Namvazhvu
அருள்பணி. பூபதி லூர்துசாமி, செயலர், தமிழ்நாடு பொதுநிலையினர் பணிக்குழு சமூகநீதி வரலாற்றின் வெளிப்பாடு ‘ஜெய்பீம்’
Thursday, 09 Dec 2021 13:19 pm
Namvazhvu

Namvazhvu

சமூகநீதி என்பது வரலாற்றில் ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட மக்கள், சமூகத்தில் சமநிலை, சமத்துவம் பெறுவதற்கு அளிக்கப்படும் ஒதுக்கீட்டு உரிமைகள் ஆகும். ஒடுக்கப்பட்டோருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் ஒதுக்கீடு அளிப்பது மட்டுமே சமூக நீதியாகாது, சமூக, பொருளாதார, கல்வி, கலாச்சாரம் அரசியல் போன்ற அனைத்து நிலைகளிலும் சமஉரிமை பெற்று, சமமாக வாழ, சமத்துவ சமுதாயம் படைப்பதே சமூக நீதியாகும். இந்தியாவிலேயே தமிழகத்தில் முதல் முறையாக சட்டப்படி 1921 செப்டம்பர் 16 ஆம் நாள் நீதிக்கட்சி தொடங்கியது.

இந்திய சமூகம் சாதிய அமைப்பின் மீது கட்டப்பட்ட சமூகம் ஆகும்இச்சாதியம் சமயம் கடந்து எங்கும் பரவியுள்ளது. சமூக, பொருளாதார, கல்வி, அரசியல் கலாச்சாரத் தளங்களில் உரிமைகள் மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ள தலித் மக்கள் ஒதுக்கீட்டு உரிமைகள் வழியாகத்தான் முன்னேற்றம் அடையச் செய்ய முடியும் என்பது சமூக நீதியாகும். வரலாற்றில் தலித் மக்களின் சமூக, பொருளாதார, கல்வி, கலாச்சார உரிமைகள், வர்ணாசிரம தர்மத்தின் அடிப்படையில் மறுக்கப்பட்டது. தீண்டாமை மனித பிறப்போடு, இணைக்கப்பட்டு சமூகநீதி, மனித உரிமைகள், மறுக்கப்படுவதை மனு தர்ம சாஸ்திரம் சட்டமாக்கியது. இதன் விளைவாக ஒடுக்கப்பட்ட மக்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு அடிமைகள் ஆக்கப்பட்டனர். பிரிட்டிஷ் ஆட்சியில் சமூக நீதி அடிப்படையில் 1921-லிருந்து வகுப்பு வாரி ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

அரசியல் அமைப்பு சட்டத்தில் சமூக நீதி

முதல் பாராளுமன்றம் அரசியல் சாசனம் பிரிவு 15, 16 இவைகளில் முதல் சட்டத்திருத்தம் கொண்டு வந்து, ஷெட்யூல்டு வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டு உரிமைகள் உறுதி செய்யப்பட்டது. அரசியல் சாசன பிரிவு 15(4) பட்டியல் சாதியினர், “சமூகத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் இவர்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு சட்டங்களை அரசு உருவாக்குவதை இவ்வரசியல் பிரிவு 29 (2) தடை செய்ய முடியாது என்று சட்ட திருத்தம் கொண்டுவந்தது. இவ்வாறு மேற்கண்ட சட்டத்திருத்தங்களினால் பட்டியலினத்தாருக்கும் (SC), பழங்குடியினருக்கும் (ST) சிறப்பு உரிமைகளும், ஒதுக்கீட்டு உரிமைகளும் சமூகநீதி அடிப்படையில் அளிக்கப்பட்டது. பட்டியலினத்தார், பழங்குடியினருக்கு கல்வி வேலை வாய்ப்பில் ஒதுக்கீடும் பாராளுமன்றத்தில் ஒதுக்கீடும்  (பிரிவு 330)  சட்டமன்றத்தில் ஒதுக்கீடும் (பிரிவு 332) போன்ற ஒதுக்கீட்டு உரிமைகள் அளிக்கப்பட்டது. இவ்வாறு கல்வி, வேலை வாய்ப்பு சட்டசபை, பாராளுமன்றத்திலும், உள்ளாட்சி போன்ற அமைப்புகளில் ஒதுக்கீடு தலித் மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இச்சமூக நீதி உரிமைகள் தலித் கிறித்தவர்களுக்கு மறுக்கப்படுகிறது மத்திய அரசு பட்டியலின

உரிமைகளை தலித் கிறித்தவர்களுக்கு வழங்கினால்தான் சமூக நீதி நிறைவடையும்.

சமூகநீதி அடிப்படையில் பட்டியலினத்தாருக்கு ஒதுக்கீட்டு உரிமைகள் அளிக்கப்பட வேண்டும் என்று சமூகநீதி தலைவர் மகாத்மா, ஜோதிராவ் பூலே, தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், டாக்டர் லோகியா போன்றவர்கள் தொடர்ந்து போராடினர். ஒதுக்கீடு என்பது மக்கள் தொகையை விகிதாச்சாரத்திற்கேற்ப அமைய வேண்டும் என்று அடிப்படை அளவுகோல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவ்வாறே 1950 இல் பட்டியலினத்தாருக்கு 12.5ரூ கொடுக்கப்பட்ட இடஒதுக்கீடு 1970 இல் ஜனத்தொகை விகிதாச்சார அடிப்படையில் மக்கள் தொகைக்கு ஏற்ப 15ரூ -மாக உயர்த்தப்பட்டது. இன்று வரையிலும் அதே ஒதுக்கீட்டு சதவிகிதம் தொடர்ந்து அளிக்கப்படுகிறது. ஒதுக்கீட்டு சதவிகிதம் பட்டியலின மக்கள் தொகை ஏற்ப உயர்த்தப்படவேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்படுகிறது. தற்போது இந்திய அளவில் பட்டியலினத்தார் (SC) 15ரூ பழங்குடியினருக்கு (ST) 7.5ரூ மொத்தம் 22.5ரூ கல்வி, வேலை வாய்ப்பு, பாராளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அனைத்திலும் ஒதுக்கீட்டு உரிமைகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், பட்டியலினத்தாருக்கு அளிக்கப்படும் சமூகநீதி ஒதுக்கீட்டு உரிமைகள் மதம் மாறிய கிறித்தவ பட்டியலினத்தாருக்கு மறுக்கப்படுகிறது.

1992 இல் மண்டல் வழக்கில் உச்ச நீதிமன்ற ஒன்பது நீதிபதிகள் தீர்ப்பில்; அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 16 (4) அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (BOC) 27ரூ வேலை வாய்ப்பில் ஒதுக்கீட்டு உரிமை அளிக்கப்பட்டது. ஆனால், ஒதுக்கீட்டு சதவிகிதம் இந்திய அளவில் 50ரூ மேல் இருக்கக்கூடாது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. (Indira Shavani vs Union of India). எனவே, இந்திய அளவில் SC, SC, OBC ஒதுக்கீடு 50ரூ மேல் அளிக்கப்படக்கூடாது என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பாக உள்ளது. ஆனால், இந்தியாவில்; இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 52ரூ உள்ளனர். ஆகவே, இதனை பாராளுமன்றத்தில் திருத்த 50ரூ மேல் ஒதுக்கீட்டு உரிமை வழங்க வேண்டும் என்ற சமூகநீதி கோரிக்கை பலமாக எழுகிறது. அண்மையில் பொருளாதாரத்தில் நலிந்த (Economically Weaker Section) உயர் சாதியில் உள்ள ஏழைகளுக்கு மத்திய அரசு வழங்கிய 10ரூ கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீட்டினை பலரும் சமூக அநீதி என்று கண்டனம் செய்கின்றனர். மத்திய அரசு சமூக நீதிக்காக இன்னும் சட்டங்கள் இயற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் சமூகநீதி வரலாறு

19 ஆம் நூற்றாண்டில் சாதி எதிர்ப்பு போராளி, அயோதி தாசர் பண்டிதர் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும், ஒதுக்கீட்டு உரிமைகளை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசிடம் கோரிக்கை விடுத்தார். தமிழகத்தில் கல்வி வேலைவாய்ப்பு மற்றும் அனைத்து நிலைகளிலும் பார்ப்பனர்களே முன்னிலையில் இருந்தனர். பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் உரிமைகள் மறுக்கப்பட்டு வாழ்ந்தனர். இச்சூழ்நிலையில் பிராமணர் அல்லாதோர் ஒன்றுகூடி 1916 ஆம் ஆண்டு, தென்னிந்திய நல உரிமை சங்கம் தொடங்கப்பட்டது. சங்கம் வளர்ந்து நீதிக்கட்சியானது. ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்கு ஒதுக்கீட்டு உரிமை அவசியம் என்பதை உணர்ந்தனர். அன்றைய சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி சமூகநீதி, தீண்டாமை ஒழிப்பு, ஒடுக்கப்பட்டோர் உரிமை ஆகியவற்றுக்காக குரல் கொடுத்தது. 1920 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில், நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் ஆட்சியை பிடித்தது. நீதிக்கட்சி இந்தியாவில் சமூகநீதி அடிப்படையில் ஒடுக்கப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வளர்ச்சிக்காக இந்தியாவில் முதல் முறையாக அரசாணை வெளியிட்டது. சமூகநீதியை சட்டப்பூர்வமாக்கியது. இச்சமூகநீதி அரசாணை வெளியிடப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிறது. மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க வகுப்பு வாரி ஒதுக்கீடு என்ற இச்சமூகநீதி அரசாணை 1921 செப்டம்பர் 16 ஆம் நாள் அன்றைய நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் இச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆகவே, 2021 செப்டம்பர் 16 இல் தமிழக அரசு சமூக நீதிக்கு நூற்றாண்டு விழா கொண்டாடியது.

நீதிக்கட்சியானது சமூகநீதியை மற்றும் சமூக சீர்திருத்தங்களை சமூகத்திற்கு கொண்டு வந்தது. அதன் தலைவராக பெரியார் இருந்தபோது 1944 இல் நீதிக்கட்சியில் திராவிடக் கழகம் என்று மாற்றினர். தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் தலைவராக சமூகநீதி, சமூக சீர்திருத்தம், சாதி ஒழிப்பு, பெண்கள் விடுதலை போன்ற விடுதலைப் போராட்டங்களை நடத்தி, ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கு வித்திட்டார். திராவிடக் கழகம் வளர்ந்து வரும் வேளையில் பிளவுப்பட்டது. அறிஞர் அண்ணா தலைமையில் திரு. நெடுஞ்செழியன், திரு. மதியழகன், திரு. கருணாநிதி ஆகியோர் இணைந்து 1949 இல் செப்டம்பர் 16 ஆம் நாளில் திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு..) என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினர்.

இந்தியாவில் அரசியல் அமைப்புச் சட்டம் அமைத்தப்பின் 1952 முதல் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிப்பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்தது. திரு. ராஜாஜி, திரு. காமராஜ், திரு. பக்தவச்சலம் இவர்கள் ஆட்சி காலத்தில் சமூக நீதியை பாதுகாத்தனர். குறிப்பாக கல்வி கண் திறந்த கர்மவீரர் என்று அழைக்கப்பட்ட திரு. காமராஜ் அவர்கள் ஏழை ஒடுக்கப்பட்டோர் கல்வி வளர்ச்சிக்காக நலத்திட்டங்களை செயல்படுத்தினார். பட்டியல் இனத்தவர், பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீட்டு உரிமைகள் தொடர்ந்தது.

1967 ஆம் ஆண்டு, திமுக வெற்றிப்பெற்று அண்ணா தலைமையில் ஆட்சி அமைத்தது. அண்ணாவின் இறப்பிற்கு பின் திரு. கருணாநிதி அவர்களின் தலைமையில் ஆட்சி நடந்த போது, 1969 இல் சட்ட நாதன் பிற்பட்டோர் நல ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் அறிக்கையின் அடிப்படையில் 1971 ஆம் ஆண்டு, பிற்படுத்தப்பட்டோருக்கு (BC) 31ரூ ஒதுக்கீடும் தாழ்த்தப்பட்டோருக்கு 18ரூ எனவும் ஆக மொத்தம் 49ரூ ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. பட்டியலினத்தார் ஒதுக்கீட்டில் 3ரூ உள் ஒதுக்கீடு அருந்ததியர் சமூகத்திற்கு அளிக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் 3.5.ரூ இஸ்லாமிய சமூகத்திற்கு அளிக்கப்பட்டது. 1989 ஆம் ஆண்டில் 50ரூ பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) தனி 20ரூ ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

1972- திரு. எம்.ஜி. ராமச்சந்திரன் திமுக கட்சியில் இருந்து வெளியேறி, அதிமுக (அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்) என்ற கட்சியை தொடங்கினார். 1977இல் அதிமுக திரு.எம்.ஜி.ஆர் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைத்தது.

1980  ஆம் ஆண்டு, சமூகநீதி அடிப்படையில் இடஒதுக்கீட்டை கூட்டினார். பிற்படுத்தப்பட்டோர் (SC) 30ரூ, பட்டியலினத்தார் 18ரூ பழங்குடியினர் 1ரூ ஆக மொத்தம் 69ரூ இடஒதுக்கீட்டை சமூகநீதி வெளிப்பாடாக செயல்படுத்தினார். உச்சநீதிமன்றம் மண்டல் கமிஷன் வழக்கின் தீர்ப்பில் ஒதுக்கீடு (Reservation) 50ரூ மேலே செல்லக் கூடாது என்று தீர்ப்பு வழங்கி இருந்தது. இருப்பினும் செல்வி ஜெயலலிதா தலைமையில் அமைந்த அதிமுக அரசு 1994 இல் தமிழகத்தில் 69ரூ ஒதுக்கீட்டிற்கு குடியரசு தலைவர் ஒப்புதலும் பெற்றது. இச்சட்டம் அரசியல் அமைப்பு சட்ட பிரிவு 31 (O) அடிப்படையில் பாதுகாப்பாக 9 வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது. அன்று சேர்த்தது தமிழகத்தில் இன்றுவரை 69ரூ இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது.

2021 திரு. ஸ்டாலின் தலைமையில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக சமூகநீதிக் கட்சி ஆகவே, சமூகநீதியை அனைவரும் பெறுவதற்கு செயல்படும் அரசாக அமையும் என்று உறுதி அளித்தார்.

சமூகநீதி அடிப்படையில் மக்கள் வளர்ச்சிக்காக திட்டங்களை அறிவித்தார். மிகவும் பிற்பட்டோருக்கு உள்ள 20ரூ ஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5ரூ சீர்மரபினர் (68 சாதிகள்) 7ரூ மிகவும் பிற்பட்டோர் (41 சாதிகள்).

2.5ரூ என உள் ஒதுக்கீட்டை சட்டபூர்வமாக்கினார். மருத்துவ படிப்பிற்கான NEET தேர்வில் 7.5ரூ அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. தமிழகத்தில் பட்டியலினத்தார் பழங்குடி ஆணையம் (Tamilnadu SC/ST Commission) அமைக்கப்பட்டது. தொழில் கல்வி (Technical Education – Engineering College) பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5ரூ ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. நீட் தேர்வை ரத்து செய்யும்  மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

தற்போது, சென்னை உயர்நீதிமன்றம் வன்னியருக்கு அளிக்கப்பட்ட உள்ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது. தமிழக அரசு இத்தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னியருக்கு அளிக்கப்பட்ட 10.5ரூ உள்ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து போராடுவது நீதியாகும். ஆனால், வன்னியர் மக்கள் சார்பாக செயல்படும் பாட்டாளி மக்கள் கட்சி ஒடுக்கப்பட்டோருக்கு உரிமையும்,

சமூகநீதியும் பெற்று தருவது அனைவருடைய கடமையை சிறப்பாக வெளிப்படுத்தும் ஜெய்பீம் திரைப்படத்திற்கு எதிராக போராடிக் கொண்டு இருக்கிறார்கள். தலித் மக்கள் தலித் கிறித்தவர்களை இழிவுபடுத்தி வெளியிடப்பட்ட திரௌபதி, ருத்ரதாண்டவம் என்ற திரைப்படங்களை எதிர்த்து, எந்தப் போராட்டமும் நடத்தவில்லை.

சமூகநீதி வரலாற்றின் நீட்சிஜெய்பீம்

சமூக நீதிக்காகவும், ஒடுக்கப்பட்டோர் உரிமை வாழ்வுக்காகவும் அர்ப்பணத்தோடு உழைத்த தலைவர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் இயற்பெயர் பீம்ராவ். ஆகவே, அவரை வாழ்த்துகிறபோது ஜெய்பீம் என்ற கோஷத்தை முழக்கமிடுவார்கள். அம்மாபெரும் தலைவரின் பெயரை இத்திரைப்படம் தாங்கி நிற்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்று தரும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஜெய்பீம். நடிகர் சூர்யா நடித்து, தயாரித்து, திரு. ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்த இப்படம், ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு எதிரான அநீதிகளையும் எதிர்த்து போராடி, நீதியை பெற்ற உண்மை சம்பவத்தை புனைந்து திரைப்படமாக்கி இருக்கிறார்கள். குறவர் - இருளர் பழங்குடியினர் சமுதாயத்தை சார்ந்த திரு. ராஜா கண்ணு 1993 இல் விருத்தாசலம் அருகில், மூதனை கிராமத்தில் வாழ்ந்து வந்தவர். அவர் மீது பொய்யான திருட்டு குற்றம் சுமத்தி, போலீசார் அடித்து கொலை செய்து, மீன்சுருட்டி பக்கம் உடல் போடப்படுகிறது. பிறகு, அனாதைப் பிணம் என்று எரிக்கப்படுகிறது. அவருடைய மனைவி பார்வதி நீதிகேட்டு கம்யூனிசக்கட்சி திரு.கோவிந்தராஜ் துணையோடு போராடினார். வழக்கறிஞர் சந்துரு (ஓய்வு பெற்ற நீதிபதி) பணம் வாங்காமல் ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாக, நீதிமன்றத்தில் போராடி நீதியைப் பெற்று தந்தார். 2006 இல் ராஜாக் கண்ணுவை கொலைச் செய்த அந்தோணிசாமி என்ற காவல்துறை ஆய்வாளர் மற்றும் இரண்டு காவல் துறையினருக்கு ஆயுள் தண்டணை அளிக்கப்பட்டது.

உரிமைகள் மறுக்கப்பட்டு, பிறசாதியினரால் ஒடுக்கப்பட்டு, காவல்துறையாலும் சித்திரவதை செய்யப்படுகிற பழங்குடி இருளர் - குறவர் இனத்தாருக்கு சமூகநீதி அளிக்கப்பட வேண்டும் என்ற உணர்வை ஊட்டுகின்றஜெய்பீம் திரைப்படம் அமேசான் பிரைம்டைம் O.T.T. யில் வெளியானது, உலக அளவில் பாராட்டுப் பெறுகிறது.

பாட்டாளி மக்கள் கட்சி இப்படத்தின் ஒரு காட்சியில் வைக்கப்பட்ட காலண்டர் தங்கள் தலைவரை இழிவுப்படுத்தும் வண்ணமாக அமைந்திருக்கிறது என்று எதிர்ப்பு தெரிவித்து, திரைப்படத்தில் காலண்டர் மாற்றப்பட்டது. இருப்பினும், அரசியலுக்காக கலவரம் தொடர்கிறது. இப்படத்தின் கதாநாயகர் சூர்யா, சமூக நீதிக்காக அனைவரும் ஈடுபட்டு உழைக்க வேண்டும் என்பதை வலிமையாக, திரைப்படத்தின் வழியாக தூண்டியது மட்டுமல்லாமல், இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிற ராஜா கண்ணு மனைவி திருமதி. பார்வதியம்மாளுக்கு நிதி உதவி அளித்துள்ளார். இருளர் சமூக முன்னேற்ற திட்டங்களுக்கு ஒரு கோடி ரூபாய் அளித்துள்ளார். அனைவருக்கும் எழுச்சியூட்டும் இத்திரைப்படத்தை பாராட்டுவது மட்டுமல்லாமல், அனைத்து சமூகத்தினரும் சமூகநீதிக்காகவும், ஒடுக்கப்பட்டோர் உரிமை வாழ்வுக்காகவும் அர்ப்பணித்து வாழ வேண்டும்.