மறைமாவட்ட அளவிலான இறைமக்கள் மாமன்றம் ஏன்? எதற்காக?
16 வது அகில உலக இறைமக்கள் மாமன்ற தயாரிப்பு ஏட்டினை மரியாதைக்குரிய அருள்பணியாளர் மாரின்
தே சான் மார்ட்டின் அறிமுகம் செய்தபோது மூன்று மிக முக்கிய கருத்துக்களை வலியுறுத்தினார்.
1. மறைமாவட்ட அமர்வுகள் உண்மையின் எதார்த்தத்தின் வெளிப்பாட்டு அடையாளமாக அமைய வேண்டும்.
2. அதிகமான மக்களை குறிப்பாக இதுவரை மறைமாவட்ட மைய நீரோட்டத்துடன் தங்களை இணைத்துகொள்ளாத துறவிகள் மற்றும் இறைமக்களை அழைத்து அரவணைத்து அவர்களின் கருத்துக்களுக்கு செவிமடுக்கும் அமர்வாக நடைபெற வேண்டும்.
3. வெறும் கருத்துக்களை தொகுப்பது அல்ல; மாறாக செயல்பாட்டு நிலைக்கு கொண்டுவரத்தக்க தேவையான ஆலோசனைகளை பரிந்துரைகளை மேற்கொள்ள வேண்டும்.
இறைமக்களுக்கு செவிமடுப்பது தூய ஆவியாருக்கு செவிமடுப்பது
இரண்டாம் வத்திக்கான் சங்கம் காலத்தின் அறிகுறிகளுக்கும் அடையாளங்களுக்கும் உலக நிகழ்வுகளுக்கும் செவிமடுப்பது அவசியம் என்பதை உணர்த்தியது. திருத்தந்தை பிரான்சிஸ் இன்னும் ஒருபடி மேலே சென்று அடித்தள மக்களுக்கு செவிமடுப்பது ஆவியாருக்கு செவிமடுப்பது என உறுதியாய் நம்புகிறார். அதன் செயலாக்கமே இப்போது நடைபெறும் கூட்டியக்க திருஅவையின் அகில உலக இறைமக்கள் மாமன்றத்தின் முதல் கட்டமான மறைமாவட்ட நிகழ்வுகள் எனலாம். திருஅவை ஆவியின் குரலுக்கு செவிமடுப்பது என்பது அவர்களின் கருத்துக்களை கேட்பது மட்டுமல்ல; அடித்தட்டு மக்களின் குரலையும் கருத்துக்களையும் மதிப்பதே இன்று ஆவியாரின் குரலுக்கு செவிமடுப்பது..
திருஅவையின் இன்றைய உண்மையான செவிமடுத்தல் என்பதை திருத்தந்தை திருஅவையின் அடித்தள சமூகங்களில் காண விரும்புகின்றார். தன் பிரதிநிதியாக மறைமாவட்ட ஆயர் மறைமாவட்ட அனைத்து மக்களையும் ஒன்றுகூட்டி, அனைவரின் பங்கேற்பை உறுதி செய்து, மிகக் குறிப்பாக பெண் துறவியர், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள், சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்கள், மனித மாண்பு மறுக்கப்படும் மக்கள் அனைவருக்கும் செவிமடுத்தல் இன்று ஆவியாரின் குரலுக்கு செவிமடுத்தல் என மொழிகிறார். இதற்கு பணிவும், மன உறுதியும், எதார்த்த பார்வையும் பாகுபாடற்ற வேறுபாடு, பாராட்டாத இதயமும் அவசியம் என்பதை உணர்த்துகிறார். குறிப்பாக இது ஆயர்களுக்கும், அருள்பணியாளர்களுக்கும் மிக மிக அவசியம் என அடிக்கோடிட்டு காட்டுகிறார்.
வரையறுக்கப்பட்ட ஆயர்கள் மாமன்றம் - திருத்தந்தை ஆறாம் பவுல் வடிவம்
1962 முதல் 1965 வரை இரண்டாம் வத்திக்கான் சங்கம் நடைபெற்றபோது மெல்க்கிய ரீதி தலைமை ஆயர் மேன்மைமிகு தந்தை நான்காம் மாக்ஸிமோஸ் கீழைத்திரு அவைகளை பின்பற்றி (கீழைத் திருஅவைகளில் முடிவெடுக்கும் அதிகாரம் இறைமக்கள் மன்றங்கள் கொண்டுள்ள கூட்டு அதிகார செயல்பாடாக உள்ளது) கத்தோலிக்கத் திருஅவையின் உலகளாவிய பங்கேற்பு மற்றும் இணைந்து முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்ட ஒரு ஆயர்கள் மாமன்றம் உருவாக வேண்டும் என்று குரல் எழுப்பிய காலத்தில், அன்றைய திருத்தந்தை ஆறாம் பவுல் அகில உலக ஆயர்கள் மாமன்றத்தை 1965 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
முதல் அகில உலக ஆயர்கள் மாமன்றம் 1967 இல் கூடியது. ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஆயர்கள் மாமன்றம் திருத்தந்தையின் தலைமையில் கூடி வந்து திருஅவையின் பணி மற்றும் வளர்ச்சி நலன் சார்ந்த நிலைகளில் ஆலோசனை வழங்கும் அமைப்பாக செயல்பட தொடங்கியது. அவசியம் ஏற்படும்போது திருத்தந்தை சிறப்பு அகில உலக ஆயர்கள் மாமன்றங்களையும் கூட்டும் அதிகாரமும் நடைமுறைக்கு வந்தது.
ஆயர் பேரவையில் இருந்து அனுப்பப்படும் ஆயர்கள், திருத்தந்தைக்கு உலக ஆயர்களின் பிரதிநிதிகளாக தங்கள் கருத்துக்களை, ஆலோசனைகளை வழங்குவது மட்டுமே அவர்களின் கடமையாகவும், நோக்கமாகவும் இருந்தது. முடிவெடுக்கும் அதிகாரம் திருத்தந்தையின் அதிகாரத்திடமே தங்கியது. அதற்குப்பின் ஆயர்கள் மாமன்ற விவாதங்கள், பரிந்துரைகள் இவற்றின் அடிப்படையில் மன்றத்தின் கருத்துக்களை திருத்தந்தை ஒரு சுற்று மடலை தயாரித்து தன் முடிவாக அறிவிப்பதுவே திருத்தந்தை ஆறாம் பவுல் உருவாக்கிய அகில உலக ஆயர்கள் மாமன்றத்தின் வடிவம் எனலாம். இதுவே, ஏறக்குறைய 55 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் இரண்டாம் வத்திக்கான் சங்க மறுமலர்ச்சியை விரிவுபடுத்தவும், பணி பகிர்வுக்கு அடையாளமாகவும், ஆயர்களின் ஆலோசனைகளை பெற்று, திருஅவையை தலைமை பொறுப்புடன் வழிநடத்த விரும்பி, தொடங்கிய ஆலோசனை அமைப்பான அகில உலக ஆயர்கள் மாமன்றம் வரலாற்றில் பாராட்டுதலுக்குரியது. திருஅவையில் மக்களாட்சி கூறுகளை அதன் மூலம் புகுத்தினார் என்று சொல்வதில் தவறில்லை. அவரின் பாதை என்பது அதிகாரத்தை குவியல் ஆக்குவது அல்ல; ஆனால், அதை திருஅவையில் பங்கேற்பாகவும் பணியாகவும் மாற்றுவது என்பதுதான் உண்மை.
அகில உலக இறைமக்கள் மாமன்றம் - திருத்தந்தை பிரான்சிஸ் வடிவம்
திருத்தந்தை ஆறாம் பவுல் தொடங்கிய பயணம் இப்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் காலத்தில் வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது. அதன் வெளிப்பாடே தற்போது நடைபெறும் கூட்டியக்கத் திருஅவை எனும் அகில உலக ஆயர்கள் இறைமக்கள் பேரவை என்று சொல்லலாம். அதை உரோமையிலேயே தேர்ந்தெடுக்கப்படும் ஆயர்களை வைத்து நடத்தி இருக்கலாம். ஆனால், தலத்திருஅவைகளில் இந்த மன்றத்தை தொடங்குவது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தனிச்சிறப்பு எனலாம். குடும்பம், இளையோர், அமேசோன் மன்றங்களையும் நடத்துவதற்கு முன் தலத்திருஅவைகளில் ஆயர்களை கலந்து ஆலோசித்த பிறகே, திருத்தந்தை பிரான்சிஸ் பொது அமர்வுகளை நடத்தினார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதை கருத்து கேட்பு அல்லது கருத்து சேகரிப்பு என்ற நிலையாக எடுத்துக்கொள்ள முடியும்.
ஆனால், திருத்தந்தை பிரான்சிஸ் 2021 அக்டோபர் 10 ஆம் நாள் அன்று தொடங்கி வைத்துள்ள 16 வது அகில உலக ஆயர் மாமன்ற நிகழ்வு, ஒவ்வொரு திருஅவையிலும் அக்டோபர் 17ஆம் தேதி ஆயர்களால் தொடங்கப்பட அழைப்பு தந்தார். திருத்தந்தை பிரான்ஸிஸ் திருத்தந்தை பணியைத் தொடங்கிய காலத்திலேயே பணி பரவலாக்கம் என்ற கருத்தியலின் அடிப்படையில் செயல்படத் தொடங்கியதன் அடையாளமாகவே ஒரு சிறப்பு குழுவை தேர்வு செய்து, அகில உலக பிரதிநிதிகளான 9 கர்தினால்களை கலந்து ஆலோசனைகளை அவ்வப்போது திருஅவையின் வளர்ச்சி மற்றும் பணிகள் குறித்து பெறத்தொடங்கினார். அதன் மாற்று வடிவம் என்பதைவிட, மக்கள் வடிவமே இப்போது தொடங்கியுள்ள மறைமாவட்ட நிலையிலான அகில உலக இறைமக்கள் மாமன்றம் என்று சொன்னால் அது வெள்ளிடைமலை.
தெளிந்த தேர்ந்து முடிவுகளை எடுப்பதில் முன்னவர் (Pope as Discerner in Chief)
தலத்திருஅவைகளில் நடைபெறும் தற்போதைய இறைமக்கள் மன்ற நிகழ்வு ஏற்கனவே இது கீழிருந்து மக்கள் மைய நிகழ்வாக, மண்ணிலிருந்து (அடித்தளத்திலிருந்து) எழும் ஆலமரமாக முளைத்தெழுகிறது என்பது சிறப்புக்குரியது. சாதாரண ஏழை - எளியோரின் குடும்பம் வரை திருஅவையில் பங்கேற்பும், பங்களிப்பும் செய்ய வேண்டும் என்பதுதான் இந்த நல்ல தொடக்கம் நமக்கு எடுத்துச் சொல்லுகிறது. முடிவுகளை மேலிருந்து திணிப்பதைவிடுத்து, மக்கள் மைய நிகழ்வின் அடையாளமாக தொடங்கியுள்ள மறைமாவட்ட அளவிலான அமர்வுகள் திருஅவையின் வளர்ச்சிக்கான பங்கேற்பு அமைப்புகளின் மாண்புக்கு அடையாளமாக மாறியுள்ளது என்பது உண்மை. மக்கள் மையம்பெறாத பங்கேற்பு இல்லாத திருஅவை வெறுமையானது என்ற உண்மையை திருத்தந்தை உணர்த்துகிறார்.
இப்போது நடைபெறும் இந்த நிகழ்வும், ஆலோசனை கேட்கும் நிகழ்வே எனினும் திருத்தந்தை இறைமக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, தெளிந்த தேர்ந்த முடிவுகளை மேற்கொள்ள விரும்புகிறார் என்பது இதன் மூலம் உண்மையாகிறது. பெரும்பான்மை என்பதை விட, செவிமடுத்தலும் தெளிதலும் தேர்ந்து தான் தலையான பணி என திருத்தந்தை பிரான்சிஸ் எண்ணுகிறார். அதை ஆவியாரின் துணையோடும், வழிகாட்டுதலோடும் நடைபெற வேண்டும் என்பதுதான் அவரின் திட்டமாக அமைந்துள்ளது. ஏற்கனவே நடைபெற்ற அமேசோன் அகில உலக ஆயர்கள் மாமன்ற நிகழ்வில் பெரும்பான்மையான பங்கேற்பாளர்கள் குறைந்து வரும் அருள்பணியாளர்களின் நிலையை கவனத்தில் கொண்டு, உடனடியாக திருமணம் செய்த கத்தோலிக்க ஆண்களையும் அருள்பொழிவு செய்து, அருள்பணியாளர்களாக சேர்த்துக் கொள்ளலாம் என வாக்களித்து தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால், பரவலாக பேசி விவாதித்து கருத்து பரிமாற்றம் செய்து பெரும்பான்மையாக அதிக வாக்குகளுடன் மேற்கொண்ட அந்த தீர்மானத்தை திருத்தந்தை பிரான்சிஸ் நிராகரித்தார். தெளிந்து தேர்ந்து ஆவியாரின் குரலுக்கு செவிமடுத்தலுமே மிக மிக அவசியம் என மொழிந்தார். தன்னை தெளிந்து தேர்ந்து குழுவின் தலைவராக, வழிகாட்டியாக, பொறுப்பாளராக தன்னை நிலை நிறுத்துகிறார். இதுவே அவரின் தனித்துவம் நிறைந்த தலைமைத்துவம் என விளக்கப்படுத்தப்படுகிறது.
மறைமாவட்ட ஆயரின் தொடர்பாளர்கள் மற்றும் வழிநடத்தும் குழுவின் கடமைகள்
இப்போது தலத்திருஅவைகளில் நடைபெறும் இறைமக்கள் மன்ற நிகழ்வை வழிநடத்தும் தலைமை பணியாளராக மறைமாவட்ட ஆயர் விளங்குகிறார். முதல் நிலையிலான நிகழ்வுகளும், கருத்தமர்வுகளும், செவிமடுத்தலும் மறைமாவட்ட ஆயர் தலைமையில் வழிநடத்தப்பட வேண்டுமென இந்த மாமன்றத்திற்கான மாமன்ற தயாரிப்பு ஏடு வலியுறுத்துகிறது. இறைவேண்டலில் ஒன்றித்து தெளிந்து தேர்ந்து முடிவுகளை மேற்கொள்ள, ஆயரின் இதய செயல்பாடும், வழிகாட்டுதலும் மிகவும் அவசியம். இணைந்து நடத்தல், இணைந்து செயல்படுதல் என்னும் மையக் கருத்தினை கூட்டியக்கத் திருஅவையாக செயல்படுத்த மறைமாவட்ட ஆயருக்கு உதவும் அமைப்பே தொடர்பாளர்கள் மற்றும் நடத்துனர்கள் குழு. ஆயர் தற்போதைய தன் பிரதிநிதியாக மறைமாவட்ட அளவில் ஒரு அல்லது பாலின சமத்துவ வெளிப்பாடாக இரு நபர்களை ஒருங்கிணைப்பு செய்யும் தொடர்பாளர்களாக நியமனம் செய்வார். அதன்பின், மறைமாவட்ட இறைமக்களின் பிரதிபலிப்பான ஒரு வழி நடத்தும் குழுவினை அமைத்து செயல்பாட்டுக்கான வழிமுறையை ஆயரும், மறைமாவட்ட நிர்வாகமும் ஏற்படுத்தும் கடமையும் உள்ளது.
ஆயரும், மறைமாவட்ட தொடர்பாளர்களும், செயற்குழுவும் திறந்த உள்ளத்தோடு செவிமடுக்கும் இதயத்தையும் செவிகளையும் பெற்றிருக்க வேண்டும். மறைமாவட்ட இறைமக்கள் திருப்பேரவையை செயல்படுத்தும் பொறுப்பில் உள்ளவர்கள் அடிப்படையில் திறந்த மனதுடன் கற்றுக்கொள்ளும் தாழ்ச்சியுடனும், கற்றுக்கொடுக்கும் பெருந்தன்மையுடனும் செயல்பட முன்வர வேண்டும். இந்த பொறுப்பாளர்கள் தங்கள் பணிகளை ஆர்வத்துடனும், அன்புடனும் செய்ய வேண்டும். இந்த குழுவில் இருப்போருக்கு முதலில் சரியான மற்றும் விளக்கமான கருத்துக்களும் தெளிவுகளும் ஏற்படுத்தப்படவேண்டும். பங்குகளிலும் மறைவட்ட அளவிலும் மறைமாவட்ட அளவிலும் பொறுப்பாளர்கள் கருத்தாளர்களாக செயல்பட வேண்டும். முடிந்த அளவுக்கு பங்குகளிலும் அதன்பின் மறைவட்ட அளவிலும் மறைமாவட்டத்திலும் கருத்துகளும் கலந்துரையாடல்களும் ஏற்பாடு செய்ய வேண்டும். கூட்டுச் செயல்பாடு உண்மையை உரைக்கும் மனஉறுதி மாற்றத்திற்கான பாதை காட்டும் பிறரன்பு மனநிலை அனைத்தும் மிக அவசியமான மனநிலைகளாகவும் செயல்பாட்டு விதிமுறைகளாகவும் அமைய வேண்டும்.
மறைமாவட்ட மாமன்றம் நடத்தப்பட பரிந்துரைகள்
வழிநடத்தும் குழு எவ்வளவு அதிகமான மக்களை சந்தித்து ஈடுபடுத்தி இந்த பயணத்தில் இணைக்க முடியுமோ, அந்த அளவுக்கு பரந்த மனப்பான்மையுடன் செயல்படும்போது, அருள்பணியாளர்கள் துறவியர்கள் மற்றும் அனைத்து பொதுநிலையினரும் ஆர்வத்துடன் இணைந்து கொண்டால் இது நாம் எதிர்பார்க்கும் மாற்றங்களை கொண்டு வருவது உறுதி. இவை முதலில் அன்பியம், பங்கு மறைவட்ட அளவிலும் அதன் நிறைவாக பங்கு மற்றும் மறைமாவட்டங்களில் கொடுக்கப்படும் கருத்துரைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் மறைமாவட்ட அளவிலும் நடைபெறும்.
ஆய்வுக்கான மிக முக்கிய 2 கேள்விகள்
மறைமாவட்ட அளவில் நடைபெறும் கருத்தமர்வுகள் மற்றும் கலந்துரையாடல்கள் பின்வரும் இரு கேள்விகளை மையப்படுத்த அழைப்பு விடப்படுகிறது.
1. கூட்டியக்க திருஅவை எனும் நமது இலக்கில் இதுவரை பயணித்த பாதை. நமது மறைமாவட்ட இறைமக்கள் அனைவரும் எவ்வாறு இணைந்து பயணித்து இருக்கின்றோம். நாம் அடைந்த காயங்கள் தோல்விகள் பின்னடைவுகள் யாவை?
2. இணைந்து தொடர்ந்து பயணிப்பதில் எழும் சவால்களை உண்மையோடும் உறுதியோடும் மேற்கொண்டு நமது இறையாட்சி பயணத்தை தொடர இணைந்து பயணிக்க தேவையான மாற்றங்களும் செயல்பாடுகளும் என்ன?
ஆய்வுக்கான இந்த இரண்டு கேள்விகளில் முதல் கேள்வி பின் நோக்கி பார்ப்பது என்பதை விட, முன்னோக்கிச் செல்ல பலம், பலவீனம் என்ன என்பதை அறிந்துகொள்ள உதவுகிறது. ஏன் நம்மால் இணைந்து பயணிக்க இயலவில்லை அல்லது தடைகளை தாண்ட இயலவில்லை என்பதை ஆவியின் ஒளியிலும், இறைவார்த்தையின் ஒளியிலும், நேர்மையான உள்ளத்தோடு ஆய்வு செய்ய கடமைப்பட்டுள்ளோம். இரண்டாவது கேள்வி நமது இணைந்து பயணித்தல், கூடிவாழும் உண்மையான திருஅவையின் இலக்கும், நோக்கமும் என்பதை தெளிவாக காட்டுகிறது. செவிமடுக்கும் உள்ளத்தோடு திட்டமிடலை மேற்கொள்ள வழிகாட்டுகிறது. நம்பிக்கையான தொடர் பயணத்திற்கு பரிந்துரைகளை முன்மொழிய வழிகாட்டுகிறது.
இரண்டு கேள்விகளுமே பிரச்சனைகளை மையப்படுத்தி குற்றம்சாட்டும் போக்கினை தவிர்த்து, எதார்த்தத்தோடும், உண்மை நிறைந்த இதயத்தோடும் அகற்றப்பட வேண்டிய மனநிலை மற்றும் செயல்பாடுகளை இனம் காணவும், உறுதியோடு அவற்றை கடந்து பயணிக்கவும் அழைப்பு விடுக்கின்றன. கொடுக்கப்பட்டுள்ள ஆய்வுக்கான கேள்விகளில் கூட்டியக்கத் திருஅவையாக இணைந்து பயணித்தல் என்னும் மையப்பொருளில் செவிமடுக்கும் திருஅவையாக மற்றும் தெளிந்து தேர்ந்த அவையாக மறுமலர்ச்சிக்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். இதன் தொடர்ச்சியாக இவை நிறைவாக அமைய பின்வரும் வழிகாட்டுதல்கள் நமக்கு உதவலாம். எவற்றை கவனத்துடன் கையாளவேண்டும் என்ற பரிந்துரைகளும் இங்கே தரப்படுகின்றன. இவை அனைத்தும் ஒரு சில வழிகாட்டுதல்களே.
இணைந்து பயணிப்போம்… இன்றே பயணிப்போம்…
1. இணைந்து பயணிப்பது என்பது நாம் வழிநடத்த வேண்டும் என்பதைவிட, கடவுள் நம்மை வழி நடத்த அனுமதிக்க வேண்டும். இணைந்து பயணித்தலில் திருஅவை நம் கண்ணால் பார்க்கக் கூடிய அளவுக்குத் தான் உள்ளது என்பதை விட, நம்மையும் கடந்து நிற்பது. திருஅவை நம்மையும் விட மேலானதாக நிற்பது. நான் என்ற சுய நலத்திற்கு மேலாக, நாம் என்ற திருஅவையின் பொதுமை தன்மை பரந்தது, விசாலமானது என்ற பரந்த உள்ளம் அவசியம். இதுவே நம்மில் கூட்டு பொறுப்பையும், கூட்டு பொறுப்புணர்வையும் பரவலாக பங்கேற்கும் பலரின் பங்களிப்பையும் காணச் செய்யும்.
2. இணைந்து பயணித்தல் என்பது இணைந்து ஆவியின் ஒளியில் தெளிந்து தேர்தல் என்ற நிலையை நம்மில் உருவாக்க வேண்டும். உண்மையான திருஅவை செவிமடுக்கும் திருஅவையாக, செயல்பட செவிமடுத்தும், பிறருக்கு வாய்ப்பளித்தும் பயணிக்க வேண்டும். புதிய சிந்தனைகளை மட்டம் தட்டாமல் செவிகொடுக்க வேண்டும். யாரையும் விலக்காமல் இணைத்துக்கொள்ளும் போக்கு அவசியம். பிறரின் கருத்துக்கு தாழ்ச்சியுடனும் மதிப்பளிக்கும் வேளையில் உண்மையை தீமையோடு சமரசம் செய்யாமல் உரைக்க வேண்டும். மனநிலை மாற்றமும், கட்டமைப்பு மாற்றமும் சட்டதிட்ட மாற்றங்களும் அவசியமெனில் செயல்படுத்த திறந்த உள்ளம் அவசியம்.
3. இணைந்து பயணித்தலில் இணைந்து உரையாடுதல் அவசியம். உறவாடல், உரையாடல் வேண்டுமெனில் யாரோடு உரையாட, உறவாட வேண்டுமென்ற தெளிவு மிக அவசியம். இதில் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பவர்கள் குரலை விட, மற்றவர்களுக்கு வழிவகுக்க பேச்சுரிமை மறுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் நியாயமானதாக அமைய வாய்ப்புகள் தரப்பட வேண்டும். வசதியான சுயநலமான முடிவுகளை எடுப்பதும், முன்சார்பு எண்ணங்களோடு கலந்துகொள்வதும், பேசுவதும் தவிர்க்கப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, இறுகிய மனதை உடைத்து உண்மையான திறந்த மனதுடனும் செவிமடுக்கும் உள்ளத்துடனும் அனைவரும் ஒன்று சேர்ந்து நடப்பதே இயேசுவின் இறையாட்சி பயணம் என்ற தெளிவு மிக மிக அவசியம்.
4. இணைந்து பயணித்தல் என்பதில் ஆதிக்க மனப்பான்மையோ, கருத்து திணிப்போ நலம் பயக்காது. கருத்தமர்வுகள் கலந்துரையாடல்களில் நம்மையும் நம் சுயநலத்தையும் விரும்பத்தகாத நமது ஆதிக்க மனப்பான்மையும் வெளிப்படுத்தல் கூடாது. அருள்பணியாளர்களே இறுதியாக முடிவெடுப்பர் எனும் ஆதிக்க நடைமுறைகள் மாற்றம் காண வேண்டும். இணைந்து பயணித்தல், இணைந்து முடிவெடுத்தல் என்பதாகும். நான் எந்த விதத்திலும் மாறத்தேவையில்லை என்ற பெருமிதமும் மற்றவர் குற்றவாளிகள் என்ற சிறுமைத்தனமும் அகல வேண்டும். கட்டமைத்துள்ள கருத்தியல்களை திணிக்கக்கூடாது. மறைமாவட்ட அமர்வுகள் பொது மன்றங்கள் விவாதங்கள் மற்றும் குழு ஆய்வுகள் இருக்கும் உறவை குறைத்துவிடக்கூடாது. இன்னும் நெருக்கமான உறவு - கூடுதல் மாற்றம் - பரந்த பயணம் என்பதையே வலியுறுத்த வேண்டும். பெரும்பான்மை என்ற மனநிலையை விட, சிறுபான்மையும், மதிப்புப் பெறவேண்டும் என்ற நல்லெண்ணம் வளர வேண்டும்.
5. இணைந்து பயணித்தலில் என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் பிரச்சனை மையம் என்ற நிலை வருவதைவிட, மாற்றம் அல்லது வளர்ச்சி நிலை என்ற நேர்மறை போக்கு மிக அவசியமான தேவை. மறைமாவட்ட நிர்வாக அமைப்பு - வழிநடத்தும் தலைமை - பணிசெய்வோரின் நிர்வாக முறைகளை எதிர்மறையாக மட்டுமே விமர்சிக்கும் போக்கினை விடுத்து திறந்த மனதுடன் அறிவுபூர்வமான அறிவியல் பார்வை கொண்ட தெளிந்து தேறும் முறைகளும் பகிரப்பட வேண்டும். என்ன பேசினாலும், திட்டமிட்டாலும் எந்த பயனும் இல்லை என்ற எதிர்மறை வாதங்களை களைந்துவிட்டு, புதிய நம்பிக்கையுடன் உரையாடல்களும், செவிமடுத்தலும் வேண்டும். இணைந்து நடத்தல் மற்றும் பயணித்தல் எதிர்காலத்திற்கான நம்பிக்கை ஒளியை காட்ட வேண்டும்.
மறைமாவட்ட ஆயர் தலைமையில் சமமான பங்கேற்பாளர்களாக பொதுநிலை இறைமக்களும், இருபால் துறவியர்களும் மற்றும் அருள் பணியாளர்களும் இடம்பெற்று, செவிமடுக்கும் திருஅவையாக பொதுப்பேரவை செயல்பட வேண்டும். மறைமாவட்ட அளவில் நடைபெறும் இறுதியான அமர்வில் எழும் நலமான வளர்ச்சிக்கான பரிந்துரைகளை ஆயரின் தலைமையில் வழிகாட்டும் குழு இறுதி செய்ய வேண்டும். செயற்குழு அல்லது வழிநடத்தும் குழு தெளிந்து தேர்ந்த பரிந்துரைகளுக்கு மறைமாவட்ட ஆயர் இறுதி வடிவம் கொடுக்க வேண்டும். இறுதியான முடிவுகள் பரிந்துரைகளாக மேற்கொள்ளப்பட்டு, மறைமாவட்ட ஆயர் அவர்களால் தேசிய ஆயர் பேரவைக்கு அனுப்பி வைக்கப்படும்.