டிசம்பர் 01 ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற இந்திய கத்தோலிக்கப் பத்திரிகையாளர் கூட்டமைப்பின் 26வது ஆண்டுக் கூட்டத்தில் ‘நம் வாழ்வு’ வெளியீட்டின் 94வது வெளியீடான ‘கூட்டியக்கத் திருஅவைக்காக’ என்ற உலக ஆயர்கள் மாமன்ற வழிகாட்டி கையேடு வெளியிடப்பட்டது. மெக்சிக்கோவில் நடைபெற்ற தென் அமெரிக்க ஆயர்கள் கூட்டமைப்பில் திருத்தந்தையின் பிரதிநிதியாக கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள் பங்கேற்று அன்று முற்பகல் திரும்பிய காரணத்தினால், திட்டமிட்டபடி இந்நூலை வெளியிட முடியவில்லை. ஆகையால் இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மும்பை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுப்பெற்ற நீதிபதியும் பேரருள்திரு. பென்னி அகுயியார் அவர்களின் சகோதரருமான மாண்புமிகு நீதிபதி அலோய்சியஸ் அகுயியார் அவர்கள் இந்நூலை வெளியிட, இதன் முதல் பிரதியை மும்பை செயின்ட் பால்ஸ் சமூகத் தொடர்பியல் கல்வி நிறுவனத்தின் முதல்வர் அருள்முனைவர் பிலவேந்திரன் SSp அவர்கள் பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து இந்திய கத்தோலிக்க பத்திரிகையாளரின் கூட்டமைப்பின் தலைவர் திரு. இக்னேஷியஸ் கொன்சால்வ்ஸ், இந்திய ஆயர் பேரவையின் பிரதிநிதி ஆயர் சல்வதோர் லோபோ ஆகியோரும் பெற்றுக்கொண்டனர். அகில இந்திய அளவிலான கூட்டத்தில் ‘நம் வாழ்வி’ன் இந்நூல் வெளியிடப்பட்டது நமக்கெல்லாம் பெருமை.
88 பக்கங்கள் கொண்ட இந்நூல், திருதந்தையின் அழைப்பாணையின்படி கூட்டப்பட்டுள்ள உலக ஆயர் மாமன்றத்தின் கருப்பொருளான ‘கூட்டியக்கத் திருஅவைக்காக’ என்ற தலைப்பை அடிப்படையாகக் கொண்டு, முதல் கட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மறைமாவட்டங்களையும் அவை சார்ந்த அனைத்து அமைப்புகளையும் தயாரிக்கும் பொருட்டு, சிறப்பான கட்டுரைகளை உள்ளடக்கி, மலிவான விலையில் ரூ.60க்கு வெளியிடப்பட்டுள்ளது. 13 தலைப்புகளில், உலக ஆயர்கள் மாமன்ற வரலாறு, மாமன்ற இலட்சினை விளக்கம், திருத்தந்தையின் பாதைத்திறப்பு மறையுரை உள்ளிட்ட அனைத்து கட்டுரைகளையும், புகழ்பெற்ற எழுத்தாளர்கள் அருள்முனைவர் மைக்கேல்ராஜ், எல். சகாயராஜ், ஜான் பேப்டிஸ்ட், யேசு கருணாநிதி, ச.தே.செல்வராசு, தே. அல்போன்ஸ், அருள்முனைவர் பெலிக்ஸ் வில்பிரட் ஆகியோரின் ஆழமான கட்டுரைகளையும், முத்தாய்ப்பாக, மாமன்றத் தயாரிப்புக் கூட்டங்களுக்கான 100 ஆக்கப்பூர்வமான கேள்விகளையும் உள்ளடக்கி தொகுக்கப்பட்டுள்ளது. உலக ஆயர் மாமன்றக் கூட்டத்திற்கு இந்திய அளவில் மிகக் குறுகிய காலத்தில் வெளிவரும் முதல் நூல் இந்நூல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நூல் ‘நம் வாழ்வு’ வாசகர்களுக்கு ரூ.50க்கு நூல் அஞ்சல் முறையில் இலவசமாக அனுப்பி வைக்கப்படும். உங்கள் பிரதிகளுக்கு இன்றே முந்துங்கள்.
‘நம் வாழ்வு’ வெளியீடு, 62, லஸ் சர்ச் ரோடு, மயிலாப்பூர், சென்னை - 600 004. செல்: 87787 53947