Namvazhvu
குடந்தை ஞானி அரேபியாவின் நமதன்னை பேராலயத் திறப்பு விழா
Thursday, 16 Dec 2021 05:18 am
Namvazhvu

Namvazhvu

பஹ்ரைன் நாட்டின் அவாலியில், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் உள்ளிட்ட, திருஅவைத் தலைவர்களின் முன்னிலையில், அரேபியாவின் நமதன்னை கத்தோலிக்க பேராலயத்தை, டிசம்பர் 09 ஆம் தேதி வியாழனன்று, பஹ்ரைன் அரசு அதிகாரி ஒருவர் திறந்துவைத்தார்.

இந்தப் பேராலயம் கட்டுவதற்குத் தேவையான நிலத்தை, 2002 ஆம் ஆண்டு நன்கொடையாக வழங்கிய பஹ்ரைன் மன்னர் அமத் பின் இஸா அல் கலிப்பா அவர்களின் பிரதிநிதியாக, சேக் அப்துல்லா பின் அமத் அல் கலிப்பா அவர்கள், இந்தப் பேராலயம் அமைந்துள்ள வளாகத்தையும், பேராலயக் கட்டடத்தையும் திறந்துவைத்தார்.

பாரசீக வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைனில், கட்டப்பட்டுள்ள அரேபியாவின் நமதன்னை பேராலயத்தை, டிசம்பர் 10 ஆம் தேதி வெள்ளியன்று கர்தினால் தாக்லே அவர்கள் அர்ச்சித்தார். இந்நிகழ்வில், வட அரேபியாவின் அப்போஸ்தலிக்கப் பிரதிநிதி ஆயர் பால் ஹின்டர், பஹ்ரைன் மற்றும் குவைத் திருப்பீடத் தூதர் பேராயர் யூஜின் நியுஜென்ட் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இப்பேராலய அர்ச்சிப்பு திருப்பலியை நிறைவேற்றிய கர்தினால் தாக்லே அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் திருப்பீடத்தின் சார்பில், பஹ்ரைன் அரசுக்கு நன்றி தெரிவித்ததோடு, பஹ்ரைன் அரச குடும்பம், கத்தோலிக்கத் திருஅவைக்கு எப்போதும் ஆதரவாக இருப்பதற்கும் நன்றி தெரிவித்தார்.

மூலைக்கல்லாகிய கிறிஸ்துவில் எவ்வாறு நாம் நிலைத்திருப்பது என்பது பற்றி மறையுரையில் விளக்கிய கர்தினால் தாக்லே அவர்கள், இறைவார்த்தை, திருநற்கருணை மற்றும் பிறரன்புப் பணியின் வழியாக, உயிருள்ள கல்லாகிய இயேசுவிடம் வந்து, உயிருள்ள ஒரு குழுமமாக மாறமுடியும் என்று கூறினார்.

பஹ்ரைனில் வாழ்கின்ற கத்தோலிக்க சமுதாயத்தின் உயிருள்ள கற்கள், அந்நாட்டில் ஒருமைப்பாடு மற்றும், ஒன்றிப்பு உறுதிப்பட தங்கள் பங்கை அளிப்பார்களாக என்றுரைத்து, கர்தினால் தாக்லே தன் மறையுரையை நிறைவுசெய்தார்.

அரேபியாவின் நமதன்னை பேராலயம்

95,000 சதுர அடி நிலப்பரப்பு கொண்ட வளாகத்தின் நடுவே, ஒரு பேழை வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பேராலயத்தில், 2,300 பேர் அமரமுடியும் என்று கூறப்படுகிறது.

1948 ஆம் ஆண்டு அரேபியாவின் நமதன்னை என்ற பெயரில் குவைத்தில் ஒரு சிற்றாலயம் உருவாக்கப்பட்ட வேளையில், மரியன்னைக்கு வழங்கப்பட்ட அந்த பெயரை அங்கீகரித்த திருத்தந்தை 12 ஆம் பயஸ் அவர்கள், அரேபியாவின் நமதன்னையை, குவைத் பகுதியின் பாதுகாவலராக அறிவித்தார். அதைத் தொடர்ந்து, 2011 ஆம் ஆண்டு, அரேபியாவின் நமதன்னை, குவைத் மற்றும் அரேபியாவிற்கு பாதுகாவலர் என்று வத்திக்கான் அறிவித்தது. 80,000த்திற்கும் அதிகமான கத்தோலிக்கர்கள் வாழும் பஹ்ரைன் நாட்டில், பெரும்பான்மையானோர், ஆசியாவிலிருந்து, குறிப்பாக பிலிப்பீன்ஸ் நாட்டிலிருந்து அங்கு பணியாற்றச் சென்றிருக்கும் கத்தோலிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.