பெண்களுக்கு நிகழும் வன்முறைகளை எதிர்க்கும் உலக நாள், நவம்பர் 25 ஆம் தேதி வியாழனன்று கடைபிடிக்கப்பட்டதையொட்டி, பெண்களின் விடுதலைக்காக பணியாற்றிவரும் தலித்தாகும் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் செயல்பாட்டிற்கு அழைப்பு என்ற ஒரு திட்டத்தைத் துவக்கியுள்ளனர்.
பெண்கள் வர்த்தகப் பொருள்களாக பயன்படுத்தப்படும் இழிவு நிலையை எதிர்த்துப் போராட, அருள் சகோதரிகளின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள தலித்தாகும் அமைப்பு, நவம்பர் 25 ஆம் தேதி, வியாழனன்று, பிற்பகல் மூன்று மணிக்கு மேற்கொண்ட கருத்தரங்கில், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் உரை வழங்கினார்.
மனித வர்த்தகத்திற்கு எதிராகவும், குறிப்பாக, வறியோர், பெண்கள், மற்றும் வலுவிழந்தோருக்கு எதிராக சமுதாயம் மேற்கொள்ளும் அனைத்து கொடுமைகளுக்கு எதிராகவும், கத்தோலிக்கத் திருஅவை தொடர்ந்து பணியாற்றி வருகிறது என்பதை, கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.
கத்தோலிக்கத் திருஅவையில் பணியாற்றிவரும் 60க்கும் மேற்பட்ட துறவு சபைகள், குறிப்பாக பெண்களின் துறவு சபைகள் இணைந்து உருவாக்கியுள்ள தலித்தாகும் அமைப்பில் ஈடுபட்டுள்ள பல்வேறு நாட்டு அருள்சகோதரிகள், வியாழன் நவம்பர் 25 ஆம் தேதி நடைபெற்ற இணையவழி கூட்டத்தில் சாட்சி பகர்ந்தனர்.
இந்நாளையொட்டி, ஐ.நா. வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், உலகின் அனைத்து நாடுகளிலும், 15வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர், உடல் அளவிலும், பாலியல் வழியிலும் வன்முறைகளை அடைந்துவருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த இரு ஆண்டுகளாக உலகை வதைத்துவரும் கோவிட் பெருந்தொற்று காலத்தில், இந்த வன்முறைகள், இல்லங்களில், நான்கு சுவர்களுக்குள் கூடியுள்ளதென்றும், நாம் அனைவரும் இணைந்து முயற்சி செய்தால் இந்த கொடுமையை வேரறுக்கமுடியும் என்றும், ஐ.நா. நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.