Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் புலம்பெயர்ந்தோர் பிள்ளைகளின் முகங்களை உற்றுநோக்குங்கள்
Tuesday, 21 Dec 2021 10:58 am
Namvazhvu

Namvazhvu

நாம் சந்திக்கும் புறக்கணிக்கப்பட்ட மக்கள் மீது நம் கண்களைப் பதிப்போம், நம்பிக்கையிழந்த புலம்பெயர்ந்தோரின் பிள்ளைகளின் முகங்கள், அவர்களுக்கு உதவுவதற்கு நம்மைத் தூண்டுவதற்கு அனுமதிப்போம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

டிசம்பர் 18 ஆம் தேதி சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் உலக நாளையொட்டி இவ்வாறு தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் செய்தி ஒன்றைப் பதிவுசெய்துள்ள திருத்தந்தை, புறக்கணிப்பு என்ற நம் நிலைக்கு எதிராகச் செயல்படும்வண்ணம், புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் துன்பங்களைக் களைவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள நம்மை அனுமதிப்போம் என்று கூறியுள்ளார்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உதவியால், டிசம்பர் 16 ஆம் தேதி வியாழனன்று  இத்தாலிக்கு வந்துள்ள புலம்பெயர்ந்தோர், அவரின் 85வது பிறந்த நாளான, டிசம்பர் 17 ஆம் தேதி, வெள்ளியன்று, திருப்பீடத்தில் அவரைச் சந்தித்து தங்களின் நன்றியையும், நல்வாழ்த்தையும் தெரிவித்தனர்.

இம்மாதம் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை, சைப்பிரசு மற்றும் கிரேக்க நாடுகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின்போது, இவர்கள் இத்தாலிக்கு வருவதற்குத் தேவையான உதவிகளை, அவர் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உதவியால், ஏறத்தாழ பத்து புலம்பெயர்ந்தோர் இத்தாலிக்கு வந்துள்ளனர் என்றும், இவர்களுக்கு, சான் எஜிதியோ அமைப்பு உதவி வருகின்றது என்றும், திருப்பீடம் அறிவித்துள்ளது.

மத்தியதரைக்கடலில் புலம்பெயர்ந்தோர் சந்திக்கும் துயரம்பற்றி ஆப்கான் புலம்பெயர்ந்தோர் ஒருவர் வரைந்த ஓவியத்தை இவர்கள் திருத்தந்தையிடம் வழங்கினர். இந்த புலம்பெயர்ந்தோர் காங்கோ சனநாயக குடியரசு, காமரூன், சொமாலியா, சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

ஆயர் தெ ரொசாரியோ அவர்களின் பணி ஓய்வு

மேலும், இந்தியாவின் பரோடா மறைமாவட்ட ஆயர் காட்ஃபிரே தெ ரொசாரியோ அவர்கள் சமர்ப்பித்த பணி ஓய்வு விண்ணப்பத்தை, டிசம்பர் 18 ஆம் தேதி சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டார்.

இயேசு சபையைச் சார்ந்த ஆயர் தெ ரொசாரியோ அவர்கள், 1946 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி, குஜராத் மாநிலத்தின் அகமதபாத்தில் பிறந்தார். 1978 ஆம் ஆண்டில் இயேசு சபையில் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், 1997 ஆம் ஆண்டில் பரோடா ஆயராக நியமிக்கப்பட்டார். இதற்குமுன்னர், இவர் குஜராத் இயேசு சபை மாநில தலைவராகவும் பணியாற்றினார்.