Namvazhvu
திருத்தூதுப்பயணம் சைப்ரஸ், கிரீஸ் திருத்தூதுப்பயணம்
Monday, 29 Nov 2021 10:32 am
Namvazhvu

Namvazhvu

 

டிசம்பர் 2 ஆம் தேதி வருகிற வியாழன்முதல், 6 ஆம் தேதி திங்கள்வரை, தான் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ள விருக்கும் சைப்ரஸ், மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 27 ஆம் தேதி சனிக்கிழமையன்று காணொளிச்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

வரலாறு, கலாச்சாரம் மற்றும் நற்செய்தியால் ஆசீர்வதிக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த உங்கள் பூமிக்கு வந்த மாபெரும் முதல் மறைப்பணியாளர்கள், குறிப்பாக, திருத்தூதர்கள் பவுல்,  பர்னபாஸ் ஆகிய இருவரின் அடிச்சுவடுகளில் மகிழ்ச்சியோடு வருகிறேன் என்று, தன் செய்தியைத் துவக்கியுள்ள திருத்தந்தை, வேர்களுக்குத் திரும்புவதும், நற்செய்தியின் மகிழ்ச்சியை மீண்டும் கண்டுணர்வதும், திருஅவைக்கு முக்கியம் என்று கூறியுள்ளார்.

உடன்பிறப்புஉணர்வின்ஊற்றில்சந்திப்பு

உலகளாவிய ஒருங்கிணைந்த மாமன்றப்பயணத்தை திருஅவை துவக்கியிருக்கும் இக்காலக்கட்டத்தில் மிகவும் விலை மதிப்பற்ற உடன்பிறப்பு உணர்வின் ஊற்றில், உங்களை சந்திப்பதன் வழியாக, தனது தாகத்தைத் தணிக்க முடியும் என்று தான் நம்புவதாக உரைத்துள்ள திருத்தந்தை, மாமன்ற அருளையும், திருத்தூது உடன்பிறப்பு உணர்வையும் நான் அதிகமாக விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

சைப்ரஸ் மற்றும் கிரீஸ் நாடுகளின் ஆர்த்தடாக்ஸ் சபைகளின் தலைவர்களான, முதுபெரும் தந்தையர் கிறிஸ்சோஸ்தோமோஸ், எரோனிமோஸ்ஆகிய இருவரையும் நன் மதிப்போடு, அமைதியின் ஆண்டவரின் பெயரால் சந்திக்க ஆவலாக உள்ளேன் என்று கூறியுள்ள திருத்தந்தை, அந்நாடுகளின் சிறுபான்மை சமுதாயமான கத்தோலிக்கருக்கு உலகளாவியத் திருஅவையின் ஊக்கத்தை பாசத்தோடு கொண்டு வருகிறேன் என்று கூறியுள்ளார்.

உங்களைச் சந்திப்பது, ஐரோப்பாவின் பழங்கால ஊற்றுகளிலிருந்து, நீர்பருகும் வாய்ப்பை வழங்குகிறது எனவும், சைப்ரஸ் குடியரசு, ஐரோப்பியக் கண்டத்தில், புனித பூமிக்குத் தொலைவில் அமைந்துள்ளது, கிரீஸ்நாடு, பழமையான கலாச்சாரத்தின் இல்லமாகும், நற்செய்தி பரவுவதற்கும், மிகப்பெரும் கலாச்சாரங்களின் வளர்ச்சிக்கும் இடமாக விளங்கிய மத்திய தரைக்கடலை ஐரோப்பா புறக்கணிக்க முடியாது என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

மத்தியதரைக்கடல், மிகப்பெரியகல்லறை

காலநிலைமாற்ற நெருக்கடியின் அச்சுறுத்தல் அதிகமாக உணரப்படும் இக்காலத்தில், நாம், வெவ்வேறான வழிகளால், குறிப்பாக, பெருந்தொற்றுக்கு எதிராக மேற்கொள்ளும் தனித்தனியான நடவடிக்கைகளால், பிரிந்து போகாமல் ஒன்று சேர்ந்து பயணத்தைத் தொடர, பல நிலப்பகுதிகளை இணைக்கும் மத்திய தரைக்கடல் அழைப்பு விடுக்கின்றது என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

பல மக்களைத் தழுவிக்கொள்ளும் கடலின் திறந்த துறைமுகங்கள், ஒன்றிணைந்து வாழ்வதற்குரிய வளங்கள் ஒருவர் ஒருவரை ஏற்பதில் அடங்கியுள்ளது என்பதை நினைவு படுத்துகின்றன என்றும், போர் மற்றும் வறுமையால் அண்மை ஆண்டுகளிலும், ஏன் இன்றும் கூட, இக்கண்டத்தின் கடற்கரைகளுக்கும், மற்ற இடங்களுக்கும் வந்து சேரும் மக்களை நினைத்துப்பார்க்கிறேன் என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

இம்மக்கள் உபசரிக்கப்படுவதில்லை, அதற்குமாறாக, வெறுப்பையும், உரிமை மீறல்களையும் எதிர்கொள்கின்றனர், இவர்கள் நம் சகோதரர்,சகோதரிகள் இவர்களில் பலர் நமது கடலில் உயிரிழந்துள்ளனர், நமது மத்தியதரைக்கடல், மிகப்பெரிய கல்லறையாக உள்ளது என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

ஒருங்கிணைப்பிலே தான் உடன்பிறப்பு உணர்வு மலரும் என்ற உறுதியில், மனித குலத்தின் ஊற்றுக்கு, ஒரு திருப்பயணியாக, மீண்டும் லெஸ்போஸ் தீவுக்குச் செல்லவிருக்கிறேன் என்றுரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய உணர்வுகளோடு உங்களைச் சந்திக்கவுள்ளேன், உங்களுக்காகச் செபிக்கின்றேன் என்று தன் காணொளிச் செய்தியை நிறைவுசெய்துள்ளார்.