள்ளார்.
மாற்றுத்திறன் கொண்டோர் அனைவரையும், ஆண்டவரும், அன்னை மரியாவும் பாதுகாக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன், திருத்தந்தை, மாற்றுத்திறன் கொண்டோர் உலக நாளுக்கென வழங்கிய செய்தியை நிறைவு செய்துள்ளார்.