Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் இயேசுவின் முன்மாதிரிகையைப் பின்பற்றி நடங்கள்
Tuesday, 21 Dec 2021 10:56 am
Namvazhvu

Namvazhvu

நமக்கு அடுத்திருப்பவர், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சமகாலத்தவர், தேவையில் இருப்போர் போன்ற எல்லாருக்கும், நம்மை அடுத்திருப்பவர்களாக ஆக்குவதற்கு, நமக்கு அடுத்திருப்பவராகத் தன்னைக் காண்பிக்கும் இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

டிசம்பர் 18 ஆம் தேதி சனிக்கிழமையன்று, இத்தாலிய கத்தோலிக்க இயக்கத்தின் சிறார் மற்றும் இளையோர் என, ஏறத்தாழ எழுபது பிரதிநிதிகளை, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இயேசு, அவர்களது வாழ்க்கைப் பயணத்தில் எப்போதும் உடன் இருக்கிறார் என்பதை வலியுறுத்திக் கூறினார்.

தையல்காரர், எவ்வாறு நாம் அணியும் ஆடைகளை, ஒவ்வொருவரின் அளவுக்கேற்ப அவற்றைத் தைக்கின்றாரோ அதுபோன்று, நாம் ஒவ்வொருவருமே தனித்துவமானவர்கள், நாம் மற்றவரின் நகல் கிடையாது என்று, அச்சிறாரிடம் கூறியத் திருத்தந்தை, வரலாற்றை நீங்கள் நினைத்துப் பார்த்தால், எவருமே உங்களைப் போன்று இருந்ததில்லை, இனியும் இருக்கப்போவதில்லை என்பதை அறிவீர்கள் என்று கூறினார்.

இவ்வாறே இயேசு உங்கள் ஒவ்வொருவரையும், நீங்கள் இருப்பதுபோல அன்புகூர்கிறார் என்றும், மற்றவர் உங்களை ஒருபொருட்டாகக் கருதாவிட்டாலும், இயேசு உங்களுக்கு அருகில் இருக்கிறார் மற்றும் உங்கள் மீது அக்கறை கொள்கிறார் என்றும் உரைத்த திருத்தந்தை, பெத்லகேமில் ஒரு குழந்தையாய்ப் பிறந்த இயேசு, இதை நாம் புரிந்துகொள்ளச் செய்கிறார் என்றும் கூறினார்.

அருகாமை, பரிவன்பு, கனிவு

இன்றும் ஒவ்வொரு நாட்டிலும், அனைத்து மக்களிலும் உள்ள சிறாருக்கு இயேசு நெருக்கமாக இருக்கிறார் என்றும், இதுவே கடவுளின் பண்பு என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை, இந்தப் பண்பை, அருகாமை, பரிவன்பு, கனிவு ஆகிய மூன்று சொற்களால் விளக்கலாம் என்றும் கூறினார்.  

நாம் எப்போதும் நற்செய்தியின் மறைப்பணியாளர்களாகச் செயல்பட முடியும் எனவும், குடும்பங்கள், பள்ளிகள், பங்குத்தளங்கள், விளையாட்டு மைதானங்கள், பொழுதுபோக்கு இடங்கள் போன்ற நாம் வாழ்கின்ற சூழல்களில், மற்றவர்கள் நமக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திராமல், அவர்களுக்கு எப்போதும் ஏதாவது நாம் செய்யவேண்டும் எனவும் கூறியத் திருத்தந்தை, இவ்வாறே செயல்பட்ட இயேசுவைப் போன்று நாமும் செயல்பட்டு, அவருக்குச் சான்றுகளாக விளங்கவேண்டும் என்று, அச்சிறாரிடம் கூறினார்

இயேசுவிடம் இறைவேண்டல் செய்வதற்கு நேரம் செலவிடவும், அவரிடம் உங்கள் நண்பர்கள்பற்றியும், உங்களின் மகிழ்வான மற்றும் கடினமான நேரங்கள்பற்றியும் எடுத்துச் சொல்லவும், அவரோடு உரையாடவும் அஞ்சவேண்டாம் என்றும் உரைத்த திருத்தந்தை, இயேசு மட்டுமே உங்கள் வாழ்வை எப்போதும் புதியனவாக்கும் வல்லமை படைத்தவர் என்பதை நினைவுபடுத்தினார்.

நீங்கள் திருப்பலிக்குச் செல்லும்போது, இயேசு உங்களைப் பார்த்து புன்னகைக்கிறார், உங்களுக்கு வலிமை அளிக்கிறார் என்றும், துணிவோடு இருங்கள், ஏனெனில் இயேசு உங்கள் அருகில் இருக்கிறார் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அச்சிறாருக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைக் கூறியதோடு தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.