பிரான்ஸ் நாட்டிற்கும் இஸ்பெயினுக்கும் இடையே இருக்கும் அன்டோரா என்ற சிறு நாட்டின் அரசுத்தலைவர் சேவியர் எஸ்பாட் சமோரா வர்கள், டிசம்பர் 13 ஆம் தேதி திங்கள்கிழமையன்று திருத்தந்தையை சந்தித்து உரையாடினார். ஏறத்தாழ 25 நிமிடங்கள் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, இருதலைவர்களுக்கும் இடையே கருத்துப் பரிமாற்றங்கள், நினைவுப்பரிசுப் பொருள்கள் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
திராட்சை வடிவம் கொண்ட மொசைக் கலைவண்ணம், அண்மையில் வெளியிடப்பட்ட திருத்தந்தையின் ஏடுகள் அடங்கிய தொகுப்பு ஆகியவைகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்க, அரசுத்தலைவரோ அன்டோரா நாட்டின் பழைய அரசியலமைப்புப் புத்தகம், நினைவு நாணயம், 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த அர்ஜெலின் ஆயரும், அன்டோராவின் இணை இளவரசருமான பிரான்செஸ் டி டோவி அவர்களின் கையெழுத்துப் பிரதி ஆகியவைகளை திருத்தந்தைக்கு அளித்தார்.
திருத்தந்தையை சந்தித்தபின் அன்டோரா அரசுத்தலைவர் சேவியர் சமோரா அவர்கள், திருப்பீடச் செயலர் பியெத்ரோ பரோலின், மற்றும், பன்னாட்டு உறவுகள் துறையின் திருப்பீடச் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்து உரையாடினார்.