Namvazhvu
நற்செய்தி அறிவிப்பு கத்தோலிக்க செயல்பாட்டு அமைப்பின் நோக்கம்
Monday, 29 Nov 2021 11:06 am
Namvazhvu

Namvazhvu

உலகளாவிய கத்தோலிக்க செயல்பாட்டு அமைப்பு உருவாக்கப்பட்டதன் முப்பதாம் ஆண்டை முன்னிட்டு, எப்ஐஎசி என்ற அந்த அமைப்பு, இணையம் வழி நடத்திவரும் இரண்டு நாள் மெய்நிகர் கருத்தரங்கிற்கு நவம்பர் 26 ஆம் தேதி வெள்ளியன்று, இஸ்பானிய மொழியில் மடல் ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பியுள்ளார்.

கடந்த முப்பது ஆண்டுகள்பற்றி சிந்தித்துப் பார்க்கும்போது, இந்த அமைப்பை உருவாக்கியவர்கள் தங்களின் கனவுகளை நம்பிக்கையோடு எவ்வாறு எதிர்நோக்கினர் என்ற நன்றியுணர்வே மோலோங்கியிருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இந்த அமைப்பை உருவாக்கிய கர்தினால் எத்வார்தோ பிரோனியோ அவர்கள்பற்றி எடுத்துரைத்துள்ளார்.

பொதுநிலையினரின் மறைப்பணி அழைப்பில் நம்பிக்கைகொண்டிருந்த கர்தினால் பிரோனியோ அவர்கள், கத்தோலிக்க செயல்பாட்டு அமைப்பை மிகவும் அன்புகூர்ந்தார் என்றும், இந்த அமைப்பால் உருவாக்கப்பட்ட பலர், பொதுவாழ்வில், நற்செய்திகூறும் உண்மையை வெளிக்கொணர்ந்தவர்கள் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

பல நாடுகளில் தன் கிளையைத் துவங்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்ட இந்த அமைப்பைச் சார்ந்த பொதுநிலை புனிதர்களும் அருளாளர்களும், திருஅவையின் சொத்தாக உள்ளனர் என்றும், அவர்கள், எண்ணற்ற குழுமங்களுக்கு, பக்கத்து வீட்டு புனிதர்களாக உள்ளனர் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

திருஅவை தன் பயணத்தில் எதிர்கொள்வதுபோன்று, கத்தோலிக்க செயல்பாட்டு அமைப்பும், தன் பயணத்தில், சோர்வுகள், புறக்கணிப்பு, குறிக்கோளற்றதன்மை, அச்சம், நவீனகாலத்தின் மாற்றகளால் கவரப்படல் போன்றவற்றை எதிர்கொண்டுள்ளது என்றுரைத்துள்ள திருத்தந்தை, நாம் எங்கிருந்து வந்தோம், நமது பிறப்பிடம் எது என்று சிந்தித்துப் பார்க்குமாறு கேட்டுக்கொண்டார்.

வாக்குறுதியளிக்கப்பட்ட பூமிக்குச் செல்வதற்காக, பாலைவனப் பயணம் மேற்கொண்ட இஸ்ரயேல் மக்கள், சோதனைகளால் உறிஞ்சப்படாதிருக்கும்வண்ணம், அவர்களை  எவ்வாறு யாவே ஆண்டவர் வழிநடத்தினார் என்பதையும் நினைவுபடுத்திய திருத்தந்தை, கத்தோலிக்க செயல்பாட்டு அமைப்பு, கத்தோலிக்கத் திருஅவையின் மிக முக்கிய மையமான நற்செய்தி அறிவிப்பு என்பதில், தன் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.

கத்தோலிக்க செயல்பாட்டு அமைப்பின் நோக்கமும், கத்தோலிக்கத் திருஅவையின் நோக்கமும் நற்செய்தி அறிவிப்பதே எனவும், இந்த அமைப்பின் நோக்கம் உலகளாவியதன்மை கொண்டது எனவும் கூறியுள்ள திருத்தந்தை, பெருந்தொற்று உருவாக்கியுள்ள நெருக்கடிச் சூழல், என்னையும் சேர்த்தே, நாம் அனைவரும் சக்தியற்றவர்களாக உணருகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பலநிலைகளில் காயமடைந்துள்ள இவ்வுலகைக் கட்டியெழுப்புவதற்கு கருவிகளாக அமைகின்ற உடன்பிறந்த உணர்வு மற்றும் நட்புணர்வை உருவாக்க உழைக்குமாறும், உண்மையான கிறிஸ்தவ ஆன்மீகத்தை அனைவரின் இதயங்களிலும் விதைக்குமாறும், கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த அமைப்பினரின் திட்டங்களும் பணிகளும், நற்செய்தி அறிவிப்பால் கிடைக்கும் மகிழ்ச்சியால் ஆறுதலடையவேண்டும் என வாழ்த்தி, தனது மடலை நிறைவுசெய்துள்ளார்.