திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் மாநகராட்சிக்கு, மார்ச் 26 ஆம் தேதி செவ்வாய் காலை 10.30 மணிக்குச் சென்று, உரோம் மேயர் விர்ஜீனியா ராஜ்ஜி அவர்களையும், மாநகராட்சி அதிகாரிகளையும் சந்தித்து உரையாற்றினார்.
காம்பிடாஜிலியோ என்னுமிடத்தில் அமைந்துள்ள உரோம் மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்று, அதன் நிர்வாகத்தினருக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் மாநகர அதிகாரிகள், திருப்பீடத்துடன் பல்வேறு திருஅவை நிகழ்வுகளில், குறிப்பாக, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் ஒத்துழைத்து ஆற்றிய பணிகளுக்கு, தனிப்பட்ட முறையில், தான் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.
ஏறக்குறைய 2,800 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட உரோம் மாநகரம், உலகின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வருகின்ற பல்வேறு மக்கள் இனங்களையும், பல்வேறு சமூக, மற்றும் பொருளாதாரச் சூழல்களிலிருந்து வருகின்ற மனிதர்களையும், எவ்வித வேறுபாடின்றி வரவேற்று ஒருங்கிணைத்து வருகின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் பாராட்டினார்,
இத்தாலியின் தலைநகரமாகவும், கத்தோலிக்கத்தின் மையமாகவும் விளங்குகின்ற உரோம் மாநகரம், புனித திருத்தூதர்கள் பேதுரு, பவுல் உட்பட பல்வேறு மறைசாட்சிகளையும் பார்த்திருக்கின்றது என்றும் உரைத்த திருத்தந்தை, இம்மாநகரம், எண்ணற்ற பிரச்சனைகளை எதிர்கொள்வதிலும், இவ்வளவு வளமையான மரபுச்சொத்துக்களை நிர்வகிப்பதிலும், அரசு மற்றும் மதத் தலைவர்களுக்கிடையே மதிப்பும், ஒத்துழைப்பும், நல்லுறவும் அவசியம் என்றும் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் மாநகராட்சிக்குச் சென்றதன் நினைவாக, கல்வி உதவித் தொகை அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் சிறிய அறை ஒன்றிற்கு, திருத்தந்தையின் லவுடாத்தோ சி திருமடலின் பெயர் சூட்டப்பட்டுள்ளது மிகவும் பாராட்டத்தக்கது.