Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் சைப்பிரசு மக்கள் திருத்தந்தைக்காகக் காத்திருக்கின்றனர்
Saturday, 11 Dec 2021 05:53 am
Namvazhvu

Namvazhvu

டிசம்பர் 2ஆம் தேதி வியாழன் முதல், 4ஆம் தேதி சனிக்கிழமை வரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சைப்பிரசு நாட்டில் மேற்கொள்ளும் திருத்தூதுப்பயணத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்துள்ளன என்று, அந்நாட்டில் பணியாற்றும் அருள்பணியாளர் இப்ரகிம் கித்தா அவர்கள் வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் 35வது திருத்தூதுப்பயணத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும், கத்தோலிக்கர் மட்டுமல்லாமல், ஆர்த்தடாக்ஸ் சபையினரும், ஏனைய கிறிஸ்தவ சபையினரும் இணைந்து மேற்கொண்டது, நிறைவான ஓர் அனுபவமாக இருந்தது என்று அருள்பணி இப்ரகிம் கித்தா அவர்கள் எடுத்துரைத்தார்.

சைப்பிரசு நாட்டிலும், கிரேக்க நாட்டிலும் திருத்தந்தை மேற்கொள்ளும் ஐந்து நாள் திருத்தூதுப்பயணத்தில், சைப்பிரசின் நிக்கோஸியா நகரிலும், கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரிலும், லெஸ்போஸ் தீவிலும் பல்வேறு சந்திப்புகளும், நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 2010 ஆம் ஆண்டு, அப்போதையத் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்கள், சைப்பிரசு நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டிற்குச் செல்லும் இரண்டாவது திருத்தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 2 ஆம் தேதி வியாழன் பிற்பகல் சைப்பிரசு நேரம் 3.30 மணிக்கு அந்நாட்டில் தன் பயணத்தைக் துவக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டில் நடைபெறும் வரவேற்பு நிகழ்வுகளுக்குப்பின், நிக்கோஸியா மாரனைட் வழிபாட்டு முறை அருள்நிறை அன்னை மரியாவின் பேராலயத்தில், அருளப்பணியாளர்கள், இருபால் துறவியர், திருத்தொண்டர்கள், மறைக்கல்வி ஆசிரியர்கள், கத்தோலிக்க இயக்கங்களைச் சார்ந்தோர் ஆகியோரை முதலில் சந்திக்கும் திருத்தந்தை, அன்று மாலையே அரசுத்தலைவரையும், அரசு அதிகாரிகளையும், அரசியல் தூதர்களையும் சந்திக்கிறார்.

டிசம்பர் 3 ஆம் தேதி வெள்ளி காலையில், சைப்பிரசின் ஆர்த்தடாக்ஸ் பேராயர் 2 ஆம் கிறிசோஸ்தோம்ஸ் அவர்களை தனியே சந்திக்கும் திருத்தந்தை, நிக்கோஸியாவின் ஆர்த்தடாக்ஸ் பேராலயத்தில், ஆர்த்தடாக்ஸ் ஆயர் மாமன்றத்தின் உறுப்பினர்களை சந்திக்கிறார். அதைத்தொடர்ந்து, நிக்கோஸியாவின் ஜிஎஸ்பி விளையாட்டுத் திடலில் திருப்பலியை தலைமையேற்று நடத்தும் திருத்தந்தை, அந்நகரின் திருச்சிலுவை ஆலயத்தில், குடிபெயர்ந்த மக்களைச் சந்திக்கிறார்.

டிசம்பர் 4 ஆம் தேதி சனிக்கிழமை, கிரேக்க நாட்டில் திருத்தூதுப்பயணத்தைத் துவக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 6 ஆம் தேதி திங்களன்று தன் பயணத்தை நிறைவு செய்து, உரோம் நகர் திரும்புகிறார். 8,50,000த்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட சைப்பிரசு நாட்டில், 80 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். இவர்களில் பெரும்பாலானோர், தங்களை, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் என்று அடையாளப்படுத்துகின்றனர். அந்நாட்டின் மக்கள் தொகையில், 38,000 பேர் கத்தோலிக்கர்கள்.

சைப்பிரசு நாட்டில், திருத்தூதர் பவுல் பணியாற்றிய வேளையில், உரோமைய அரசின் சார்பாக அங்கு பணியாற்றிய ஆளுநர் செர்ஜியுஸ் பவுலுஸ் அவர்கள் கிறிஸ்தவத்தைத் தழுவியதைத் தொடர்ந்து, சைப்பிரசு நாட்டில் கிறிஸ்தவம் வேரூன்றியது.