இறைவனின் நிலமாகவும், கிறிஸ்தவத்தின் தொட்டிலாகவும், மனிதகுலத்தின் மீட்பு வரலாற்றில் தொடர்புடைய புனிதத் தலங்களைக் கொண்டுள்ள இடமாகவும் இருக்கும் புனித பூமியைக் குறித்து மக்கள் மேலும் அறிந்துகொள்ள உழைத்துவரும் கத்தோலிக்க சமூகத்தொடர்பாளர்கள் அனைவருக்கும் தன் நன்றியையும் வாழ்த்தையும் திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டார்.
’புனித பூமி’ என்ற பெயரில் எருசலேமில் இருந்து இயங்கும் பத்திரிகை, தான் துவக்கப்பட்டதன் நூறாமாண்டைச் சிறப்பிப்பதை முன்னிட்டு, அதன் பிரதிநிதிகளை ஜனவரி 17 ஆத் தேதி, திங்கள் காலை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மத்தியக்கிழக்குப் பகுதியில் வாழும் கிறிஸ்தவ சபைகளின் அங்கத்தினர்களோடு மட்டுமல்ல, யூத மற்றும் இஸ்லாம் மத சகோதர்களுடனும் ஓர் உடன்பிறந்த நிலையை உருவாக்க கத்தோலிக்க செய்தியாளர்கள் ஆற்றிவரும் பணிக்குத் தன் பாராட்டுக்களையும் வெளியிட்டார்.
ஆபிரகாமின் பிள்ளைகளாகிய யூதர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடையே உடன்பிறந்த நிலை என்பது இயலக்கூடியதே என்பதை எடுத்துரைப்பவர்களாகவும், வலியுறுத்துபவர்களாகவும், கத்தோலிக்க செய்தியாளர்கள் செயல்படவேண்டும் என்ற அழைப்பையும் திருத்தந்தை பிரான்சிஸ் முன்வைத்தார். புலம்பெயர்ந்தோர், குடியேற்றத்தாரர் ஆகியோரின் மனித மாண்புக்காகவும் உழைத்துவரும் ’புனித பூமி’ பத்திரிகையின் பணியாளர்கள், சிரியா, லெபனான், பாலஸ்தீனம், காசா ஆகிய பகுதிகளில் துன்புறும் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் துயர்நிலைகளை உலகுக்கு எடுத்துரைத்து வருவது குறித்தும் திருத்தந்தை பிரான்சிஸ் தன் பாராட்டுக்களை வெளியிட்டார்.
போரின் தீமைகள், குழந்தை பருவத்தை இழந்து தவிக்கும் சிறார், ஒப்புரவுப்பணிகள், புலப்பெயர்ந்தவர்களின் துயரங்களும் நம்பிக்கைகளும் என பல்வேறு நிலைகளை வெளிஉலகிற்குப் படம்பிடித்து காண்பிக்கும் செய்தியாளர்கள், இறைவன் இவ்வுலக வரலாற்றில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் ஐந்தாவது நற்செய்தியை உலகிற்கு உரைப்பவர்களாக உள்ளார்கள் எனவும், எருசலேமிலிருந்து இயங்கும் ’புனிதபூமி’ பத்திரிகையின் செய்தியாளர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் மேலும் தன் கருத்துக்களை எடுத்துரைத்தார்.