மியான்மாரில் கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக இடம்பெற்றுவரும் வன்முறை, உலகினரின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளவேளை, வெறுப்பு மற்றும் மனக்கசப்பின் தீமையை ஏற்காமல், இயேசுவோடு சேர்ந்து, அமைதி நிலவட்டும் என நாம் கூற விரும்புகிறோம் என்று அந்நாட்டு கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் கூறியுள்ளார்.
மியான்மார் கத்தோலிக்கர் மற்றும் குடிமக்கள் அனைவருக்கும் இத்திருவருகைக்காலத்திற்கென்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள யாங்கூன் பேராயரான கர்தினால் போ அவர்கள், இதுவரை நடந்தது போதும் என்று, காயங்களால் நிறைந்துள்ள மியான்மார் நாட்டிற்குச் சொல்வோம் என்று கூறியுள்ளார். அப்பாவி மக்களுக்கு எதிராக இடம்பெறும் அநீதியும் துன்பங்களும் மன்னிக்க முடியாதவை எனவும், குடிமக்களின் வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்குப் பொறுப்பானவர்கள், அச்சமூட்டும் மற்றும் அச்சுறுத்தும் நபர்களாக மாறியுள்ளனர் எனவும், கர்தினால் போ அவர்கள் கூறியுள்ளார்.
மியான்மார் மக்கள் சவால்நிறைந்த காலக்கட்டத்தில் வாழ்ந்து வருகின்றவேளை, "காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது (எசா.9:2) என்ற இறைவாக்கினர் எசாயாவின் இறைவாக்கை, அவர்கள் அனைவரின் இதயங்களும் மிகுந்த வேதனையோடு உச்சரிக்கின்றன என்றும், கர்தினால் போ அவர்கள் கூறியுள்ளார்.
வன்முறையை மட்டுமே நம்புகின்றவர்கள், அதனை அதிகரிப்பவர்கள் மற்றும் அதற்குப் பலியாகின்றவர்கள் ஆகிய எல்லாரும் சுயஆய்வுசெய்வதற்கு கிறிஸ்மஸ் காலம் அழைப்புவிடுக்கின்றது என்றுரைத்துள்ள மியான்மார் கர்தினால், வன்முறையைத் தூண்டிவிட்டு, சித்ரவதைகள் மற்றும் கொலைகளில் நம்பிக்கை வைப்பவர்களே, நாடு கண்ணீர் பள்ளத்தாக்கில் இருப்பதற்கு முக்கிய காரணம் என்றும் குறைகூறியுள்ளார்.
தங்களின் கனவுகள், துப்பாக்கிகளால் கொல்லப்படுவதைப் பார்க்கும் இளையோர் குறித்து மிகுந்த கவலைகொண்டுள்ளதாக உரைத்துள்ள கர்தினால் போ அவர்கள், காழ்ப்புணர்வு மற்றும் முற்சார்பு எண்ணங்களைக் கைவிட்டு, ஒருவர் ஒருவர் மீது நம்பிக்கை வைத்து, விடுதலையைக் கொணரும் உண்மையின் பாதையில் நடக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.