Namvazhvu
Editorial  என் எதிரி? என் நண்பன்? என் ஆயுதம்?
Sunday, 31 Mar 2019 06:38 am
Namvazhvu

Namvazhvu

தலையங்கம் 
 என் எதிரி? என் நண்பன்? என் ஆயுதம்?

நான் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை என் எதிரிதான் தீர்மானிக்கிறான் என்பார் புரட்சியாளர் மாவோ. 
காலத்தால் நிலைத்த இந்த அரசியல் தத்துவம் இன்றைய கிறிஸ்தவ வாக்காளப் பெருமக்களுக்கு முற்றிலும் பொருந்தும். இங்கே நான்கு கூறுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலாவதாக எதிரி யார்? எப்படிப்பட்டவர்? தனியொரு ஆளா? அல்லது பலர் சேர்ந்த கூட்டணியா?என்பதை வரையறுக்க வேண்டும்.

இரண்டாவதாக.. நான் வரையறுத்த அந்த எதிரி என்ன ஆயுதத்தைக் கொண்டிருக்கிறார்? அதனைக் கொண்டு என்னை எப்படியெல்லாம் தாக்குவார்? அந்த ஆயுதத்தின் பலம் - பலவீனம் என்ன?  என்பதைக் குறித்து புரிதலும் தெளிவும் வேண்டும்.

மூன்றாவதாக நான் அந்த எதிரியை எதிர்க்க என்னிடம் பலம் இல்லாதபோது எனக்கான நண்பர்களை இணைந்து போராடுவதற்காக நான் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவர்களோடு ஒரு கூட்டணி அமைக்க வேண்டும்.

நான்காவதாக அந்த எதிரியை வீழ்த்துவதற்கு அல்லது அவரைப் பலவீனப்படுத்துவதற்கு உரிய ஆயுதத்தை நான் எடுக்க வேண்டும். அவனைத் தாக்குதவற்கு மட்டுமல்ல.. என்னைத் தற்காத்துக் கொள்வதற்கும் நான் உரிய பாதுகாப்பு கேடயத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.  இந்த நான்கு கூறுகளும் இருந்தால் நான் மதியுடையவன். 

பதினேழாவது  இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் என்பது ஒரு போர்க்களம்.  ஐனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் பன்முகத்தன்மைக்கும் ஒற்றைக் கலாச்சாரத்திற்கும்,   வாய்மைக்கும் - வாய்சவுடாலுக்கும்  பெரியாரிய, அம்பேத்கரியத்திற்கும் இந்த்துத்வாவிற்கும் நிர்வாண விவசாயத்திற்கும் கார்ப்பரேட் கபளிகரத்திற்கும் காந்தியத்திற்கும் காவிக்கும் வாழ்விற்கும் சாவிற்கும் இடையிலான போர். இந்தப் போரில் யார் வெற்றிப்பெறப் போகிறார்கள் என்பதைப் பொருத்துதான் இந்தியாவின் தலையெழுத்து தீர்மானிக்கப்பட போகிறது. எனவே இதில் சிறுபான்மையினரின் எதிர்காலமும் அடங்கும். முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல கிறிஸ்தவர்களுக்கும்  இந்தப் போர்க்களத்தில் எதிரிகள் யார் என்பதில் கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஒரு தெளிவும் புரிதலும் வேண்டும். எதிரிகளை அடையாளப்படுத்துவதில் ஒரு சிறு தவறு நேர்ந்தாலும் அதன் பாதிப்பு மிகவும் அதிகம்.  எதிரிகள் யார்? ஜனநாயகததிற்கு எதிரானவர்கள். ஊழல் பேர்வழிகள். சாதியத்தின் எடுபிடிகள், மதப்பெரும்பான்மை வாதத்தின் அடிவருடிகள்,  ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே இனம் என்று ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணிக்கும் எத்தர்கள், பெண்மைக்கும் பெண்ணுரிமைக்கும் எதிரானவர்கள்,  மல்லையாக்கள். மோடிக்கள், அம்பானிகள். அதானிகளின் கைக்கூலிகள், உரிமைக்குரல் எழுப்புவோரை ஆன்டி இந்தியன் என்று வாயடைப்பவர்கள், போரடினால் துப்பாக்கித் தோட்டாக்களால் கொலை செய்பவர்கள்,  நீதிமன்றம், ஆர்பிஐ, சிபிஐ, போன்ற அரசியல் அமைப்புகளை மை**க்கு சமம் என்று சனாதானம் பேசுபவர்கள், மக்களை சாதி அடிப்படையிலும் மதம் அடிப்படையிலும் பிரித்து வைப்பவர்கள், தன் வீட்டில் இழவு விழுந்தால் அழாமல் அடுத்த வீட்டு இழவுக்கு டிவிட்டரில் மாரடிப்பவர்கள், சமாதியில் சத்தியம் செய்து குலசாமி கோவிலுக்கு கும்பிடு போட்டு வாரிசு அரசியலைத் தூக்கிப் பிடிப்பவர்கள்,  பசுக்களைப் பாதுகாத்து ஆசிஃபாக்களை கோவில் கருவறையில் கற்பழிப்பவர்கள், மூவாயிரம் கோடிக்கு சிலைவைத்து விட்டு முச்சந்தியில் ஒரு கழிப்பறை கட்டாதவர்கள், குல்லா அணிந்தவனும் சிலுவை அணிந்தவனும் அந்நியர்கள் அடாவடி செய்பவர்கள்,  கார்ப்பரேட் சாமியார்களின்  மடியில் மல்லாந்து கிடப்பவர்கள், சிறுபான்மையினர் போட்டியிட சீட் தராதர்கள் .. இவர்கள் தான் நம்முடைய எதிரிகள்.  இந்த எதிரிகளை நாம் அடையாளம் காண வேண்டும். சுருக்கமாக,  ஊழல் பேர்வழிகளும் சாதியப் பெருச்சாளிகளும் சமய சந்தர்ப்பவாதிகளும்தான் நம் எதிரிகள்.  இவர்கள் கொள்கைக்காக சேர்ந்தவர்கள் அல்ல. கொள்ளையடிப்பதற்காகச் சேர்ந்தவர்கள். நேற்றுவரை குற்றஞ்சாட்டி பொம்மையிடம் பட்டியல் வாசித்தவர்கள், டயர் நக்கிகள், ஊழல் பேர்வழிகள் என்று சோதனைப் போட்டவர்கள் கண்மூடி திறப்பதற்குள் கரம் கோர்த்திருக்கிறார்கள்.  கொள்ளைப் புறமாக என் படுக்கையறைக்குள் புகுந்திட புது வேஷம் போட்டிருக்கிறார்கள். நம் நண்பர்களிடம் பிணக்குகள் இருந்தால் பஞ்சாயத்து வைத்து சரி செய்து கொள்ளலாம். செய்த துரோகத்திற்கு பரிகாரம் கேட்கலாம். எதிரிகளைப் பொருத்தவரை நம்முடைய இருத்தலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

இரண்டாவதாக. எதிரி வைத்திருக்கிற ஆயுதம் என்ன? என்பதையும் கவனிக்க வேண்டும். இந்துத்துவம். பார்ப்பனிய திராவிடம், சாதியத் தலைவர்களையும் கட்சிகளையும் ஒருங்கிணைத்து  அரசியல் செய்வது, மதப் பெரும்பான்மைவாதம், இந்திய அரசியல் சட்டத்தையும் அமைப்பு முறைகளையும் நீர்த்துப் போகச் செய்வது, ஒற்றைவாதம், பாசிசம், பூநூலியம் இவைகள்தான் அவர்களின் ஆயுதங்கள். எனவே இவ்வளவு வலிமையான ஆயுதங்களை வைத்திருக்கிற எதிரிகளோடு நான் பேராட வேண்டுமெனில் தனியொருவனாக சிறுபான்மையாக என்னால் போராட இயலாது. 


எனவே மூன்றாவதாக நான் எனக்கான நண்பர்களை, என்னை ஏற்றுக்கொள்பவர்களை, என்னை மதிப்பவர்களை, எனது வேண்டுகோளுக்கு செவிமடுப்பவர்களை நான் என்னோடு சேர்த்துக்கொள்ள வேண்டும்.  அவர்கள் பன்மைவாதத்தை நேசிப்பவர்களாக. இந்திய இறையாண்மையைத் தாங்குபவர்களாக. அம்பேத்கரின் இந்திய அரசியல் சட்டத்தைப் பாதுகாப்பவர்களாக, மதச் சார்பின்மையின் பாதுகாவலர்களாக, பசுக்களை மட்டுமல்ல பெண்ணியத்தைப் போற்றுபவர்களாக. பெரியாரியத்தையும் அம்பேத்கரியத்தையும் போற்றுபவர்களாக, ஆல் ஆர் இன்டியன்ஸ் என்று பன்மைவாதத்தை மதிப்பவர்களாக இருக்க வேண்டும்.  அந்த எதிரியை வீழ்த்த நான் இவர்களை நண்பர்களாக்கி கொண்டேயாக வேண்டும்.  


நான்காவதாக நான் எனக்கான ஆயுதத்தை எடுக்க வேண்டும். மீனுக்கு வாலையும் பாம்புக்கும் தலையையும் காட்டுவதல்ல.  மீனுக்கு தலையைக் காட்டி பாம்புக்கு வாலைக் காட்டி நான் தனித்துவமிக்கவன் என்பதை நிருபிக்க வேண்டும். நான் எதிரிiயும் தாக்க வேண்டும். என்னையும் தற்காத்து கொள்ளவேண்டும். இது என் வாழ்வுக்கும் என் சாவுக்குமான போராட்டம். எனவே மதச்சார்பின்மையை ஆதரிக்க வேண்டும் என்ற தமிழகத் திருஅவையின் நிலைப்பாடு தகுதியும் நீதியும் ஆனதே.  அதே சமயம் பாதுகாப்பு கேடயங்களாக கிறிஸ்தவ சிறுபான்மையினர் சார்பாக ஆயர் பெரும்கள் மூன்று கோரிக்கைகளை வைத்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் பதினெட்டு இந்தியாவின் எதிர்காலத்தையும் எனது பாதுகாப்பையும் நிர்ணயிக்க நான் போடும் ஓட்டைப் பொறுத்தது. முழு மனச் சுதந்திரத்தோடு ஆழ்ந்து சிந்தித்து வாக்களிப்போம். வாக்கு மனுவுருவானார் நம்மை மீட்பதற்கு. நம் வாக்கை மீள்உருவாக்கம் செய்வோம் நம் இந்தியாவைக் காப்பதற்கு.


வாக்கை விற்காமல் நம் செல்வாக்கை நிருபிப்போம். ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மயையும் இந்தியப் பன்முகத்தன்மையையும் காப்போம்.