கென்யா நாட்டிலுள்ள பார்வைத்திறன் இழந்த அருள்சகோதரி வெரோனிக்கா அவர்கள், என் கண்கள் செய்யமுடியாத செயல்களை எனது மற்ற புலன்கள் செய்யும் என, உலக பிரெய்லி தினத்தை முன்னிட்டு, வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
தி சாக்ரமென்ட்டைன் சிஸ்டர்ஸ் ஆப் டான் ஒரைன் சபையைச் சேர்ந்த இவர், தான் பிறக்கும்போதே முழுப் பார்வைத் திறனோடு பிறந்ததாகவும், தனது 13வது வயதில் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டு தன் பார்வையை இழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தான் தங்கியிருக்கும் துறவற குழுமத்தில் தன்னோடு இன்னும் மூன்று பார்வைத் திறனற்ற அருள்சோகோதிரிகள் இருப்பதாகவும், அவர்கள் மூவரும் தங்களின் இல்லப் பணிகளோடு, மக்களைச் சந்திப்பது, அவர்களோடு உரையாடல் நிகழ்த்துவது என மற்றப் பணிகளையும் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு உதவி தேவைப்படுவதால் இத்தகைய பணிகளை, தான் செய்ய முடிவதில்லை என்று கூறிய அருள்சகோதரி வெரோனிக்கா அவர்கள், தனக்குத் தேவை, வாய்ப்புகளே தவிர அனுதாபம் அல்ல என்றும், மீன் சாப்பிட வேண்டும் என்பதைவிட மீன் பிடிக்கக் கற்றுக்கொள்ளவே விரும்புகிறேன் என்றும் தன்னம்பிக்கையோடு எடுத்துரைத்தார்.
கடவுள் யாருக்கும் தீங்கு விளைவிப்பதில்லை என்று தெரிவித்த அவர், நான் என்னை எப்படி ஏற்றுக்கொண்டு வெளிப்படுத்துகிறேன் என்பதை போலத்தான் மற்றவர்களும் என்னை ஏற்றுக்கொள்வார்கள், அல்லது நிராகரிப்பார்கள் என்றும் அருள்சோகோதரி வெரோனிக்கா தன்னைப் பற்றிய நேர்மறையான எண்ணங்களைப் பதிவுசெய்தார்.
63 வயது கொண்ட அருள்சகோதரி வெரோனிக்கா அவர்கள், கென்யா நாட்டில் மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர் என்பதும், அவரது தந்தை, கடவுள் மீது நம்பிக்கைக் கொண்ட ஒரு சாதாரண மீனவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.