Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் லெஸ்போஸ் தீவின் புலம்பெயர்நதோர் - திருத்தந்தையின் உரை
Saturday, 11 Dec 2021 07:41 am
Namvazhvu

Namvazhvu

டிசம்பர் 5 ஆம் தேதி ஞாயிறன்று, கிரேக்க நாட்டின் லெஸ்போஸ் தீவில் அமைந்துள்ள மைத்திலீன் என்ற முகாமில் வாழும் புலம்பெயர்ந்தோரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்த வேளையில், அவர்களுக்கு வழங்கிய உரையின் சுருக்கம்:

அன்பு சகோதரிகளே, சகோதரர்களே, நான் மீண்டும் ஒருமுறை உங்களைச் சந்திக்க வந்துள்ளேன். உங்கள் முகங்களை, உங்கள் கண்களில் தெரியும் அச்சத்தை, கண்ணீரைக் காண்கிறேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன், என் அன்பு சகோதரர் பர்த்தலோமேயு அவர்களுடன் உங்களைக் காணவந்த வேளையில், அவர் உங்களிடம் கூறிய சொற்கள் என் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தன: "உங்களைக் கண்டு அஞ்சுவோர், உங்கள் கண்களை உற்று நோக்காதவர்கள். உங்கள் முகங்களையும், உங்கள் குழந்தைகளையும் அவர்கள் உற்று நோக்கவில்லை. மனித மாண்பும், சுதந்திரமும், அச்சத்தையும், பிரிவையும் கடந்தவை என்பதை, அவர்கள் மறந்துவிட்டனர். குடிபெயர்தல் என்ற பிரச்சனை, மத்தியக் கிழக்குப் பகுதி, ஆப்ரிக்கா, ஐரோப்பா, கிரேக்க நாடு ஆகியவற்றின் பிரச்சனை மட்டுமல்ல, அது ஓர் உலகப் பிரச்சனை என்பதை அவர்கள் மறந்துவிட்டனர்" என்று சகோதரர் பர்த்தலோமேயு அவர்கள் கூறினார்.

குடிபெயர்தல் உலகமெங்கும் வாழும் நம் அனைவரையும் சார்ந்த ஒரு பிரச்சனை. நம் அனைவருக்குமே ஒரே மாதிரியான பிரச்சனை, ஒரே மாதிரியான அச்சம் உண்டு என்பதை, இந்த பெருந்தொற்று நமக்கு உணர்த்தியுள்ளது. உலகளாவிய பிரச்சனைகளை, அனைவரும் இணைந்து சந்திக்கவேண்டும் என்பதை இப்போது நாம் புரிந்துகொண்டுள்ளோம். அனைவருக்கும் தடுப்பூசி போடுதல், காலநிலை மாற்றத்தைச் சந்தித்தல் போன்ற பிரச்சனைகளில் இணைந்துவரும் நாம், குடிபெயர்தல் என்ற பிரச்சனையைச் சந்திப்பதில் இணைந்து வருவதில்லை. இந்தப் பிரச்சனையால், மனித உயிர்கள் ஆபத்தைச் சந்திக்கின்றன. அனைவரும் இணைந்தால் மட்டுமே உலக அமைதியை நிலைநாட்ட முடியும். வறியோரை நாம் புறக்கணிக்கும்போது, அமைதியையும் நாம் புறக்கணிக்கிறோம்.

தனிப்பட்டவர்களின் நலம், நாட்டின் நலம் ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்தும்போது, அது, பல்வேறு அழிவுகளை உருவாக்குகிறது. உதவி வேண்டி, நம் வீட்டுக் கதவுகளைத் தட்டுவோரைப்பற்றி கவலைப்படாமல், நம் சுயநலத்தை மட்டும் காத்துக்கொள்வதால், பாதுகாப்பாக இருக்கமுடியும் என்று நம்புவது ஒரு மாயை.

சகோதாரிகளே, சகோதரர்களே, உங்கள் முகங்களும், கண்களும், நாங்கள் எங்கள் பார்வையைத் திருப்பிக்கொள்ளக் கூடாது என்பதையும், பொதுவான மனிதத்தன்மையை மறுக்கக்கூடாது என்பதையும் நினைவுறுத்துகின்றன. அயலவரின் துன்பங்களையும், தேவைகளையும் அலட்சியப்படுத்தும் எங்கள் உள்ளங்களை இறைவன் விழிப்படையச் செய்யவேண்டும் என்று இந்த ஞாயிறன்று இறைவேண்டல் செய்கிறேன்.

என் சகோதரர்கள் பர்த்தலோமேயு, எரோனிமுஸ் ஆகியோருடன் நான் இங்கு வந்து, ஐந்து ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆயினும், புலம்பெயர்தல் பிரச்சனையில் மிகக் குறைந்த மாற்றங்களே காணப்படுகின்றன. தனிப்பட்ட முறையில் தன்னார்வத்தொண்டர்கள் ஆற்றிவரும் பணிகளை நான் பாராட்டுகிறேன். இந்தப் பிரச்சனையால் துன்புறுவோருக்கு கிரேக்க நாடு செய்துவரும் உதவிகளுக்காக நன்றி கூறுகிறேன். ஐரோப்பாவில் ஒரு சில நாடுகளே புலம்பெயர்ந்தோருக்கு உதவிகள் செய்துவருகின்றன. இன்னும் சில நாடுகள், இப்பிரச்சனை தங்களைச் சார்ந்ததல்ல என்ற பாணியில் நடந்துகொள்வது வருத்தம் தருகிறது.

குடியேற்றதாரர்களைத் தடுக்கும் நோக்கத்தில் சுவர்களைக் கட்டுவதற்கு அரசுகள் பொது நிதியைப் பயன்படுத்தும் முடிவுகளைக் கேட்டு வேதனையடைகிறேன். சுவர்களை எழுப்புவதும், சுவர்களின் உயரத்தைக் கூட்டுவதும், இந்தப் பிரச்சனையைத் தீர்க்கப்போவதில்லை. அனைவரும் இணைந்து, அனைவரின் வாழ்வையும் உயர்த்தும்போது மட்டுமே இந்தப் பிரச்சனை தீரும் என்பதை உணரவேண்டும். உலக அமைதி நோபல் விருதை, 1986 ஆம் ஆண்டு பெற்ற ஏலி வீஸல் அவர்கள், தன் ஏற்புரையில், "மனித வாழ்வு அச்சுறுத்தப்படும்போது, மனித மாண்பு ஆபத்தில் இருக்கும்போது, தேசிய எல்லைகள் பொருளற்று போகின்றன" என்று கூறியுள்ளார்.

இன்று உலகம் சந்தித்துவரும் பல பிரச்சனைகளுக்கு எவ்விதத்திலும் காரணமாய் இல்லாத வறியோர், அந்தப் பிரச்சனைகளின் தாக்கங்களை அதிகம் அடைகின்றனர். இதைப்பற்றி நாம் அதிகம் பேசுவதில்லை. பிரச்சனைகள் எழும்போது, அவற்றின் அடிப்படை காரணங்களைக் கண்டு, அவற்றை சீர் செய்வதற்கு முயற்சி செய்யாமல், அவசர உதவிகளோடு நிறுத்திக்கொள்வதால் பயனில்லை.

இந்தப் பிரச்சனைகளுக்கு, தெளிவான, தீர்வுகள் காண நாம் விரும்பினால், குழந்தைகளின் முகங்களை உற்றுநோக்கவேண்டும். அவர்களது முன்னிலையில், அப்பழுக்கற்ற அவர்களது பிரசன்னத்தில், வெட்கித் தலைகுனியும் துணிவை நாம் பெறவேண்டும். "எவ்விதமான உலகை எங்களுக்குத் தர விரும்புகிறீர்கள்?" என்று குழந்தைகள் கேட்பது, நம் மனசாட்சிக்கு விடுக்கப்படும் சவால். உயிரற்ற அவர்களது உடல்கள், கடற்கரைகளில் ஒதுங்கியிருப்பதைக் கண்டு, அதிர்ச்சியுற்று நம் பார்வையை திருப்பிக்கொள்ளவேண்டாம். நமக்கு அருகே உள்ள மத்தியத்தரைக் கடலை, இன்னும் தொடர்ந்து ஒரு கல்லறையாக மாற்றவேண்டாம். கலாச்சாரம் என்ற கப்பல் விபத்துக்குள்ளாவதை தயவுசெய்து நிறுத்துவோம்!

இந்தக் கடலின் ஒரு கரையோரம் கடவுள் மனிதராக உருவெடுத்தார். அவர் நம் அனைவரையும் உடன்பிறந்தோராய் வாழ அழைத்துள்ளார். நல்ல சமாரியர் உவமை வழியாகவும் (காண்க. லூக். 10:29-37), இறுதித்தீர்வை உவமை வழியாகவும் (காண்க. மத். 25:31-46), அன்னியரில், வறியோரில் நாம் இறைவனைச் சந்திக்கவேண்டும் என்று  இயேசு பணித்துள்ளார்.

இப்போது, நாம் நமது அன்னை மரியாவிடம் செபிப்போம். நம் சகோதரர்கள், சகோதரிகள் ஆகியோரின் துன்பங்களைக் காண்பதற்கு, அந்த அன்னை, நம் கண்களைத் திறக்கவேண்டும் என்று மன்றாடுவோம். கருவுற்றிருக்கும் எத்தனை அன்னையர், குடிபெயரும் பயணங்களில், தங்கள் கருவில் சுமந்த உயிர்களோடு, தங்கள் உயிரையும் இழந்துள்ளனர்! அனைத்து மனிதர்களையும், இறைவனின் குழந்தைகளாக ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அன்னை மரியா நமக்கு வழங்குவாராக.