Namvazhvu
Editorial பொள்ளாச்சி களங்கம் - தமிழகத்தின் அவமானம்
Thursday, 21 Mar 2019 15:52 pm
Namvazhvu

Namvazhvu

பொள்ளாச்சி களங்கம் - தமிழகத்தின் அவமானம்

தமிழகத்தின் அவமானமாக பொள்ளாச்சிக் கொடுமைகள் தென்படுகின்றன.  உலக அளவில் தமிழர்களுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி, தமிழக வரலாற்றில் கறுப்புப் பக்கமாகவும் பொள்ளாச்சிச் சம்பவங்கள் தென்படுகின்றன. இணையதளத்தில் உலாவரும் காணொளிகள் காண்போரின் நெஞ்சத்தைப் பதைபதைக்க வைக்கின்றன. பெண்குழந்தைகளைப் பெற்ற பெற்றோரின் கண்களில் ஒரு வித மிரட்சி தென்படுகிறது. வக்கிரப்புத்தி கொண்ட இந்த மனித மிருகங்கள் பூமித்தாய்க்குப் பாரமாக உள்ளனர் என்பதே உண்மை. பிப்ரவரி 24 ஆம் தேதி தமிழக வரலாற்றில் கறுப்பு தினம். பொள்ளாச்சி கல்லூரி மாணவி மிகவும் தைரியமாக இந்த மனித மிருகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்துடன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் மனித மிருகங்கள் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதிஷ், வசந்த்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  புகார் கொடுத்த பெண்ணின் சகோதரர் தாக்கப்பட்டார்.  அரசியல்வாதிகளின் வாரிசுகளைக் காப்பாற்ற முயன்ற காவல்துறையின் அலட்சியப் போக்கு அம்பலமானவுடன், அவர்கள் நால்வரையும் குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்தனர்.


இந்த வழக்குகளைப் பொறுத்தவரை,  புகார் கொடுத்த பெண்ணின் விவரத்தை வெளியிடக்கூடாது காவல்துறை வெளியிட்டது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு அறிவுறுத்தியிருந்தாலும் தமிழகக் காவல்துறையினர் அந்தப் பெண்ணின் பெயர் முகவரி, அவர்தம் குடும்பத்தார் ஆகியோரின் விவரங்களை வெளியிட்டு நாங்களும் கறுப்பு ஆடுகள்தான் என்பதை இன்னுமொருமுறை நிரூபித்துக் கொண்டனர். இது காக்கிகளின் இருண்ட பக்கத்திற்கு இன்னுமோர் உதாரணம்.  காவல்துறையும் தமிழக அரசும் இணைந்து யாரையோ காப்பாற்ற
முயற்சி செய்வது தெளிவாகிறது. பணபலமும் அதிகார பலமும் சாதிபலமும் கூட்டுச் சேர்ந்து தமிழ்தாயின் தவப் புதல்விகளுக்கு தீங்கு இழைத் துள்ளது.


சிபிசிஐடி விசாரணைக்கு அரசு பரிந்துரைத்து இரண்டு நாள்கள்கூட ஆகாத நிலையில் மக்களின் கோபத்தைக் கருத்தில் கொண்டு இவ்வழக்கைத் தமிழக அரசு சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைத்தது.  இதற்காக மார்ச் 13 ஆம் தேதி தமிழக டிஜிபி பிறப்பித்த அரசாணை139 ல் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையும் அவர் பயிலும் கல்லூரியை யும்  தெளிவாகக் குறிப்பிட்டு தன் காக்கி உடையின் கறுப்பு வண்ணத்தைப் பூசிக்கொண்டுள்ளார். திரும்பத் திரும்ப புகார் கொடுத்தவரின் அடையாளத்தை வெளியிட்டு தமிழக அரசும் காவல்துறையும் இன்னும் மற்றவர்களும் இது குறித்து புகார் கொடுக்கக்கூடாது என்று அச்சுறுத்துகிறது. இருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் நிலையில், இப்படிப்பட்ட இந்த அரசுப் பயங்கரவாதம் மிகப்பெரிய சவாலாக உள்ளது. 


நீதிகேட்டுப் போராடுபவர்களை ஒடுக்கத் துடிக்கும் காவல்துறையினர் குற்றமிழைத்தவர்களைக் கைது செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்ற இந்த பொள்ளாச்சிக் கொடூரத்தின் தீவிரத்தை உணராமல் அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது. முப்பதுக்கும் மேற்பட்ட இளம்பெண்கள் கடந்த சில ஆண்டுகளில் பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்கொலை செய்துகொண்டுள்ளது இங்கே கண்ணீரோடு நினைவுகூரத்தக்கது. புகார் கொடுத்து ஒருவாரம்வரை நடவடிக்கை எடுக்காத காவல்துறை, புகார் கொடுத்தவரின் பெயரையும் முகவரியையும் வெளியிட்ட காவல்துறை, நான்கு பேரைத் தவிர வேறு எவருக்கும் சம்பந்தமில்லை; அரசியல்வாதிகளின் வாரிகளுக்கு இதில் சம்பந்தமில்லை என்று விசாரிக்காமலே முடிவெடுத்த காவல்துறை, சமூக வலைதளங்களில் இது குறித்து அவதூறு பரப்புவோர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த காவல்துறை, பாதிக்கப்பட்ட பெண்களுக்காகப் பேராடுபவர்களை சமூக விரோதிகள் என்று களங்கம் கற்பிக்கும் காவல்துறை (காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன்) ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் உள்ளதாகச் சொல்லப்படும்  நிலையில் நான்கே நான்குதான் கைப்பற்றப்பட்டன என்று முற்றுப்புள்ளி வைத்த காவல்துறைக்குப் பின்னால் யாரோ இருப்பதும் இயக்குவதும் வெள்ளிடைமலை.  (மதுரை உயர்நீதிமன்றம் அப்பெண்ணின் பெயரை அரசாணையில் வெளியிட்டதற்காக ரூபாய் இருபத்தைந்து லட்சம் அபராதமும் எஸ்.பி.மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும்உத்தரவிட்டிருப்பது ஆறுதல் அளிக்கிற்து).


அரசும் காவல்துறையும் தங்கள் மீதுள்ள களங்கத்தைத் துடைத்தெறிந்திட முன்வரவேண்டும். சிபிஐ விசாரணைக்கு உகந்த களத்தை உருவாக்க வேண்டும். சாட்சிகளையும் பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாக்கவும் காப்பாற்றவும் முன் வரவேண்டும்.  மூடி வைக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் வாரிசுகளின் முகநூல் பக்கங்களுக்குள் நுழைந்து தரவுகளைச் சரி பார்க்கவேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள் மனத்தைரியத்துடன் சிபிசிஐடியின்  94884 42993 என்ற எண்ணுக்குப் புகார் தெரிவித்து இதுபோன்ற அவலம் நம் தமிழகத்தில் நடைபெறாதவண்ணம் தடுத்திட வேண்டும்.  தமிழகத்திற்குத் தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்கள் ஒவ்வொருவரும் அசிங்கப்பட்டு நிற்கின்றனர். தன் தங்கையைப்பற்றி மட்டும் கவலைப்
படாமல் பாதிக்கப்பட்ட அனைத்துப்  பெண்களுக்காகவும் காவல்துறையில் புகார் அளித்த சகோதரரையும் அவர்தம் குடும்பத்திற்கும் நன்றி கூறுகிறோம். தேசிய மனித உரிமை ஆணையம், மகளிர் நல வாரியம், தமிழக ஆயர் பேரவையின் பெண்கள் பணிக்குழு ஆகியவை களத்தில் இறங்கி விசாரிக்க வேண்டும். இனி ஆண்பிள்ளைகளையும் தமிழ்ச்சமூகம் ஒழுக்கத்
தோடு வளர்க்க வேண்டும். செல்போன்களைப் பயன்படுத்துவதில் சமூக வலைதளங்களைப் பயன் படுத்துவதில், அறம் சார்ந்து அதீதக் கவனம் செலுத்த வேண்டும். தமிழ் இன மானம் காக்கப்பட வேண்டும். 

ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுடத் தான்தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்

என்று நீதிக்காக வாழ்ந்த அரசர்களையும் மாமனிதர் களையும் கொண்ட இந்த மண்ணில் 
யானோ அரசன் யானே கள்வன்
மன்பதைக் காக்கும் தென்புலம் காவல்

என்முதல் பிழைத்தது கெடுகவென் ஆயுள் என
அநீதிக்காக வீழ்ந்த பேரரசனைக் கண்ட இந்த மண்ணில் நீதி நிலைக்க வேண்டும். அநீதி புதைக்கப்பட வேண்டும்.