Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் சைப்பிரசு, கிரேக்க நாட்டு திருத்தூதுப் பயணத்திற்காக செபியுங்கள்
Saturday, 11 Dec 2021 05:42 am
Namvazhvu

Namvazhvu

டிசம்பர் 02 ஆம் தேதி வியாழனன்று தான் துவங்கவிருக்கும் சைப்பிரசு மற்றும் கிரேக்க நாட்டு திருத்தூதுப் பயணத்திற்காகச் செபிக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 01 ஆம் தேதி புதன் காலையில் திருத்தந்தை புனித 6 ஆம் பவுல் அரங்கத்தில் மறைக்கல்வியுரையை வழங்கிய பின்னர் கேட்டுக்கொண்டார்.

வரலாறு, ஆன்மீகம், கலாச்சாரம் ஆகியவற்றில் வளமையுடைய இந்நாடுகளின் மக்களைச் சந்திப்பதற்காக, டிசம்பர் 2 ஆம் தேதி வியாழனன்று தான் புறப்படுவதாகவும், இந்த திருத்தூதுப் பயணம், பல்வேறு கிறிஸ்தவ சபையினர் மத்தியில் திருத்தூதர்களின் நம்பிக்கை மற்றும் உடன்பிறப்பு உணர்வின் ஊற்றுக்களாக அமைகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

இவ்விரு நாடுகளிலும் வாழ்கின்ற புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோரை, குறிப்பாக, கிரேக்கத் தீவான லெஸ்போசுக்குச் சென்று, புகலிடம் கிடைப்பதற்காகக் முகாம்களில் காத்திருக்கும் மக்களை தான் சந்திக்கவுள்ளதாகக் கூறிய திருத்தந்தை, உடலால் காயமடைந்துள்ள இந்த மனித சமுதாயத்தைச் சந்திப்பதற்கு தனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் கூறினார்.

எய்ட்ஸ் நோயாளிகளை நினைவுகூருங்கள்

மேலும், டிசம்பர் 01 ஆம் தேதி புதனன்று கடைப்பிடிக்கப்பட்ட எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு உலக நாளை, புதன் மறைக்கல்வியுரைக்குப்பின் நினைவுபடுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எய்ட்ஸ் நோயாளிகளோடு தனது தோழமையுணர்வை வெளிப்படுத்தியதோடு, அவர்களை நினைவுகூருமாறு அனைவரிடமும் கேட்டுக்கொண்டார்.

ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் முதல் தேதியன்று கடைப்பிடிக்கப்படும் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு நாளில், அந்நோய்க் கிருமியால் தாக்கப்பட்டுள்ளவர்களை நினைவுகூர்வதற்கு நல்ல வாய்ப்பு என்றும், இன்றும் உலகின் சில பகுதிகளில், அந்நோயாளிகளுக்குத் தேவையான முக்கிய சிகிச்சை கிடைப்பதில்லை என்றும் திருத்தந்தை கூறினார்

இம்மறைக்கல்வியுரையில் பங்குபெற்ற இத்தாலிய திருப்பயணிகளை வாழ்த்தியபோது, இந்நோயாளிகளுக்கு நியாயமான மற்றும், பலனுள்ள சிகிச்சைகள் கிடைப்பதற்கு புதுப்பிக்கப்பட்ட தோழமையுணர்வு அவசியம் எனவும் திருத்தந்தை கூறினார். “சமத்துவமற்றநிலைகளை, எய்ட்ஸ் நோயை, பெருந்தொற்றை முடிவுக்குக் கொணருங்கள்என்ற தலைப்பில், 2021 ஆம் ஆண்டு எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு உலக நாளை .நா. கடைப்பிடித்தது.

இதற்கிடையே, இந்த எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு உலக நாளை .நா. பொது அவையில் நினைவுகூர்ந்த, அந்த அவையின் தலைவர் அப்துல்லா ஷாஹித் அவர்கள், உலகில் நிலவும் சமத்துவமற்றநிலைகளைச் சரிசெய்வதற்கு, உலகத் தலைவர்கள், நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், அடுத்த பத்து ஆண்டுகளில், எய்ட்ஸ் நோய் தொடர்புடைய இறப்புகள் 77 இலட்சத்தை எட்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்நோய்க் கிருமி கண்டுபிடிக்கப்பட்டு நாற்பது ஆண்டுகள் ஆகியும், இந்நோயாளிகள், தனிமை, பாகுபாடு, அச்சம் போன்ற உணர்வுகளை எதிர்கொள்கின்றனர் என்றும், இந்நோய்க்கு காரணமான எச்ஐவி கிருமிகள் மேலும் பரவாமல் தடுப்பதற்கு, உலக அளவில் ஒத்துழைப்பும், ஒருமைப்பாடும் அவசியம் என்றும், அப்துல்லா அவர்கள் எடுத்துரைத்தார்.