தீராத நோயால் அவதியுறும் மக்கள் தற்கொலைச் செய்வதற்கு உதவுவதை அனுமதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளதைக் குறித்து ஆஸ்திரிய ஆயர்கள் தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர். ஆஸ்திரிய ஆயர்களின் தொடர் எதிர்ப்பையும் மீறி அமலுக்கு வந்துள்ள இப்புதிய சட்டம், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் செயல்படுத்தப்படவுள்ளபோதிலும், தற்கொலைக்கான உதவியை சட்டபூர்வமாக்கியுள்ளதைக் குறித்து ஆயர்கள் தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர்.
வயது குறைந்த சிறாருக்கும், மனநிலை பாதிக்கப்பட்டோருக்கும் தற்கொலை செய்வதற்குரிய அனுமதி வழங்கப்படாது என உரைக்கும் இச்சட்டம், தீராத நோயால் துன்புறுவோர் தற்கொலை மருந்துகளை பெறுவதற்கு முன்னர், இரு மருத்துவர்களை கலந்தாலோசிக்க வேண்டும் எனவும், தற்கொலை புரியும் விருப்பத்தை வெளியிட்டு விண்ணப்பித்த பின்னர், நோயின் தீவிரத்தைப் பொறுத்து 2 முதல் 12 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும் எனவும், கட்டுப்பாடுகளை முன்வைத்துள்ளது.
2022, ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ள இச்சட்டம் குறித்து கருத்து வெளியிட்ட ஆஸ்திரிய ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் பிரான்ஸ் லேக்னர் அவர்கள், தற்கொலைச் செய்ய விரும்பும் நோயாளிகள், இரு மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற வேண்டும் எனக் கூறும் இச்சட்டத்தில், ஒரு மனநல மருத்துவரையும் ஆலோசிக்க வேண்டும் என்ற விதிமுறை புகுத்தப்படவில்லை என்ற கவலையை எடுத்துரைத்தார். தற்கொலைக்கு உதவும் சட்டத்தை அங்கீகரித்துள்ள பெல்ஜியம், நெதர்லாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளின் வரிசையில் தற்போது ஆஸ்திரியாவும் இணைந்துள்ளது.