Namvazhvu
Pope Francis இன்றைய உணவை எங்களுக்குத் தாரும்
Sunday, 31 Mar 2019 05:11 am
Namvazhvu

Namvazhvu

இன்றைய உணவை எங்களுக்குத் தாரும்

 

திருத்தந்தை பிரான்சிஸ் வத்திக்கான் புனித பேதுரு பேராலய வளாகத்தில் இருந்த  திருப்பயணிகளுக்கு மார்ச் மாதம் 27 ஆம் தேதி புதன் கிழமை ‘விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே’ என்ற செபத்தில் உள்ள  ‘இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும்‘, என்ற விண்ணப்பம் குறித்து, மறைக்கல்வி உரையாற்றினார். முதலில், மத்தேயு நற்செய்தியிலிருந்து 14:15-19 வாசிக்கப்பட்டது:

இதைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் ‘அன்பு சகோதர சகோதரிகளே, ‘விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே’ என்ற நம் தொடர் மறைக்கல்வியுரையில் ‘இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும்‘ என்ற பகுதியை இன்று சிந்திப்போம். இந்த செபத்தின் இரண்டாம் பகுதியாகிய இது, நம் தேவைகளை இறைவன் முன் வைப்பதாக உள்ளது. இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும் என்ற வேண்டுதல், நம்முடைய தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் வகையில் நாம் முற்றிலும் தன்னிறைவு பெற்றவர்களாக இல்லை என்ற உண்மை நிலையை உணர்த்தி நிற்கின்றது. இந்த உண்மை நிலையை, பலவேளைகளில் நாம் மறந்துவிடுகிறோம். நமக்கு தினமும் உணவு தேவைப்படுகிறது. இருப்பினும், இந்த செபத்தை, தினமும் தங்கள் அத்தியாவசிய அடிப்படை தேவைகளை நிறைவுச் செய்ய போராடி துன்புறும் அனைத்து மக்களோடும் இணைந்து எழுப்புமாறு, இயேசு நம்மிடம் கேட்கிறார். இதே கண்ணோட்டத்தோடு நாம் பார்க்கும்போது, இயேசுவின் வார்த்தைகள் மேலும் வலுவுள்ளதாக இருப்பதைக் காண்கிறோம். கிறிஸ்தவ செபம் என்பது, துறவிகளுக்கும், தவ வாழ்வு வாழ்பவர்களுக்கும் மட்டும் உரியதல்ல, மாறாக, சாதாரண மக்களின் தேவைகளை ஒட்டி உருவானது என்பதை உணர்கிறோம். இன்றைய உணவு என இங்கு நாம் செபத்தில் குறிப்பிடுவது, தனி ஒரு மனிதருக்கான உணவையல்ல, மாறாக, நம் அனைவருக்குமான உணவை. நமக்காக மட்டும் செபிக்கச் சொல்லவில்லை இயேசு; மாறாக, நம் சகோதர சகோதரிகளுக்காகவும் இணைந்து செபிக்கச் சொல்கிறார்.  இவ்வாறு நாம் செபிப்பதன் வழியாக, ‘விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே’ என்ற இந்த செபம், ஒருமைப்பாட்டின், மற்றும், பிறர் உணர்வை புரிந்துகொண்டு செயல்படுவதன் செபமாக மாறுகிறது.  மற்றவர்களுக்கு உதவி புரிவதற்கான நம் ஆவலை, இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த புதுமையிலும் காண்கிறோம். இந்தப் புதுமையில், இயேசு, திருநற்கருணை அப்பத்தில், தன்னை, இறுதி நாளில் வழங்கியதை, இங்கு முதலிலேயே காட்டுகின்றார். ஏனெனில், திருநற்கருணை மட்டுமே, இறைவனுக்கான நம் பசியை நிறைவுச் செய்ய முடியும் என்று மறைக்கல்வி வழங்கி, இறுதியில் தம் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.