Namvazhvu
அருள்பணி. பூபதி லூர்துசாமி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும் கிறித்தவர்களும்
Wednesday, 19 Jan 2022 11:18 am
Namvazhvu

Namvazhvu

முன்னுரை

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2019 ஆம் ஆண்டு 28 மாவட்டங்களுக்கு அதிமுக அரசால் நடத்தப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களோடு 9 மாவட்டங்களுக்கு தமிழக தி.மு.க அரசால் 2021 அக்டோபர் 6 ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது. திமுக கூட்டணி கடந்த தேர்தலில் 50ரூ இடங்களைப் பிடித்தது. தற்போது நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 90ரூ இடங்களை பிடித்ததாக கருதப்படுகிறது.

உள்ளாட்சி அமைப்புகள் மத்திய மாநிலத் திட்டங்களை செயல்படுத்தும் இடத்தில் உள்ளனர். மக்கள் சனநாயகத்தைக் கொண்டாடும் தேர்தலாக உள்ளாட்சித் தேர்தல் அமைகிறது. தி.மு.க மக்கள் சக்தி வாய்ந்த கட்சியாக வளர்ந்து வருகிறது என்பது கண்கூடு.

மத்தியில் தேர்தல் வெற்றி

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டமாக அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் தேர்தல் நடந்தது. 2,900 கிராம ஊராட்சித் தலைவர்கள் 22, 579 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 1380 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள்  140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆக மொத்தம் 27,000 பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடைபெற்றது. 74 ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர்கள் 9 மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் மறைமுகமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்தத் தேர்தலில் பெரும்பாலான இடங்களை தி.மு.க பிடித்துள்ளது. 9 மாவட்டங்களிலும் மொத்தமுள்ள 140 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் 138 இடங்களை தி.மு.கவும் அதன் கூட்டணி கட்சிகளும் கைப்பற்றியுள்ளன. அதிமுக 2 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதேபோல, 1,381 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் 998 இடங்களை திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவுக்கு 200 வார்டுகள் கிடைத்துள்ளன. பா.ஜ.க - 8 தனித்து போட்டியிட்ட பா.ம.க - 44; அதிமுக -5; தே.மு.தி.க -1 என்று  ஊராட்சி ஒன்றிய வார்டுகளைப் பெற்றுள்ளன. நாம் தமிழர், மக்கள் நீதி மையம் கட்சிகள் ஒரு இடத்தில்  கூட வெற்றி பெறவில்லை. அவற்றின் வாக்கு வங்கியும் சரிந்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் செல்வாக்கு அதாள பாதாளத்திற்குச் சென்றுள்ளது.

மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடக்கிறது. பெரும்பாலான இடங்களைப் பிடித்துள்ள திமுக 9 மாவட்ட ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளை ஒட்டுமொத்தமாக கைப்பற்றியது. துணைத் தலைவர் பதவிகளும் திமுகாவுக்கே கிடைக்க வாய்ப்பு உள்ளது. திமுக-வின் பலம், ஓட்டு வங்கி கூடியுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.கவும், அதன் கூட்டணி கட்சிகளும் மகத்தான வெற்றியைப் பெற்று வரும் செய்தி, கடந்த 8 மாதங்களில் திமுக ஆட்சிக்குக் கிடைத்த நற்சான்று சாதனைச் சரித்திரம் தொடர்வதற்கு மட்டுமல்ல; செய்த சாதனைகளுக்கான மக்களின் அங்கீகாரமாகவும் இந்த வெற்றி அமைந்துள்ளது.

தேர்தல் நடைபெற்ற 9 மாவட்டங்களில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் களத்தில் இறங்கியது. மாவட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் போன்ற பெரிய மல்லுக்கட்டுகளில் கவனம் செலுத்தாமல் கிராம வார்டு மெம்பர் பதவிகளில் கவனம் செலுத்தி, தோராயமாக 50 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

உள்ளாட்சி அமைப்பு

தற்போதைய உள்ளாட்சி நிர்வாகம் 1. ஊரக உள்ளாட்சி, 2. நகர்ப்புற உள்ளாட்சி என்று இரண்டு நிலைகளில் உள்ளது.

ஊரக உள்ளாட்சி என்பது கிராமப் பஞ்சாயத்து, பஞ்சாயத்து  ஒன்றியம், மாவட்டப் பஞ்சாயத்து என மூன்று அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பில் இருப்பவை.

நகர்ப்புற உள்ளாட்சி என்பது பேரூராட்சி. நகராட்சி, மாநகராட்சி ஆகிய அமைப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒன்றுக்குகொன்று தொடர்பு இல்லாதவை. தனித்தனியாக இயங்கக்கூடியவை. இதில் கிராமப் பஞ்சாயத்துக்கள் தான் நம் தேசத்தின் உயிர்நாடி. இந்தியாவில் 2 லட்சத்து 50 ஆயிரம் பஞ்சாயத்துக்கள் இருக்கின்றன. அவற்றில் 32 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பிரதிகள் பணியாற்றுகிறார்கள். இதில் 12 லட்சம் பேர் பெண் பிரதிநிதிகள் ஆவர்.

தற்போதைய நடைமுறை ஜனநாயகம் என்பது பிரதிநிதித்துவ ஜனநாயகமாக உள்ளது. நீங்கள் ஓட்டுப் போடுகிறீர்கள். உங்கள் பிரதிநிதி உங்களை ஆட்சி செய்கிறார். ஆனால், நீங்கள் வாக்களித்து நீங்களும் ஆட்சியில் பங்கு பெறுவதுதான் உள்ளாட்சி ஜனநாயகம். அது பங்கேற்பு ஜனநாயகம் அதாவது உங்கள் ஊர் உங்கள் உரிமை, உங்கள் ஊர் உங்கள் பொறுப்பு”. இப்படியாகதான் வாக்காளர்களான நீங்கள்தான்  நமது மாபெரும் ஜனநாயக அமைப்பின் அரசியல் செயல்பாடுகளுடன் அதிகாரப்பூர்வமாக உங்களை இணைத்துக்கொள்கிறீர்கள். காந்தி விரும்பிய ‘கிராம சுயராஜ்ஜியம்’ என்பது ஏறக்குறைய இதுவே!

உண்மையில் மக்களுக்கான அதிகாரம் என்பது, சட்டத்தை மீறிய அதிகாரம் கிடையாது. 1992 ஆம் ஆண்டில் 73 மற்றும் 74 வது இந்திய அரசியலமைப்புச் சட்டத் திருத்தமாக நாடாளுமன்றத்தில் மக்கள் பெற்ற அதிகாரம் இது. 73 வது சட்டத் திருத்தம் என்பது ஊராட்சி மக்களுக்கானது. 74 வது சட்டத் திருத்தம் என்பது நகர மக்களுக்கானது. 73 வது  சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் கிராம ஊராட்சியில் இருக்கும் வாக்காளர்கள் ஒவ்வொருவருமே தானாகவே கிராம சபையின் உறுப்பினராகிவிடுகிறார். இந்த வாக்காளர்கள்  அனைவரையும் உள்ளடக்கிய அமைப்புதான் கிராம சபை. ஊர்க்கூடி முடிவு செய்வது என்பது நமது பண்டைய கால மரபு. அதன் நீட்சியே கிராம சபைகள்.

அனைத்து மக்கள் அதிகாரம் கிராம சபை

1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின்படி அனைத்து வாக்காளர்களையும் கொண்ட அரசு அங்கீகாரம் பெற்ற அமைப்புதான் கிராம சபை. அது வெறும் குறைகளை மட்டும் சொல்லும் அமைப்பு கிடையாது. மக்கள் அதிகாரம் கொண்ட அமைப்பு. பஞ்சாயத்து நிர்வாகத்தை அவை கண்காணிக்கும். தவறு செய்தால் தட்டிக் கேட்கும். நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும்.

பஞ்சாயத்து எழுத்தர்தான் கிராம சபையின் செயலாளர். இவர் கிராம சபையின் நடவடிக்கைகளைப் பதிவு செய்ய வேண்டும். பஞ்சாயத்தின் வரவு-செலவுகளை கிராம சபையில் சமர்ப்பிக்க வேண்டும். சட்ட விதி முறைகள், அரசு ஆணைகளை கிராம சபையினருக்கு தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு கிராமசபை கூட்டத்திலும் கிராம நிர்வாக அதிகாரி, வட்டார வளர்ச்சி அதிகாரி கலந்துகொண்டு அரசு திட்டங்களை விளக்க வேண்டும். கிராமப் பஞ்சாயத்து தலைவர்கள் பிரதிநிதிகளிடமும் மக்கள் கேள்விகளைக் கேட்பார்கள். தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்கள். கண்ணியமான முறையில் விவாதங்கள் நடைபெறும்.

தமிழகத்தில் ஓர்  ஆண்டில் ஆகஸ்டு 15 சுதந்திர தினம், ஜனவரி 26 குடியரசு தினம், மே 1 தொழிலாளர் தினம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி ஆகிய நான்கு நாட்களில் கண்டிப்பாக கிராம சபையைக் கூட்ட வேண்டும். கிராம சபைக் கூட்டம் கூட்டப்படுவதற்கு ஏழு நாட்கள் முன்பு கூட்டம் குறித்த அறிக்கையை வெளியிட வேண்டும்.  கூட்டம் நடத்தப்படும் இடம், நாள், நேரம் மற்றும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள் குறித்து துண்டு பிரசுரங்களை பொது இடங்களில் ஒட்ட வேண்டும். தண்டோரா அடித்து தகவல் சொல்ல வேண்டும். ஒலிப்பெருக்கியில் அறிவிக்க வேண்டும். வார்டு உறுப்பினர்கள் வீடுதோறும் சென்று மக்களை அழைக்க வேண்டும். கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் 72 மணி நேரத்துக்குள்  மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பப்பட வேண்டும். ஆகவே, அனைத்து மக்களும் விழிப்புணர்வோடு கிராம சபையில் கலந்து கொண்டு குடிமக்களின் சனநாயகக் கடமையாற்ற வேண்டும்.

உள்ளாட்சி அதிகாரம்

‘ஊராட்சி’ அதிகாரம் கொண்ட ஓர் அமைப்பு ஆகும். விவசாயம், நீர் நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றலாம்; மரபுசாரா எரிசக்தி ஆதாரங்களை உருவாக்கலாம். கால்நடை வளர்க்கலாம்; பால் பண்ணை, கோழிப் பண்ணை அமைக்கலாம். மின்சாரம், கல்வி நிலையங்கள், சமூகக் காடுகள், பண்ணைக் காடுகளை பராமரிக்கலாம். நூலகம், பெண்களின் மேம்பாடு, முதியோர் கல்வி, மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருந்தகங்கள் அமைக்கலாம். தொழில் வளர்ச்சி, வீட்டு வசதி, பொது விநியோகம், குடிநீர், சாலைகள், சிறு பாலங்கள், நீர்வழிப் பாதைகள், சந்தைகள், கண்காட்சிகள், சமூக சொத்துக்களைப் பராமரிக்கலாம். இப்படி மொத்தம் 29 இனங்களில் சட்டப்பூர்வமான அதிகாரங்களை இந்திய அரசியலமைப்புச் சட்டம் (பட்டியல் 11-பிரிவு 243 ஜி) பஞ்சாயத்துக்களுக்கு அளித்துள்ளது. அரசியல் அமைப்புச் சட்டம் 12 வது இணைப்பு பட்டியலில் 18 அதிகாரங்கள் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நடைபெற உள்ள நகர உள்ளாட்சி தேர்தல்

நகர உள்ளாட்சிக்கு நேரிடையாக தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள்:

மாநகராட்சி மேயர்கள்,

மாநகராட்சி கவுன்சிலர்,

நகராட்சி தலைவர்கள்,

நகராட்சி கவுன்சிலர்கள்,

பேரூராட்சி தலைவர்கள்,

பேரூராட்சி கவுன்சிலர்கள்.

நகர உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. கிறித்துவ மக்கள் இப்போதே செயல்படத் தொடங்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலில் ஊரக பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு கட்சி சின்னம் இல்லை. தனி சின்னம் தான் உண்டு. வெற்றிக்கு மக்கள் சேவையே அடிப்படையாக அமைகிறது. நகர உள்ளாட்சி தேர்தலில் கட்சி பலத்துடன் போட்டியிட வேண்டும். ஆகவே, கிறித்தவர்கள் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு உழைக்க வேண்டும். பண பலம், சாதி பலம் இருந்தாலும் மக்கள் பணியாற்றும் தொண்டர்களுக்கு கட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கும் மக்களும் வாக்களிப்பார்கள். நகர உள்ளாட்சி தேர்தலில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு கிறித்தவர் போட்டியிட்டு வெற்றி காணலாம்.

முடிவுரை

கிறித்தவர்கள் அரசியல் அதிகாரம்: இந்தியாவில் அரசாங்கம் மூன்று அடுக்காக உள்ளது. பாராளுமன்றம், சட்டமன்ற பேரவை மற்றும் உள்ளாட்சி போன்ற மூன்று அடுக்கு அரசு அதிகாரம் பெறும் தேர்தலில் கிறித்தவர்களுக்கு தனி இடஒதுக்கீடு இல்லை. பாண்டிச்சேரி உயர் மறைமாவட்டம், முகையூர் பங்கில் 8 வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவராக கிறித்தவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கிறித்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் ஒற்றுமையோடு செயல்பட்டால் அரசியலில் அதிகாரம் பெறலாம்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50ரூ இட ஒதுக்கீடு உள்ளது. கிறித்தவ பெண்கள் படிப்பறிவு உள்ளவர்களில் பெரும்பான்மையாக உள்ளனர். ஆகவே, பெண்கள் ஒதுக்கீட்டில் போட்டியிட்டு, வெற்றி பெறுவதற்கு பெரும் வாய்ப்பு உண்டு. வெற்றி பெற்ற பெண்கள் கணவர் அல்லது சகோதரர் போன்ற ஆண்கள் வழியாக நிர்வாகம் செய்யாமல். அரசியல் அதிகாரத்தின் வழியாக நல்ல நாட்டுத் தலைவர்களாக உருவாக வேண்டும். ஆகவே, கிறித்தவ பெண்கள் அரசியல் அதிகாரம் பெற உள்ளாட்சி தேர்தல் அறிய வாய்ப்பு ஆகும்.