சிரியாவில் சிறுபான்மையினராக வாழும் கிறிஸ்தவர்கள், கடந்த 11 ஆண்டுகால போரின் விளைவாக வன்முறைகள், உயிரிழப்புகள் என முடிவற்ற ஒரு தொடர் பயணத்தை எதிர்கொண்டு வருவதாகவும் பேராயர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்கத் திருஅவையோடு இணக்கமாக வாழும் மாரோனைட் கிறித்தவர்கள் அனைவரும் இந்த இக்கட்டான நிலையிலும், தங்கள் விசுவாச வாழ்வை இழக்கவில்லை என்று தெரிவித்த பேராயர் சமீர் நாசர் அவர்கள், ‘முடிவே இல்லை’ என்று தோன்றும் இந்தப் போராட்டத்தில் கண்ணியத்துடன் வாழ்வதற்கான முயற்சியைத் தொடரும் கிறிஸ்தவர்களுக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
ஹோம்ஸ் கத்தோலிக்க கிரேக்க மெல்கைட் உயர் மறைமாவட்டமும் இந்தப் போரினால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், சிரியாவில் மூன்றாவது அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்நகரம், முற்றிலும் அழிக்கப்பட்டுள்ள நிலையில், இங்குக் கிறிஸ்தவர்கள் யாரும் இல்லை என்றும் எடுத்துரைத்தார் இவ்வுயர் மறைமாவட்டதின் பேராயர் ஜீன் அப்டோ அர்பாக்.
போரினால் சிதறடிக்கப்பட்டுள்ள எல்லா கிறிஸ்தவக் குழுக்களையும் ஒன்றிணைக்கும் நோக்கில், அவர்களைக் குடியமர்த்துவதற்கான புனரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன என்று, பேராயர் ஜீன் அப்டோ அர்பாக் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார். தேவையில் இருக்கும் திருஅவைக்கு உதவும் பாப்பிறையின் பிறரன்பு தொண்டு நிறுவனமும், ஹோம்ஸ் உயர் மறைமாவட்டத்தில் போரினால் சேதமடைந்துள்ள வழிப்பாட்டுத் தலங்களை மீண்டும் கட்டி எழுப்புவதற்கும், வாழ்வுநிலை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வதற்கும், நிதி ஒதுக்கியுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 11 ஆண்டுகால போரின் விளைவாக சிரியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் இடம்பெயர்வு, துன்பம், தடைகள், முற்றுகைகள், அலட்சியம், வேறுபாடுகள், உயிரிழப்புகள் ஆகியவற்றைச் சந்தித்து வருகின்றனர் என்றும், அவர்களது வழிபாட்டுத் தலங்கள் குண்டுவீச்சுக்கு ஆளாகி வெகுவாக சேதப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், நம்பிக்கை இழக்காமல் எஞ்சிய பொருள்களைக்கொண்டு தங்கள் கிறிஸ்தவ வாழ்வை வாழத் தொடங்கியுள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.