30 ஆண்டுகளுக்கு முன்னர் புனித திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவர்களால் துவக்கிவைக்கப்பட்ட உலக நோயாளர் தினக்கொண்டாட்டங்கள் இன்று உலகம் முழுவதும் பரவி, அனைத்துத் தலத் திருஅவைகளிலும் நிறைந்த பலன் தந்து வருவதைக் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் தன் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.
பிப்ரவரி 11 ஆம் தேதி, புனித லூர்து அன்னை திருவிழாவின்போது சிறப்பிக்கப்படும் உலக நோயாளர் தினத்திற்கென ஜனவரி 04 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, கடந்த 30 வருட முயற்சிகளோடு இணைந்து, மேலும் நல ஆதரவுப் பணிகளும், மேய்ப்புபணிகளும் தேவைப்படுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
30வது உலக நோயாளர் தினக் கொண்டாட்ட நிகழ்வுகள், கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக, ஏற்கனவே திட்டமிட்டபடி பெரு நாட்டின் அரேயூரிபா என்னுமிடத்தில் இடம்பெறாது, மாறாக, வத்திக்கானில் இடம்பெறும் என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் தன் செய்தியில் தெரிவித்துள்ளார்.
‘உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல் நீங்களும் இரக்கமுள்ளவராய் இருங்கள்’ (லூக் 6:36), தந்தையின் இரக்க வடிவாக இயேசு உள்ளார், நோயாளிகளைத் தொட்டுத் தூக்கி ஆறுதல் வழங்கும்போது நாம் இயேசுவின் உடலையே தொடுவது என்பது தந்தையின் இரக்கம்நிறை கரங்களின் அடையாளம் என திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார்.
நோயாளிகளுக்குச் சேவையாற்றும் மையங்கள் இரக்கத்தின் இல்லங்களாக சேவையாற்றுகின்றன, ஏழையாகவும் நோயுற்றோராகவும் இருப்பவர்களுக்குத் தேவையான உதவிகளும், ஆன்மீக அக்கறையும் வழங்கவேண்டியதன் அவசியத்தையும் தன் நற்செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.