Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் ஐரோப்பிய பாராளுமன்றத் தலைவரின் மரணத்திற்கு இரங்கல்
Thursday, 13 Jan 2022 09:11 am
Namvazhvu

Namvazhvu

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவர் டேவிட் சசோலி அவர்கள், ஜனவரி 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று உயிரிழந்ததைத் தொடர்ந்து, திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் தந்தி, அவரின் குடும்பத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஐரோப்பிய பாராளுமன்றத் தலைவர் டேவிட் சசோலியின் மனைவி அலெஸாண்ட்ரா விட்டோரினி அவர்களுக்குத் திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில், அவருக்கும் அவர் குழந்தைகள் லிவியா மற்றும் கியுலியோவுக்கும் திருத்தந்தை தன் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
தன் மரணத்தின் வழியாக இத்தாலிக்கும் ஐரோப்பாவுக்கும் இழப்பைக் கொணர்ந்துள்ள டேவிட் சசோலி அவர்கள், தான் வாழ்ந்த காலத்தில் நம்பிக்கை, மற்றும் பிறரன்பால் தூண்டப்பட்டவராக, பத்திரிகையாளராகவும், ஐரோப்பிய பாராளுமன்றத் தலைவராகவும் பொதுநலனுக்கு சிறப்புச் சேவையாற்றியவர் என திருத்தந்தையின் பாராட்டு அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழை எளிய மக்களின் வாழ்வுக்காக சிறப்புக் கவனம் எடுத்து டேவிட் சசோலி அவர்கள் ஆற்றியச் சேவைகளையும் திருத்தந்தை பிரான்சிஸ் பாராட்டியுள்ளார். 1956 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதி பிறந்த இத்தாலியரான டேவிட் சசோலி அவர்கள், 2019 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி முதல், ஐரோப்பிய பாராளுமன்றத் தலைவராகப் பொறுப்பேற்று பணியாற்றிவந்த வேளையில், உடல்நலக்குறைவுக் காரணமாக ஜனவரி 11 ஆம் தேதி காலமானார்.