Namvazhvu
திருவருகைக்காலச் சிந்தனை திருவருகைக்காலச் சிந்தனை :பகைவருக்கு இறைவேண்டல்
Monday, 29 Nov 2021 11:18 am
Namvazhvu

Namvazhvu

"பகைவரையும் அன்பு கூருங்கள், உங்களைத் துன்புறுத்துவோருக்காக செபியுங்கள்" என்பது கிறிஸ்தவத்திற்கே உரிய தனித்தன்மை எனலாம். எல்லா மதங்களும் அன்பை அடிப்படையாகக் கொண்டு இயங்கினாலும், அதற்கும் ஒருபடிமேலேச் சென்று, பகைவரையும் அன்பு கூர அழைப்பு விடுக்கிறது, கிறிஸ்தவம். கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்பது சமுதாயச் சட்டமாகவே அங்கீகரிக்கப் பட்டிருந்த காலத்தில், ஒருகன்னத்தில் அறைந்தவருக்கு, அடுத்த கன்னத்தையும் காட்டச் சொல்லி, பெரும் புரட்சி செய்தவர் இயேசு. தந்தையே, இவர்களை மன்னியும், என, இயேசு, சிலுவையில் கூறிய வார்த்தைகள், கிறிஸ்தவத்தின் முதல் மறைசாட்சியாகிய புனித ஸ்தேவான்தொட்டு, நம் அனைவரிலும் தொடரவேண்டும் என்பதே, கிறிஸ்துவின் விருப்பம். ஏனெனில், நம்மை அன்பு கூர்பவர்களையே நாமும் திருப்பி அன்பு கூர்ந்தால், அதனால் என்ன பலன்? நம் பகைவருக்கு நாம் அன்பு காட்ட வில்லையென்றால், கிறிஸ்துவின் சீடர்கள் என்று நம்மை எப்படி நாம் அடையாளம் கண்டு கொள்ள முடியும்? பகைவரை அன்புகூர்வது பலருக்கு கடினமானது தான். அதற்கு, இயேசு, சிறந்ததொரு வழியை, நமக்குக் காட்டுகிறார். ஆம், உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள் என பரிந்துரைக்கிறார். நம்மை வெறுத்து நம் வெறுப்புக்கும் உள்ளாகுவோருக்காக நாம் இறைவேண்டல் செய்யும் போது, முதலில் நம் மனம் தூய்மையடையும், அமைதியடையும், அதன் வழி பகைவரை நோக்கிச்சென்று கைகுலுக்க வழிபிறக்கும். அந்த அமைதி வழியில் பயணிக்க இந்த திருவருகைக்காலம் நமக்கு உதவட்டும்.