Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் கிரேக்க அரசுத்தலைவர் மாளிகையில் திருத்தந்தையின் உரை
Saturday, 11 Dec 2021 07:12 am
Namvazhvu

Namvazhvu

ஆன்மீக, கலாச்சார மற்றும் நாகரீக வளம்கொண்ட இந்நாட்டிற்கு ஒரு திருப்பயணியாக வந்துள்ளேன். ஞானம் நிறைந்த மகிழ்வு இங்கிருந்து எங்கும் பரவியுள்ளதைக் காண்கிறேன். ஏதன்ஸ் நகரமும், கிரேக்க நாடும் இல்லையென்றால், ஐரோப்பா இன்றிருக்கும் நிலையில் இருந்திருக்காது மற்றும் இத்தனை ஞானமும் மகிழ்வும் பரவியிருக்காது. இங்கிருந்துதான் மனிதகுலத்தின் கீழ்வானம் பரந்து விரிந்தது. இந்நகரில் உயரமாக, குன்றில் எழும்பி நிற்கும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த, பார்த்தினன் கோயிலை உள்ளடக்கிய குறுநகரை நோக்கி என் கண்களை உயர்த்த ஆவல் கொள்கிறேன். தெய்வீக இருப்பை சுட்டிக்காட்டுவதாக இருக்கும் இந்த தொன்மை வாய்ந்த கட்டடம், மேலேயிருக்கும் உயர்வானவை குறித்த நம் அடிவானத்தை விரிவாக்க அழைப்புவிடுக்கிறது. ஒலிம்பஸ் குன்றிலிருந்து அக்ரோபோலிஸ் மற்றும் அங்கிருந்து அதோஸ் குன்று என உயரம் நோக்கி தங்கள் வாழ்வுப் பயணத்தைச் செலுத்த, அனைத்து ஆண்களுக்கும், பெண்களுக்கும், கிரேக்க நாடு அழைப்புவிடுக்கிறது. உண்மை மனிதர்களாக வாழ, கடவுளை நோக்கிச் செல்லும் ஒருவித கடந்த நிலை நமக்குத் தேவைப்படுகின்றது. இன்றைய மேற்கத்தியக் கலாச்சாரத்தில், கடவுளின் தேவை மறக்கப்பட்டு, உலகாயுதப்போக்கும் நுகர்வுக் கலாச்சாரமும் மலிந்து காணப்படுகின்றன. இருப்பினும், இவ்விடங்கள், நம் இருப்பின் அழகையும், விசுவாசத்தின் மகிழ்வையும் பறைசாற்றி நிற்கின்றன. நற்செய்தியின் பாதையாக, இந்த இடம், கிழக்கையும் மேற்கையும் இணைத்து நிற்கின்றது. இறைவனின் நற்செய்தியை உலகிற்கு அறிவிக்க, நற்செய்தி நூல்கள் கிரேக்க மொழியில் எழுதப்பட்டன. இந்த நகரில், நம் பார்வை, இறைவனை நோக்கி மட்டுமல்ல, நமக்கு அடுத்திருப்பவரை நோக்கியும் செல்ல அழைப்பு விடப்படுகின்றது. பல்வேறு இன மக்களின் ஒருங்கிணைப்புப் பாலமாக இது செயல்பட்டுவருவதும் ஒரு காரணம்.

இங்குள்ள வரலாற்று ஆசிரியர்கள், அருகிலும், தூரத்திலும் உள்ள நாடுகள் குறித்து எழுதியுள்ளனர். மனிதர்கள் தங்களை ஒரு குறிப்பிட்ட நாட்டின் குடிமக்களாக அல்லாமல், உலகமனைத்தின் குடிமக்களாக காணத் துவங்கியதை சாக்ரட்டீசின் வார்த்தைகளில் காண்கிறோம். இங்குதான் மக்களாட்சி முதலில் பிறப்பெடுத்தது. அந்த தொட்டிலில்தான் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அமைதி மற்றும் உடன்பிறந்த நிலைக்கான கனவுகளும் உருவெடுத்தன. ஆனால் இன்றோ, ஐரோப்பாவில் மட்டுமல்ல, பல்வேறு நாடுகளிலும், மக்களாட்சி கொள்கைகளிலிருந்து விலகி, சர்வாதிகாரப் போக்கை நோக்கிச்செல்வது எளிதானது, ஆள்வதற்கு வசதியானது என்பதுபோன்ற ஒரு மனநிலை உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் என்பது, பொதுநலனுக்காக தன்னை அர்ப்பணிப்பதாக, சமுதாயத்தின் பலவீனமான மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து உழைப்பதாக இருக்கவேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்கியவர்களுள் ஒருவர் கூறியது போல், இன்று நாம் இடது பக்கம் செல்வதையும், வலது பக்கம் செல்வதையும் குறித்து அதிகம் பேசுகிறோம், ஆனால், முன்னோக்கிச் செல்வதே முக்கியமானது, முன்னோக்கிச் செல்வது என்பது, சமூக நீதியை நோக்கி முன்னோக்கிச் செல்வதாகும்.

பாகுபாடற்ற நிலைகளிலிருந்து பங்கேற்பு நிலை நோக்கி நாம் செல்கிறோம். இதுதான் நம் பல்வேறு செயல்பாடுகளின் நோக்கமாக இருக்கவேண்டும். தட்ப வெப்ப நிலை மாற்றம், பெருந்தொற்று, பொதுச்சந்தை, அனைத்திற்கும் மேலாக, விரிந்து காணப்படும் ஏழ்மை போன்றவைகளை எண்ணிப்பார்க்கிறேன். இவைகள் நம் ஆழமான ஒத்துழைப்பிற்கு அழைப்புவிடுக்கின்றன. இந்த நாட்டின் அடையாளமாக நிற்கும் ஒலிவ மரங்கள் பல, தட்ப வெப்ப நிலைகளின் காரணமாக தீக்கிரையாகி அழிந்துள்ளதை எண்ணிப்பார்க்கிறேன். காலநிலை மாற்றத்தினை கருத்தில் கொண்டு, நம் வாழ்க்கை வழிகளையும், இறைவனின் படைப்புகள் குறித்த நம் அணுகுமுறைகளையும் மாற்றவேண்டியத்  தேவை உள்ளது.

விவிலியத்தில் ஒலிவக் கிளைகள், நட்புணர்வுக்கு, குறிப்பாக, தன் இனம் சாராத மக்களுடன் நட்புணர்வுக்கு அழைப்புவிடுக்கும் எண்ணத்தை வெளிப்படுத்துகின்றன. இந்த நாடு, எண்ணற்ற புலம்பெயர்ந்த சகோதரர், சகோதரிகளுக்கு புகலிடம் தந்துள்ளது. புலம்பெயர்வோரை ஏற்றுக்கொள்ள சில நாடுகள் தயங்கும் நிலைகளும் பிறந்துள்ளன. இவ்வேளையில், என் விண்ணப்பத்தை, மீண்டும் முன்வைக்கிறேன். இம்மக்கள் வரவேற்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, அவர்களின் வாழ்வு முன்னேற்றப்பட்டு, சமுதாயத்தில் இணைக்கப்பட்டு, அவர்களின் மனித உரிமைகளும் மாண்பும் மதிக்கப்படவேண்டும் என விண்ணப்பிக்கிறேன்.

இன்றையப் பெருந்தொற்று, மிகப்பெரும் இழப்பாக வந்து, நம் பலவீனங்களையும், நாம் ஒருவரையொருவர் சார்ந்திருக்கவேண்டிய தேவையையும் நமக்குக் காட்டியுள்ளது. இந்நாட்டில், புனிதத் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவர்கள் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டதன் 20 ஆம் ஆண்டில், நானும் திருத்தூதுப்பயணம் மேற்கொள்வதில் மகிழ்கின்றேன். இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால், இந்நாட்டின் இடைக்கால அரசு, கத்தோலிக்கர்களுக்கு ஆற்றிய உரையினை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன். நமக்கு அடுத்திருப்பவரையும் அன்புகூர கட்டளையிட்டார் இயேசு கிறிஸ்து. நாம் ஒரே தாய் நாட்டைக் கொண்டுள்ளோம், நாமனைவரும் ஒரே மக்கள், திருச்சிலுவையின் கீழ் நாமனைவரும் சகோதரர், சகோதரிகள், என்று அன்று நமக்கு கூறப்பட்டதுபோல், அனைவரையும் இறைஇரக்கத்தில் அரவணைப்போம்.

திறந்தமனதுடன், அனைவரையும் ஒன்றிணைத்து, நீதியுடன், இந்நாடு முன்னோக்கிச் செல்லும் பாதை தொடரட்டும். நாகரீகத்தின் தொட்டிலாகிய இந்நகரிலிருந்து, மேல் நோக்கியும், நமக்கு அடுத்திருப்பவரை நோக்கியும் நம் பார்வைகளைத் திருப்புவதற்கு உதவும் செய்திகள் பரவட்டும். தனியுரிமை கோட்பாடுகளும், அக்கறையற்ற நிலையும், அடுத்தவர் மீது நாம் காட்டும் அக்கறைகளால், குறிப்பாக, ஏழைகள் மற்றும் படைப்பின் மீது நாம் காட்டும் அக்கறைகளால் வெற்றி கொள்ளப்படுவதாக.