Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் பிரெஞ்சு தொழில்முனைவோருடன் திருத்தந்தையின் உரையாடல்
Thursday, 13 Jan 2022 07:54 am
Namvazhvu

Namvazhvu

ஜனவரி 7  ஆம் தேதி, வியாழனன்று பிரெஞ்சு தொழில்முனைவோர் குழுவினரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருபீடத்தில் சந்தித்து உரையாடினார்.  தனித்துவம், அலட்சியம் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களை ஓரங்கட்டுவது போன்றவைகளால் அடிக்கடி காயப்படும் இன்றைய உலகில், சில தொழில்முனைவோர் மற்றும் வணிகத் தலைவர்கள், தனிப்பட்ட நலன்கள் மற்றும் அனைவரின் சேவையையும் இதயத்தில் இருத்தி செயல்படுவதை தான் மகிழ்ச்சியோடு காண்பதாகவும் திருத்தந்தை தெரிவித்தார்.
இது ஒரு சவாலாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை என்றுரைத்த திருத்தந்தை, உங்களின் தலைமைத்துவப் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்ற நற்செய்தி தரும் கருத்துக்கள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன் என்று மேலும் கூறினார். 
எல்லாம் நன்றாக நடக்கும் என்று நாம் நம்பி செயல்படும்போது,  ஒரு எதிர்பாராத பிரச்சனை திடீரெனெ வரும்போது, அது, எதிர்பார்ப்புகளுக்கும் எதார்த்தத்திற்கும் இடையே ஒரு வேதனையான மோதலாக உள்ளதாய், மரியாவின் வாழ்வோடு ஒப்பிட்டு, இதுகுறித்து அண்மையில் பேசியதாகவும் கூறிய திருத்தந்தை, ஓர் ஏழ்மையான நிலையில் இறைமகனை பெற்றெடுக்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டாலும் அதனை அவர் முழுமனதோடு ஏற்றுக்கொண்டு வாழவும்  செய்தார் என்றும் தெரிவித்தார்.
தலைமைத்துவத்தின் ஓர் அடையாளமாக இருக்கும், பொது நன்மைக்கான தேடலை, தெளிந்து தேர்ந்து செயல்படுத்தும்போது சில கவலைக்குரிய விடயங்கள் நடக்கும் என்று கூறிய திருத்தந்தை, அன்னை மரியாவைப்போல் இவற்றை வென்று, இறைவிசுவாசத்தில் உறுதியாக நிலைத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இரண்டாவதாக, அதிகாரம் மற்றும் பணிவு ஆகியவற்றை பொறுத்தவரையில்,  சீடர்களுக்குள் தங்களில்  யார் பெரியவர் என்ற மோதல் வந்தபோது முதல்வனாக இருக்க விரும்புவோர் கடையனாக இருக்கவேண்டும் (மத் 9:35) என்று கூறிய இயேசுவின் வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள் என்றும், இவ்வுலகக் காரியங்களில் நற்செய்தியின் விழுமியங்களை செயல்படுத்துவது எவ்வாறு என்பதை புரிந்துகொள்ளுங்கள் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
இயேசுவின் மீது உங்கள் கண்களை பதித்து, இறைவேண்டல் நிறைந்த உங்கள் வாழ்வால் உங்கள் அன்றாட அலுவல்களைச் சிறப்பாக ஆற்றிட உங்களை அழைக்கிறேன் என்றும் அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களுக்கு ஆசீரை வழங்கி தனது உரையாடலை நிறைவு செய்தார்.